Saturday, November 22, 2025

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

 

பதிவு: சனிக்கிழமை,  நவம்பர் 22, 2025, கார்த்திகை 06,  விசுவாவசு வருடம் 04-15: PM

சென்னை,

அந்தமான் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை;

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.

இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும்.

22-11-2025

தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

23-11-2025

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

24-11-2025

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

25-11-2025

தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

26 முதல் 28-ந்தேதி வரை

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை - 22-11-2025 முதல் 24-11-2025 வரை

தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

துபாய் கண்காட்சியின் போது ‘தேஜஸ்’ விமானம் தீப்பிடித்து விபத்து - பைலட் உயிரிழப்பு - நடந்தது என்ன?

 

பதிவு: சனிக்கிழமை,  நவம்பர் 22, 2025, கார்த்திகை 06,  விசுவாவசு வருடம் 06-45: AM

துபாய்,

து​பா​யில் நடை​பெற்ற விமானக் கண்​காட்​சி​யில் சாகசத்​தில் ஈடு​பட்ட இந்​திய விமானப்​படை​யின் ‘தேஜஸ்’ போர் விமானம் கட்​டுப்​பாட்டை இழந்து தரை​யில் மோதி தீப்​பிடித்​தது. இந்த விபத்​தில் பைலட் உயி​ரிழந்​தார்.

துபாயில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை, மிகப் பெரிய அளவில் விமானக் கண்காட்சியை ஐக்கிய அரபு அமீரகம் நடத்தி வருகிறது.அந்த வகை​யில், துபா​யின் அல் மக்​தோம் சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் கடந்த 17-ம் தேதி விமானக் கண்​காட்சி தொடங்​கியது. இந்த கண்​காட்​சி​யில் உலகின் பல நாடு​களில் உள்ள 1,500-க்​கும் மேற்​பட்ட விமானம் மற்​றும் ட்ரோன் நிறு​வனங்​கள் தங்​கள் தயாரிப்​பு​களை காட்​சிக்கு வைத்​தன.

200-க்​கும் மேற்​பட்ட விமானங்​கள், ஹெலி​காப்​டர்​கள் அணிவகுத்து நின்​றன. இதையொட்​டி, 12 கருத்​தரங்​கு​களும் நடை​பெற்​றன. அதில் 450-க்​கும் மேற்​பட்​டோர் பங்​கேற்​று, விமானத் தொழில்​நுட்​பம் தொடர்​பான தங்​களது கருத்​துகள், ஆலோ​சனை​கள், தொலைநோக்​குத் திட்​டங்​களை பகிர்ந்து கொண்​டனர்.

இந்​நிலை​யில், 5 நாள் கண்​காட்​சி​யின் நிறைவு நாளான நேற்​று, இந்​தியா சார்​பில் உள்​நாட்​டுத் தயாரிப்​பான எச்​ஏஎல் நிறு​வனத்​தின் தேஜஸ் இலகு ரக போர் விமானத்தை காட்​சிப்​படுத்த முடிவு செய்​யப்​பட்​டது. விமானக் கண்​காட்​சி​யின்​போது, விமானங்​களின் அணிவகுப்​பு, சாகசக் நிகழ்ச்​சி​யும் நடத்​தப்​படும். இதில் பல நாடு​களை சேர்ந்த சாகசக் குழு​வினர் பங்​கேற்​பார்​கள். விமான கண்​காட்​சி​யில் பங்​கேற்ற இந்​தி​யா​வின் தேஜஸ் விமான​மும் சாகசத்​தில் ஈடு​பட்​டது.

வான் சாகசம் செய்து காட்​டு​வதற்​காக தேஜஸ் போர் விமானம் நேற்று மதி​யம் 2.10 மணி அளவில் புறப்​பட்​டது. வானில் தலைகீழாக பறந்​தும், சுழன்​றும் சாகசம் நிகழ்த்​தி​ய​போது, விமானம் திடீரென கட்​டுப்​பாட்டை இழந்து தரையை நோக்கி பாய்ந்​தது. பயங்கர சத்​தத்​துடன் தரை​யில் மோதிய விமானம், சிறிது தூரம் சறுக்​கிச் சென்று வெடித்​துச் சிதறியது.

சாகசத்​தில் ஈடு​பட்ட விமானம், கண்​ணுக்கு எதிரே தீப்​பிழம்​பாக எரிவதைப் பார்த்து பார்​வை​யாளர்​கள் அதிர்ச்​சி​யடைந்​தனர். துபாய் தீயணைப்பு படை​யினர் விரைந்து சென்று தீயை அணைக்​கும் பணி​யில் ஈடு​பட்​டனர். இந்த விபத்​தில் பைலட் உயி​ரிழந்​த​தாக இந்​திய விமானப்​படை தெரி​வித்​துள்​ளது.

