Monday, November 17, 2025

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவ 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையங்கள்

 


பதிவு: திங்கள்கிழமை,   நவம்பர் 17, 2025, கார்த்திகை 01,  விசுவாவசு வருடம் 03-30: PM

சென்னை,

தகவல் மையங்கள் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு அய்யப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“சபரிமலை ஸ்ரீதர்ம சாஸ்தா (அய்யப்பன்) திருக்கோவிலில் மண்டல பூஜை 17.11.2025 முதல் 27.12.2025 வரையும், மகரவிளக்கு ஜோதி திருவிழா 30.12.2025 முதல் 19.01.2026 வரையும் நடைபெறுவதை முன்னிட்டு சபரிமலை பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு அய்யப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்திலும், மாநில எல்லையான களியக்காவிளையிலும், கேரள மாநிலம்-சபரிமலையிலும் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகவல் மையங்கள் 20.01.2026 வரை செயல்படும்.

சென்னை ஆணையர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தினை 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், களியக்காவிளை தகவல் மையத்தினை 94880 73779, 94862 70443, 94428 72911 ஆகிய எண்களிலும், சபரிமலையில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தினை கீழ்க்காணும் அலுவலர்களின் கைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

சபரிமலை தகவல் மையம்:

17.11.2025 முதல் 02.12.2025 வரை

வி. சிவக்குமார் - 94439 94342, ஆர். பிரேம்குமார் - 63858 06900, சி. சந்தீப்குமார் - 85310 70571

03.12.2025 முதல் 17.12.2025 வரை

எம்.சேர்மராஜா- 83440 21828, எல்.லால்கிருஷ்ணன்- 70949 06442, எஸ்.சதீஷ்குமார்- 75588 39969

18.12.2025 முதல் 02.01.2026 வரை

எம்.சுந்தர் - 89219 37043, ஆர்.சிவசங்கர் - 90806 50431, கே.சஜ்ஜீவன் - 99405 76898

03.01.2026 முதல் 20.01.2026 வரை

எச்.வெங்கடேஷ் - 98433 70229, சுதாகர் - 99425 05466, வி.ரமேஷ் - 84384 44770

இத்தகவல் மையங்களின் சேவையினை தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

 


பதிவு: திங்கள்கிழமை,   நவம்பர் 17, 2025, கார்த்திகை 01,  விசுவாவசு வருடம் 03-00: PM

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வேகமெடுத்து வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறவிப்பு மற்றும் எச்சரிக்கை:

நேற்று (16-11-2025) இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (17-11-2025) காலை 08.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும்.

வருகின்ற 22-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும்.

17-11-2025

கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

18-11-2025

தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

19-11-2025

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

20-11-2025

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

21-11-2025

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

22-11-2025

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

23-11-2025

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு

சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை/ மிக கன மழை, பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (18-11-2025)

வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை - தமிழக கடலோரப்பகுதிகள்

17-11-2025

தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

18-11-2025

தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Sabarimala Ayyappa devotees begin their viratham (fasting and austerity)...

மகரவிளக்கு பூஜை - பக்தர்களின் சரண கோஷம் முழங்க சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

 


பதிவு: திங்கள்கிழமை,   நவம்பர் 17, 2025, கார்த்திகை 01,  விசுவாவசு வருடம் 05-50: AM

திருவனந்தபுரம்,

நடப்பாண்டின் மண்டல பூஜை வரும் டிசம்பர் 27-ந்தேதி நடைபெற உள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்காக வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் தேவசம்போர்டு வாரியம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இந்நிலையில், நடப்பு மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 16-ந்தேதி(நேற்று), பக்தர்களின் சரண கோஷம் முழங்க மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அப்போது சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள், தந்திரி முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்றனர்.

தொடர்ந்து இன்று(17-ந்தேதி) முதல் புதிய மேல்சாந்திகள் நடையை திறந்து பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நிறைவேற்றுவார்கள்.

நடப்பாண்டின் மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி நடக்கிறது. அன்று இரவு நடை சாத்தப்பட்டு மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக 30-ந்தேதி நடை திறக்கப்படும். நடப்பு சீசனின் மகரவிளக்கு பூஜை அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் 14-ந்தேதி நடைபெறும். தொடர்ந்து 20-ந்தேதி பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்திற்கு பின் கோவில் நடை அடைக்கப்படும்.

