Monday, June 29, 2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முந்தைய நாள் எண்ணிக்கையை மிஞ்சும் வகையில், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி, தமிழகத்தில் கடந்த 25ம் தேதி ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து 26ம் தேதி 3,645 பேருக்கும், நேற்று முன் தினம் 3,713 பேருக்கும், நேற்று 3940 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதனால், நேற்று பாதிப்பு எண்ணிக்கை 82,275 ஆக உயர்ந்திருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளதாக, தமிழக சுகாதார துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 1,079ல் இருந்து 1,141 ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. கொரொனா தொற்றில் இருந்து இன்று 2,212 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 2,167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கொரோனாவை ஒழித்து விட்டு சாதனைப்பட்டத்தைச் சூட்டிக்கொள்ளுங்கள் - மு.க.ஸ்டாலின் அறிக்கை

கொரோனாவை ஒழித்துவிட்டு அதற்கான சாதனைப் பட்டத்தைச் சூட்டிக்கொள்ளுங்கள் என்றும், கொரோனேவே ஒழியாத நிலையில், ஒழித்துவிட்டதாகப் பொய்யான மகுடம் சூட்டிக்கொள்ளாதீர்கள் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய்ப் பரவலில் இருந்து உங்களை (மக்களை) நீங்களே தற்காத்துக் கொள்ள எச்சரிக்கையாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால், இந்நோய்த் தொற்று முதலில் சில மாவட்டங்களில் தான் அதிகமாக இருந்தது. அதன்பிறகு தலைநகர் சென்னையில் அதிகமானது. இப்போது மறுபடியும் மற்ற மாவட்டங்களில் அதிகமாகி வருகிறது. அதனால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!