Wednesday, July 29, 2020

50 கி.மீ வேகத்தில் சூறாவளி... திருவள்ளூர், வேலூர் உள்பட 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

பதிவு: ஜூலை 28,  2020 03:20 PM

சென்னை,

திருவள்ளூர், வேலூர் உள்பட 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை(30.07.2020) வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செய்யூர், தலைஞாயர், திருப்பூண்டி பகுதிகளில் தலா 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல், தாமரைப்பாக்கம், கொளப்பாக்கம் பகுதிகளில் தலா 9 செ.மீ மழையும், தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம், ஆத்தூர், தேவலா பகுதிகளில் தலா 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல், அம்பத்தூர், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டிபகுதிகளில் தலா 7 செ.மீ, காரைக்கால், தர்மபுரி, தம்மம்பட்டி, ஜெயங்கொண்டம் பகுதிகளில் தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.