Sunday, November 9, 2025

முகத்தை சிதைத்து கொடூரம் - காரைக்குடி பெண் கொலையில் டிரைவர் கைது

பதிவு: ஞாயிறுக்கிழமை, நவம்பர் 09, 2025, ஐப்பசி 23, விசுவாவசு வருடம் 07-00: AM

காரைக்குடி,

முகம் சிதைந்த நிலையில் காருக்குள் பெண் பிணம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மருதுபாண்டியர் நகரை சேர்ந்தவர் பாண்டிக்குமார். இவருடைய மனைவி மகேசுவரி (வயது 38). இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகள் வெளிநாட்டில் மருத்துவம் படித்து வருகிறார். இளைய மகள் காரைக்குடி பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

மகேசுவரி நிலம் வாங்கி விற்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததாகவும், தனக்கு தெரிந்தவர்களுக்கு பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் காரைக்குடி அருகே ஆவுடைப்பொய்கை ஆர்.எஸ்.பதி காட்டுப்பகுதியில் அவரது காருக்குள் மகேசுவரி கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மகேசுவரியின் காரை அவ்வப்போது, காரைக்குடி இலுப்பைக்குடி லட்சுமிநகரை சேர்ந்த சசிக்குமார் (33) என்பவர் ஓட்டி வந்துள்ளார். சம்பவத்தன்றும் அவர்தான் மகேசுவரியை காரில் அழைத்துச்சென்றுள்ளார்.

தலைமறைவாக இருந்த அவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். மகேசுவரியை கொன்றது அவர்தான் என தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “பணம் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வந்த மகேசுவரிக்கு பணத்தேவை இருந்ததால், அதுபற்றி தன் டிரைவர் சசிக்குமாரிடம் கூறி இருக்கிறார். அதற்கு அவர், தனக்கு தெரிந்த நபரிடம் பெரும் தொகையை வாங்கி மகேசுவரியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பணத்தை திரும்ப கொடுக்காமல் அவர் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது.

இதற்கிடையே பணம் கொடுத்தவர், அதை திரும்ப கேட்டு சசிக்குமாருக்கு அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது. இதனால் சசிகுமார், மகேசுவரியிடம் பணத்தை திருப்பி தருமாறு தெரிவித்து வந்துள்ளார். இந்தநிலையில் காரைக்குடி அருகே ஆவுடைபொய்கை காட்டுப்பகுதியில் உள்ள ஒரு நிலத்தை வாங்கி விற்பது தொடர்பாக, அந்த இடத்தை பார்ப்பதற்காக காரில் சசிக்குமாரும், மகேசுவரியும் சென்றுள்ளனர். அங்கு வைத்து சசிக்குமார், மகேசுவரியிடம் பணத்தை கேட்டுள்ளார்.

அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த சசிக்குமார், கல்லால் மகேசுவரியின் முகத்தில் அடித்து முகத்தை சிதைத்து கொலை செய்துள்ளார். பின்னர் அவர் அணிந்து இருந்த 20 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரியவருகிறது” என்று போலீசார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சசிக்குமாரை போலீசார், கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 15 பவுன் நகைகளை போலீசார் முதற்கட்டமாக மீட்டனர். மீதம் உள்ள நகையை ஒரு கடையில் அவர் அடகு வைத்தது தெரியவந்தது. இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதாக கூறி அவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி மகேசுவரியின் உறவினர்கள் நேற்று மதியம் காரைக்குடி பகுதியில், திருச்சி-ராமேசுவரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உடல் பருமன், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் இருந்தால் அமெரிக்க விசா கிடையாது - உலகம் முழுவதும் உடனடி அமல்

 


பதிவு: ஞாயிறுக்கிழமை, நவம்பர் 09, 2025, ஐப்பசி 23, விசுவாவசு வருடம் 06-00: AM

வாஷிங்டன்,

இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், நரம்பியல் பாதிப்பு, மனநிலை பாதிப்பு இருப்பவர்களுக்கு விசா வழங்க வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை உத்தரவிட்டு உள்ளது. உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் புதிய கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 7 மாதங்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

