Tuesday, November 25, 2025

கோவையில் ரூ.208 கோடியில் செம்மொழி பூங்கா - மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

 

பதிவு:  செவ்வாய்க்கிழமை,  நவம்பர் 25, 2025, கார்த்திகை 09,  விசுவாவசு வருடம் 08-00: AM

கோவை,

கோவையில் தொழில்முனைவோர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடுகிறார்.

கோவையில் கடந்த 2010-ம் ஆண்டு நடந்த உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி கோவை காந்திபுரம் மத்திய சிறை வளாகத்தில் 165 ஏக்கரில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

2011-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. 2021-ம் ஆண்டு தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் செம்மொழி பூங்கா திட்டத்துக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டது.

முதல்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208½ கோடியில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டது. இந்த பணிகளை கடந்த 2023-ம் ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தற்போது அந்த பணிகள் நிறைவடைந்து உள்ளன.

இதைத்தொடர்ந்து கோவை மக்களின் பொழுதுபோக்கு தலமாக விளங்க உள்ள செம்மொழி பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கிறார். இதற்காக அவர் இன்று காலை 10.05 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்டு 11.15 மணிக்கு கோவை விமான நிலையத்துக்கு வருகிறார்.

கோவை விமான நிலையத்துக்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

வரவேற்பு முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் 11.45 மணிக்கு காந்திபுரம் வருகிறார். பின்னர் செம்மொழி பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து செம்மொழி பூங்காவில் அமைக்கப்பட்டு உள்ள செம்மொழி வனம், மூலிகை தோட்டம், புதிர்தோட்டம், ஆரோக்கிய வனம், நீர்வனம், பாறை வனம், பூஞ்சோலை, மலைக்குன்று உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அவர் பார்வையிடுகிறார். பின்னர் அங்கு உள்ள நீர்வீழ்ச்சி அரங்கில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளையும் கண்டுரசிக்கிறார்.

பின்னர் செம்மொழி பூங்காவில் உள்ள ஆடிட்டோரியத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் கோவையை சேர்ந்த தொழில் அதிபர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் என முக்கிய பிரமுகர்கள் 150 பேருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார். 

இதனை முடித்துவிட்டு அவர், காரில் புறப்பட்டு மதியம் 1 மணிக்கு கோவை-அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

இதைத்தொடர்ந்து மாலை 5 மணியளவில் அங்கு தமிழ்நாடு தொழில்துறை சார்பில் டி.என்.ரைசிங் என்ற நிகழ்ச்சி நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். 

அப்போது அவரது முன்னிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட உள்ளது. முதல்-அமைச்சர் கோவை வருகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

அயோத்தி ராமர் கோவிலில் இன்று காவிக்கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி

 

பதிவு:  செவ்வாய்க்கிழமை,  நவம்பர் 25, 2025, கார்த்திகை 09,  விசுவாவசு வருடம் 07-30: AM

அயோத்தி,

ராமர் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை குறிக்கும்வகையில் காவிக்கொடி ஏற்றி பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

பிரதமர் மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரபிரதேச மாநிலம் அயோத்திக்கு செல்கிறார். அங்கு ராமர் கோவில் கோபுரத்தில் காவிக்கொடி ஏற்றி வைக்கிறார். ராமர் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை குறிக்கும்வகையில் காவிக்கொடி ஏற்றி உரையாற்றுகிறார்.

10 அடி உயரமும், 20 அடி நீளமும் கொண்ட முக்கோண வடிவ கொடியில், ராமரின் வீரத்தையும், அறிவுக்கூர்மையையும் சித்தரிக்கும்வகையில் சூரியன் படமும், ஓம் என்ற எழுத்தும் பொறிக்கப்பட்டு இருக்கும்.

அயோத்தியில் தங்கி இருக்கும்போது, வால்மீகி, விசுவாத்திரர் உள்ளிட்டோருக்கு சன்னதி அமைந்துள்ள சப்த மந்திர் மற்றும் சேஷாவதார் மந்திருக்கு சென்று பிரதமர் மோடி தரிசனம் செய்கிறார். மாதா அன்னபூர்ணா கோவிலுக்கும் செல்கிறார்.