பின்னர் மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை பிப்ரவரி மாதம் 12-ந் தேதி திறக்கப்பட்டு 17-ந்தேதி அடைக்கப்படும். பங்குனி மாத பூஜைக்காக மார்ச் மாதம் 14-ந் தேதி திறக்கப்பட்டு 19-ந்தேதி அடைக்கப்படும். நடப்பாண்டு சபரிலை மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் தினமும் 90 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க தேவசம்போர்டு முடிவு செய்யதுள்ளது.

சபரிமலையில் தினமும் 90,000 பக்தர்கள் வரை அனுமதிக்கப்பட உள்ளனர். இதில் 70 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் புக்கிங் மூலமாகவும், 20 ஆயிரம் பக்தர்கள் ஸ்பாட் புக்கிங் மூலமாகவும் அனுமதிக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

10-வது முறையாக பிஹார் முதல்வராகிறார் நிதிஷ்குமார் - நவம்பர் 19-ல் பதவியேற்பு விழா

 


பதிவு: திங்கள்கிழமை,   நவம்பர் 17, 2025, கார்த்திகை 01,  விசுவாவசு வருடம் 04-50: AM

பாட்னா,

மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நித்யானந்த ராய் பாட்னாவில் நேற்று முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்துப் பேசினார். அப்போது பிஹாரில் புதிய அரசு அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.

பிஹாரில் வரும் 19-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) அரசு பதவி​யேற்​கிறது. நிதிஷ் குமார் 10-வது முறை​யாக மீண்​டும் முதல்​வ​ராக பதவி​யேற்​பார் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக தலை​மையி​லான ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி 202 இடங்​களை கைப்​பற்றி அமோக வெற்றி பெற்​றிருக்​கிறது. ஆர்​ஜேடி, காங்​கிரஸ் அடங்​கிய மெகா கூட்​ட​ணிக்கு 35 இடங்​கள் மட்​டுமே கிடைத்​துள்​ளன. இதையடுத்து பிஹாரில் புதிய அரசு அமைப்​பது தொடர்​பாக பாஜக மற்​றும் ஐக்​கிய ஜனதா தள தலை​வர்​கள் தீவிர ஆலோ​சனை நடத்தி வரு​கின்​றனர். பிஹார் முதல்​வரும் ஐக்​கிய ஜனதா தள தலை​வரு​மான நிதிஷ் குமார் பாட்​னா​வில் நேற்று கட்​சி​யின் மூத்த தலை​வர்​களு​டன் ஆலோ​சனை நடத்​தினார்.

காலை​யில் தொடங்​கிய இந்த ஆலோ​சனைக் கூட்​டம் பிற்​பகல் வரை நீடித்​தது. இதன்​பிறகு மத்​திய அமைச்​சர் நித்​யானந்த ராய், பாஜக மூத்த தலை​வர்​கள் நிதின் நவீன், கிருஷ்ண குமார் உள்​ளிட்​டோர் முதல்​வர் நிதிஷ் குமாரை சந்​தித்து விரி​வான ஆலோ​சனை நடத்​தினர். இதர கூட்​டணி கட்​சிகளின் தலை​வர்​களும் அவரை சந்​தித்​துப்பேசினர்.

இன்று ஆளுநருடன் சந்​திப்பு

புதி​தாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட ஐக்​கிய ஜனதா தள எம்​எல்​ஏ.க்​களின் கூட்​டம் பாட்​னா​வில் இன்று நடை​பெறுகிறது. இந்த கூட்​டத்​தில் ஐக்​கிய ஜனதா தள சட்​டப்​பேர​வைத் தலை​வ​ராக நிதிஷ் குமார் தேர்வு செய்​யப்பட உள்​ளார். அதன் ​பிறகு ஆளுநர் ஆரிப் முகமது கானை அவர் சந்​தித்து ராஜி​னாமா கடிதத்தை அளிக்க உள்​ளார். அப்​போது புதி​தாக ஆட்​சி​யமைக்​க​வும் அவர் உரிமை கோரு​வார். வரும் 19-ம் தேதி பிஹாரில் என்​டிஏ அரசு பதவி​யேற்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி மற்றும் பாஜக ஆளும் மாநிலங்​களின் முதல்​வர்​கள் பங்​கேற்க உள்ளனர்.

மத்​திய அமைச்​சர் சிராக் பாஸ்​வான் பாட்​னாவில் நேற்று நிருபர்​களிடம் கூறும்போது, “பிஹாரில் அடுத்த சில நாட்​களில் புதிய அரசு பதவி​யேற்​கும். அமைச்​சர்​கள் யார் என்​பது நவம்​பர் 17-ம் தேதிக்​குள் இறுதி செய்​யப்​படும். இதுதொடர்​பாக பாஜக மூத்த தலை​வர்​ களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறேன்" என்று தெரி​வித்​தார்.