விசா​ரணைக்கு உத்​தரவு

தேஜஸ் போர் விமான விபத்து குறித்து துறைரீ​தி​யான விசா​ரணைக்கு இந்​திய விமானப்​படை உத்​தர​விட்​டுள்​ளது. தேஜஸ் போர் விமானம், வான் பாது​காப்​பு, ஏவு​கணை​கள் மூலம் தாக்​குதல் போன்ற முக்​கி​யத்​து​வம் வாய்ந்த பணி​களை செய்​யும் 4.5-ம் தலை​முறை போர் விமானம் ஆகும்.

உலகில் உள்ள அனைத்து போர் விமானங்​களில் மிகச் சிறியது மற்​றும் மிக எடை குறை​வானது தேஜஸ் போர் விமானம். கடந்த 2001-ம் ஆண்டு இந்த விமானம் தயாரிக்​கப்​பட்ட போது, தனது முதல் பறக்​கும் சோதனை​யில் விபத்தை சந்​தித்​தது. அப்​போது பைலட், பாது​காப்​பாக வெளி​யேறிதப்​பி​னார்.

கடந்த ஆண்டு ராஜஸ்​தான் ஜெய்​சல்​மரில் வழக்​க​மான பயிற்​சி​யில் ஈடு​பட்​ட​போதும் தேஜஸ் விமானம் விபத்​துக்​குள்​ளானது. இதன் 23 ஆண்டு கால வரலாற்​றில் 3-வது முறை​யாக தேஜஸ் விமானம் தற்​போது விபத்​தில் சிக்​கி​யுள்​ளது. இந்த விமானத்​தில் மார்​டின் - பேக்​கர் ஜீரோ-ஜீரோ எஜெக்​‌ஷன் சீட் பொருத்​தப்​பட்​டுள்​ளது.

தரை​யில் இருந்து புறப்​படும்​போதும், தாழ்​வான உயரத்​தில் பறக்​கும்​போது, விமானம் கட்​டுப்​பாட்டை இழந்​தா​லும், பைலட் உடனடி​யாக விமானத்​தில் இருந்து பாராசூட் மூலம் வெளி​யேறி பத்​திர​மாக தரை​யிறங்​கும் வசதி உள்​ளது.

அப்​படி​யிருந்​தும், துபா​யில் நடை​பெற்ற விபத்​தில் பைலட் உயி​ரிழந்​துள்​ளார். இதற்​கான காரணம் வி​சா​ரணை அறிக்​கை​யில்​ தெரிய​வரும்​. விபத்​தில்​ உயி​ரிழந்​த பைலட்​ குடும்​பத்​தினருக்​கு, வி​மானப்​படை இரங்​கல்​ தெரிவித்​துள்​ளது.

தென்னாப்பிரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - ஜி20 மாநாட்டில் பங்கேற்பு

 








பதிவு: சனிக்கிழமை,  நவம்பர் 22, 2025, கார்த்திகை 06,  விசுவாவசு வருடம் 06-15: AM

ஜோகன்​னஸ்​பர்க்,

ஜி20 உச்சி மாநாட்​டில் பங்​கேற்க தென்​னாப்​பிரிக்​கா​வின் ஜோகன்​னஸ்​பர்க் நகருக்கு வந்தடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜி20 அமைப்​பில் அமெரிக்​கா, ரஷ்​யா, ஐரோப்​பிய ஒன்​றி​யம், இங்​கிலாந்​து, ஜெர்​மனி, பிரான்​ஸ், ஜப்​பான், சீனா, இந்​தி​யா, கனடா, துருக்​கி, தென்​னாப்​பிரிக்​கா, சவுதி அரேபி​யா, தென்​கொரி​யா, மெக்​சிகோ, இத்​தாலி, இந்​தோ​னேசி​யா, பிரேசில், ஆஸ்​திரேலி​யா, அர்​ஜென்​டினா ஆகிய நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்​ளன.

இந்த ஆண்டு ஜி20 அமைப்​புக்கு தென்​னாப்​பிரிக்கா தலைமை வகிக்​கிறது. இதன்​படி அந்த நாட்​டின் ஜோகன்​னஸ்​பர்க் நகரில் இன்று ஜி20 உச்சி மாநாடு தொடங்​கு​கிறது. இதில் பங்​கேற்க பிரதமர் மோடி நேற்று டெல்​லி​யில் இருந்து விமானத்​தில் ஜோகன்​னஸ்​பர்க் நகருக்கு சென்​றார். அங்கு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையொட்டி அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஆப்​பிரிக்​கா​வில் நடை​பெறும் முதல் ஜி20 உச்​சி​மா​நாடு இது என்​ப​தால் சிறப்​புமிக்க உச்​சி​மா​நா​டாக இருக்​கும். கடந்த 2023-ம் ஆண்​டில் ஜி20 அமைப்​புக்கு இந்​தியா தலைமை வகித்​தது. அப்​போது ஆப்​பிரிக்க ஒன்​றி​யம் ஜி20 அமைப்​பில் உறுப்​பின​ராக இணைக்​கப்​பட்​டது.