பிரதமரின் வருகையையொட்டி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று அயோத்திக்கு சென்று விழா ஏற்பாடுகளை பார்வையிட்டார். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், 

“பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 25ம் தேதி (இன்று) உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜன்மபூமி கோவிலுக்குச் செல்கிறார். காலை 10 மணியளவில், அங்கு மஹரிஷி வசிஷ்டர், மஹரிஷி விஸ்வாமித்திரர், மஹரிஷி அகத்தியர், மஹரிஷி வால்மீகி, தேவி அஹில்யா, நிஷாத்ராஜ் குகன், அன்னை சபரி ஆகியோருக்காக கட்டப்பட்டுள்ள ஏழு கோவில்களுக்கு சென்று பிரதமர் தரிசனம் செய்கிறார்.

இதைத் தொடர்ந்து, அவர் சேஷாவதார் கோவிலுக்கு செல்கிறார்.

காலை 11 மணியளவில், பிரதமர் அன்னை அன்னபூர்ணா தேவி கோவிலுக்குச் செல்கிறார். இதனையடுத்து, அவர் ராம் தர்பார் கர்ப்பக் கிரஹத்தில் தரிசனம் செய்து, பூஜையில் ஈடுபடுகிறார். அதனைத் தொடர்ந்து, குழந்தை ராமர் கர்ப்பக் கிரஹத்தில் அவர் தரிசனம் செய்கிறார்.

நண்பகல் 12 மணியளவில், அயோத்தியில் உள்ள புனிதமான ஸ்ரீ ராம ஜன்மபூமி கோவிலின் சிகரத்தில் பிரதமர் மோடி, சம்பிரதாய ரீதியாக காவிக் கொடியை ஏற்றி வைக்கிறார். இது கோயிலின் கட்டுமானம் நிறைவடைவதையும், கலாச்சார கொண்டாட்டம் மற்றும் தேசிய ஒற்றுமையின் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதையும் குறிப்பதாக அமையும்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தருணத்தில் பிரதமர் அங்கு கூடியிருக்கும் மக்களிடையே உரையாற்றுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னாள் எம்எல்ஏ, சுதர்சனம் சுட்டு கொல்லப்பட்ட வழக்கு - பவாரியா கொள்ளையர் மூவருக்கு ஆயுள் தண்டனை

 

பதிவு:  செவ்வாய்க்கிழமை,  நவம்பர் 25, 2025, கார்த்திகை 09,  விசுவாவசு வருடம் 07-00: AM

சென்னை,

அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சுதர்சனம் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், பவாரியா கொள்ளையர் மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கே.சுதர்சனம். இவர், பெரியபாளையம் அருகே உள்ள தானாகுளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

ஆயுதங்களால் தாக்குதல் கடந்த 2005 ஜனவரி 9ல், தன் குடும்பத்தினருடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, வடமாநிலத்தை சே ர்ந்த ஆறு பேர் கும்பல், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, சுதர்சனத்தின் மகன்களான விஜயகுமார் மற்றும் சதீஷ்குமாரை ஆயுதங்களால் தாக்கியது.

வீட்டின் மாடியில் துாங்கிக் கொண்டிருந்த சுதர்சனம், சத்தம் கேட்டு கீழே வந்தார். அப்போது, அந்த கும்பல் அவரை துப்பாக்கியால் சுட்டதில், சுதர்சனம் உயிரிழந்தார்.

பின், அந்த கும்பல் சுதர்சனம் வீட்டில் இருந்த 62 சவரன் நகை, பணத்தை கொள்ளையடித்து தப்பிச்செல்ல முயன்றது. அதற்குள் அங்கு கூடிய அப்பகுதி மக்கள், கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர்.

ஆனால், பொது மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி அந்த கும்பல் தப்பியோடியது.