இதுதொடர்​பாக பிஹார் அரசி​யல் வட்​டாரங்​கள் கூறிய​தாவது: வரும் 19 அல்​லது 20-ம் தேதி பாட்​னா​வில் உள்ள காந்தி மைதானத்​தில் தேசிய ஜனநாயக கூட்​டணி அரசு பதவி​யேற்பு விழா நடை​பெறும். அப்​போது பிஹார் முதல்​வ​ராக நிதிஷ் குமார் 10-வது முறை​யாக பதவி​யேற்​பார். இதில் எந்த மாற்​ற​மும் இல்​லை. பிஹார் தேர்​தலில் பாஜக 89, ஐக்​கிய ஜனதாதளம் 85, லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்) கட்சி 19, இந்​துஸ்​தானி அவாம் மோர்ச்சா 5, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 4 இடங்​களில் வெற்றி பெற்​றுள்​ளன. பிஹார் சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களின் எண்​ணிக்​கை​யின் அடிப்​படை​யில் 36 பேரை அமைச்​சர்​களாக நியமிக்க முடி​யும்.

புதிய அமைச்​சர்​கள் நியமனம் தொடர்​பாக ஐக்​கிய ஜனதா தளத்​தின் மூத்த தலை​வர்​கள் லல்​லன்சிங், சஞ்​சய் ஜா ஆகியோர் டெல்​லி​யில் முகாமிட்டு உள்​ளனர். பாஜக மூத்த தலை​வர்​கள் அமித் ஷா, தர்​மேந்​திர பிர​தான், வினோத் தாவ்டே உள்​ளிட்​டோரை அவர்​கள் சந்​தித்து முக்​கிய ஆலோ​சனை நடத்தி வரு​கின்​றனர். இதில் புதிய அமைச்​சர்​களின் பெயர்​கள் இறுதி செய்​யப்பட உள்​ளது.

கடந்த 2023-ம் ஆண்​டில் மத்​திய பிரதேசத்​தில் பாஜக​வின் புதிய அரசு பதவி​யேற்​றது. அப்​போது 17 புதி​ய​வர்​கள் அமைச்​சர்​களாக நியமிக்​கப்​பட்​டனர். அதே ஆண்​டில் மத்​திய பிரதேசத்​தில் பாஜக அரசு பதவி​யேற்​றது. அப்​போது 22 புதி​ய​வர்​களுக்கு அமைச்​சர் பதவி வழங்​கப்​பட்​டது. இதே பாணியை பின்​பற்றி பிஹாரிலும் பாஜக சார்​பில் புதி​ய​வர்​களுக்கு அமைச்​சர் பத​வி வழங்​கப்​பட வாய்ப்​பு இருக்​கிறது.இவ்​வாறு பிஹார்​ அரசி​யல்​ வட்​டாரங்​கள்​ தெரிவித்​துள்​ளன.

பாஜகவில் 16 அமைச்சர்கள்

தேசிய ஜனநாயக கூட்டணியில் 6 எம்எல்ஏ.க்களுக்கு ஓர் அமைச்சர் என்ற வகையில் அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதன்படி பாஜகவை சேர்ந்த 16 பேரும் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 14 பேரும் அமைச்சர்களாக பதவியேற்பார்கள். ராஷ்டிரிய லோக் ஜன சக்தி (ராம்விலாஸ்) கட்சிக்கு 3 அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாம். சிறிய கட்சிகளுக்கு தலா ஓர் அமைச்சர் பதவி அளிக்கப்படும்.

பாஜக மூத்த தலைவர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் தற்போது துணை முதல்வர்களாக உள்ளனர். இதில் சாம்ராட் சவுத்ரி மீண்டும் துணை முதல்வராக பதவியேற்கக் கூடும்.

விஜய் குமார் சின்ஹாவுக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படலாம். பாஜக மூத்த தலைவர்கள் ராம்கிருபாள் யாதவ், மங்கள் பாண்டே, ரஜ்னீஷ் குமார் ஆகியோரில் ஒருவருக்கு புதிதாக துணை முதல்வர் பதவி வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது. மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்) கட்சியின் சார்பிலும் துணை முதல்வர் பதவி கோரப்படுவதாகத் தெரிகிறது.

Featured post

கரூர் நெரிசல் வழக்கில் தவறு நடக்கிறது - பதில் கேட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு - விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம்

பதிவு:  சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025, கார்த்திகை 27,  விசுவாவசு வருடம் 01-40: AM புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்...