தற்​போதைய உச்சி மாநாட்​டில் உலகளா​விய பிரச்​சினை​கள் குறித்து விரி​வாக விவா​திக்​கப்​படும். இந்த ஆண்டு ஜி20 உச்சி மாநாட்​டின் கருப்​பொருள் ‘ஒற்​றுமை, சமத்​து​வம் மற்​றும் நிலைத்​தன்​மை' ஆகும். ‘ஒரே பூமி, ஒரே குடும்​பம், ஒரே எதிர்​காலம்' என்ற இந்​தி​யா​வின் தொலைநோக்​குப் பார்​வையை மாநாட்​டில் எடுத்​துரைப்​பேன்.

மாநாட்​டில் பங்​கேற்​கும் பிற நாடு​களின் தலை​வர்​களு​டன் முக்​கிய ஆலோ​சனை நடத்த உள்​ளேன். மாநாட்​டின் ஒரு பகு​தி​யாக 6-வது இந்​தி​யா -பிரேசில்​-தென்​னாப்​பிரிக்கா (ஐபிஎஸ்ஏ) உச்சி மாநாட்​டில் பங்​கேற்​கிறேன்.

தென்​னாப்​பிரிக்​கா​வில் வசிக்​கும் இந்​திய வம்​சாவளி​யினரை​யும் சந்​தித்​துப் பேசுவேன். இவ்​வாறு பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார். வெள்​ளை​யின மக்​களை தென்​னாப்​பிரிக்க அரசு கொடுமைப்​படுத்​து​வ​தாக கூறி அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜி20 மாநாட்டை புறக்​கணித்​துள்​ளார்.

காஞ்சீபுரத்தில் நாளை மக்களை சந்திக்கும் விஜய்

 

பதிவு: சனிக்கிழமை,  நவம்பர் 22, 2025, கார்த்திகை 06,  விசுவாவசு வருடம் 05-45: AM

காஞ்சிபுரம்,

கரூர் சம்பவத்துக்குப் பிறகு பொதுமக்களை சந்திக்காமல் இருக்கும் தவெக விஜய், நாளை காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளார்.

காஞ்சீபுரம் மக்களின் வேண்டுகோளுக்காக இந்த சிறப்பு மக்கள் சந்திப்பு நடத்த இருப்பதாக த.வெ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு பொது நிகழ்வுகளில் விஜய் பங்கேற்காமல் இருந்தார்.

அந்த சம்பவத்தில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு வந்த விஜய், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து, ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து கட்சியின் சிறப்பு பொதுக்குழுவை கூட்டினார். இந்த பொதுக்குழுவில் மீண்டும் த.வெ.க. பயணம் தொடரும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.மீண்டும் மக்கள் சந்திப்புக்கு அவர் ஆயத்தமானார்.

இதற்காக தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் பேரை தேர்வு செய்து மக்கள் பாதுகாப்பு படையை உருவாக்கினார். அவர்களுக்கு ராணுவம் மற்றும் போலீஸ் துறையில் ஓய்வு பெற்ற அதிகாரிகளை கொண்டு பயிற்சி அளித்தார்.

இந்த பயிற்சி சென்னையை அடுத்த செம்மஞ்சேரி தனியார் கல்லூரி வளாகத்தில் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தலா 100 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தநிலையில், விஜய் சேலத்தில் இருந்து டிசம்பர் 4-ந்தேதி முதல் பிரசாரம் செய்ய முடிவு செய்தார். இதற்காக 3 இடங்கள் தேர்வு செய்து போலீசாரிடம் வழங்கப்பட்டது. ஆனால் தீப திருவிழா மற்றும் சில பாதுகாப்பு காரணங்களால் வேறு ஒரு தேதியில் பிரசாரத்தை வைத்துக்கொள்ள போலீசார் அறிவுறுத்தினர்.

இதற்கிடையே, நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை அடுத்த காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த விஜய் முடிவு செய்துள்ளார்.

குறிப்பாக இதில் காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட த.வெ.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். காஞ்சீபுரம் மக்களின் வேண்டுகோளுக்காக இந்த சிறப்பு மக்கள் சந்திப்பு நடத்த இருப்பதாக த.வெ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மக்கள் சந்திப்புக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தொண்டர் படையினருடன், மக்கள் பாதுகாப்பு படையினர் செய்து வருகின்றனர்.

இதற்காக கல்லூரி வளாக உள் அரங்கத்தில் போதுமான அளவு இருக்கைகளும், தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் எதுவும் இல்லாமல் நிகழ்ச்சி நடத்தப்பட இருப்பதாக த.வெ.க. தெரிவித்துள்ளது. காலை 10 மணிக்கு இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது.

Featured post

கரூர் நெரிசல் வழக்கில் தவறு நடக்கிறது - பதில் கேட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு - விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம்

பதிவு:  சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025, கார்த்திகை 27,  விசுவாவசு வருடம் 01-40: AM புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்...