கொள்ளையர்களை பிடிக்க, அப்போதைய ஐ.ஜி., ஜாங்கிட் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ் மற்றும் ராகேஷ், ராஜஸ்தானை சேர்ந்த அசோக், பஞ்சாபை சேர்ந்த ஜெயில்தர் சிங் மற்றும் மூன்று பெண்கள் உள்பட 32 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்; அவர்களில், ஒன்பது பேரை கைது செய்தனர்.

இவர்களில் சிறையில் இருந்த ஓம்பிரகாஷ் உள்பட இருவர் இறந்தனர். ஜாமினில் வெளியே வந்த மூன்று பெண்கள் தலைமறைவாகினர். அந்த பெண்கள் உள்பட, 10க்கும் மேற்பட்டோர் தற்போது வரை தலைமறைவாகவே உள்ளனர்.

இதைத்தொடர்ந்து, மற்ற நான்கு பேர் மீதான வழக்கு விசாரணை, சென்னை 15வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

20 ஆண்டு வழக்கு இந்த வழக்கில், 50-க்கும் மேற்பட்டோர் சாட்சியம் அளித்தனர். 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த வழக்கில், போலீசார் தரப்பில் கூ டுதல் அரசு வழக்கறிஞர் ஜி.சீனிவா சன் ஆஜரானார்.

குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு, வழக்கறிஞர் சிவாஜி ஆகியோர் வாதாடினர்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளி என, நீதி பதி எல்.ஆபிரகாம் லிங்கன் கடந்த 21ல் அறிவித்தார்.

இதையடுத்து, நேற்று மாலை அவர்களுக்கான தண்டனை விபரங்களை, நீதிபதி அறிவித்தார்.

கூட்டுக்கொள்ளை, கொலை மற்றும் பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தியது, குற்றத்திற்கு துாண்டியது போன்ற குற்றச் சாட்டுகளின் கீழ், குற்றவாளிகள் ஜெகதீஷ், அசோக் ஆகியோருக்கு, த லா நான்கு ஆயுள் தண்டனையும், தலா, 40,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

மற்றொரு குற்றவாளியான ராகேஷுக்கு, கூட்டுக்கொள்ளை, கொலை மற்றும் பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தியது, ஆயுத சட்டம் போன்ற குற்றச்சாட்டின் கீழ், ஐந்து ஆயுள் தண்டனையும், 50,000 ரூ பாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயில்தர் சிங் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதால், அவரை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

ஒவ்வொரு குற்றச்சாட்டின் கீழும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, ஒன்றன் பின் ஒன்றாக, குற்றவாளிகள் மூவரும் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

எஸ்ஐஆர் - வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டால்..? - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

 

பதிவு:  செவ்வாய்க்கிழமை,  நவம்பர் 25, 2025, கார்த்திகை 09,  விசுவாவசு வருடம் 06-40: AM

சென்னை,

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டால், அதற்கான காரணம் தொடர்புடைய வாக்குச்சாவடியில் ஒட்டப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி (CEO) அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். மேலும், பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 4-ம் தேதிக்கு பிறகு அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்ற வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்த பணி (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் 68,470 பிஎல்ஓக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட 83,256 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அரசியல் கட்சிகள் சார்பில் பிஎல்ஏக்கள் 2,45,340 பேர் நியமிக்கப்பட்டு, எஸ்ஐஆர் பணிக்கு உதவி வருகின்றனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இவ்வளவு பிஎல்ஏக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 33,000 தன்னார்வலர்கள் உதவி செய்து வருகின்றனர்.

இதுவரை 6.16 கோடி படிவங்கள் (96 சதவீதம்) வாக்காளர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. இதில் 50 சதவீத படிவங்கள், பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டுள்ளன. அதில் 2.59 கோடி படிவங்கள் (40%) கணினியில் பதிவேற்றப்பட்டுள்ளன.

327 பிஎல்ஓக்கள் தங்கள் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்துள்ளனர். சென்னையில் 96 சதவீத படிவங்கள் கொடுக்கப்பட்டு, 50 சதவீத படிவங்கள் திரும்ப பெற்று, 30 சதவீத வடிவங்கள் கணினியில் ஏற்றப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஏற்கெனவே வாக்காளர்களாக இருப்பவர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.

வாக்காளர்கள் தங்களால் முடிந்த விவரங்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம். மீதம் உள்ளவற்றை பூர்த்தி செய்ய பிஎல்ஓக்கள், தன்னார்வலர்கள் உதவுவார்கள். பிஎல்ஓக்களுக்கு அதற்கான செயலிகள் வழங்கப்பட்டுள்ளன.

உரிய விவரங்கள் இல்லை என படிவத்தை கொடுக்காமல் இருந்து விடக்கூடாது. உரிய காரணமின்றி தகுதியான வாக்காளர்கள் ஒருவரின் பெயரும் பட்டியலில் இருந்து நீக்கப்படாது. வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டால், அதற்கான சரியான காரணம், அந்தந்த வாக்குச்சாவடிகளில் ஒட்டப்படும். தேர்தல் ஆணைய இணையதளத்திலும் வெளியிடப்படும்.

இறப்பு, வீடுகளில் இல்லாதவர்கள், நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடியேறியவர்கள், இரட்டை வாக்குரிமை வைத்திருப்பவர்கள், படிவத்தை பெற்றுச் செல்லாதவர்கள் அல்லது பூர்த்தி செய்து திருப்பி தராதவர்கள் ஆகிய 5 காரணங்களில் ஏதேனும் ஒரு காரணம் இருந்தால் மட்டுமே பெயரை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று தெளிவான அறிவுறுத்தல்கள் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 4-ம் தேதி வரை மட்டுமே பூர்த்தி செய்த படிவங்களை பெற அவகாசம் வழங்கப்படும். அதன்பிறகு அவகாசம் நீட்டிக்கப்படாது.

ஒரே தொகுதிக்குள் இருந்தால் படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து கொடுக்கலாம். வேறு தொகுதியில் குடியேறி இருந்தால், அவர்கள் முகவரி மாற்றுவதற்காக படிவம் 8-ஐ தான் கொடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

தமிழகம் நோக்கி நகரும் காற்று சுழற்சி - நவம்பர் 27-ல் 'சென்யார்' புயல் உருவாக வாய்ப்பு

 

பதிவு:  செவ்வாய்க்கிழமை,  நவம்பர் 25, 2025, கார்த்திகை 09,  விசுவாவசு வருடம் 06-30: AM

சென்னை,

அந்தமான் பகுதியில் இருந்து தமிழகம் நோக்கி நகரும் காற்று சுழற்சி 27-ம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் 30-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா கூறியதாவது: மலாக்கா ஜலசந்தி மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மலேசியா மற்றும் அதை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவுகிறது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று (நவம்பர் 25) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

இது மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.

குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நவம்பர் 25) குமரிக்கடல், இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இதுதவிர, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த 3 சுழற்சிகளும் ஒன்றாக இணைந்து நகர வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் 30-ம் தேதி வரை கனமழை நீடிக்கும். குறிப்பாக, நவம்பர் 25 (இன்று) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், 26, 27-ம் தேதிகளில் தூத்துக்குடி,ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.

28-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

29-ம் தேதி மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

30-ம் தேதி திருவள்ளூரில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், புதுச்சேரியில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 35-55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

23 செ.மீ. மழை கொட்டியது

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 23 செ.மீ., நாலுமுக்கில் 22 செ.மீ., காக்காச்சி, கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் 21 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் 19 செ.மீ., கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, சிதம்பரம், புவனகிரி, நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை, தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Featured post

கரூர் நெரிசல் வழக்கில் தவறு நடக்கிறது - பதில் கேட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு - விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம்

பதிவு:  சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025, கார்த்திகை 27,  விசுவாவசு வருடம் 01-40: AM புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்...