மேலும், அமெரிக்க விசா நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான எச்1பி விசா கட்டணம் ரூ.1.32 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்களில் வெளிநாட்டு மென்பொறியாளர்கள் சேருவதை தடுக்க மறைமுகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அடுத்தகட்டமாக, இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், நரம்பியல் பாதிப்பு, மனநிலை பாதிப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு விசா வழங்க வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் புதிய கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

இது தொடர்பாக அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறியதாவது: சுற்றுலா விசா, மாணவர் விசா, வணிக விசாவைப் பெற்று அமெரிக்காவில் நுழையும் வெளிநாட்டினர் உடல்நிலையைக் காரணம் காட்டி அமெரிக்காவில் நீண்டகாலம் தங்குகின்றனர். அமெரிக்க அரசின் சுகாதார திட்டப் பலன்களை வெளிநாட்டினரும் பெறுகின்றனர். இதனால் அமெரிக்க மக்களின் வரிப்பணம் வீணாகிறது.

இதை தடுக்க, தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு விசா வழங்க வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக அனைத்து தூதரகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. மேலும், விசா விண்ணப்பதாரர்களின் வயது, நிதி நிலைமை குறித்தும் விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதன்படி, உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் இனிமேல் விசா விண்ணப்பதாரர்களின் உடல்நலப் பாதிப்புகள் குறித்தும், தொற்று நோய் அபாயம் குறித்தும், நிதி நிலைமை குறித்தும் விரிவாக விசாரணை நடத்தும். அமெரிக்காவுக்கு சென்ற பிறகு உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டால், அவர்களின் சொந்த செலவிலேயே மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அமெரிக்க அரசு தரப்பில் எவ்வித உதவியும் வழங்கப்படாது என்பது தெளிவாக எடுத்துரைக்கப்படும். இது தொடர்பாக விசா விண்ணப்பதாரர்களிடம் உறுதிமொழியும் பெறப்படும்.

மருத்துவர்கள் நியமனம்

தற்போதைய சூழலில் பல்வேறு நாடுகளில் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்படவில்லை. எனவே, விசா அதிகாரிகளே, விண்ணப்பதாரர்களின் உடல்நலம் குறித்து விசாரணை நடத்துவார்கள். தேவைப்பட்டால் எதிர்காலத்தில் அமெரிக்க தூதரகங்களில் மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

முந்தைய நடைமுறைகளின்படி விசா விண்ணப்பதாரர்களிடம் காச நோய், எச்ஐவி உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து மட்டுமே விசாரணை நடத்தப்பட்டது. இனி அனைத்து நோய்கள் குறித்தும் விசாரிக்கப்படும். இவ்வாறு அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புதிய விசா கட்டுப்பாடு குறித்து இந்திய வம்சாவளியினர் கூறியதாவது: அமெரிக்காவில் ஆண்டுதோறும் கிரீன் கார்டு கோரி ஒரு லட்சம் இந்தியர்கள் விண்ணப்பம் செய்கின்றனர். முந்தைய காலத்தில் பலருக்கு கிரீன் கார்டு கிடைத்தது. டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு கிரீன் கார்டு கனவு கலைந்துவிட்டது.

அமெரிக்க அரசின் எச்1பி விசா பெறுவோரில் 70 சதவீதம் பேர் இந்தியர்கள். இதை தடுக்க எச்1 பி விசா கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது நீரிழிவு உள்ளிட்ட உடல்நல பாதிப்பு இருந்தால் விசா விண்ணப்பத்தை நிராகரிக்க அமெரிக்க அரசு உத்தரவிட்டு இருப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இனி நீரிழிவு நோய் பாதிப்பு உள்ள இந்திய மென்பொறியாளருக்கு எச்1 பி விசா கிடைக்காது.அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் பணியாற்றும் மென்பொறியாளர்களில் 3 பேரில் ஒருவர் இந்தியராக உள்ளார். அவர்களை சந்திக்க இந்தியாவில் இருந்து பெற்றோர், மனைவி, பிள்ளைகள் சுற்றுலா விசாவில் அமெரிக்காவுக்கு வந்து செல்வது வழக்கம். இனிமேல் அவர்களுக்கும் அமெரிக்க விசா கிடைப்பது மிகவும் கடினமாகிவிடும். அதிபர் ட்ரம்பின் புதிய அறிவிப்பால் இந்தியா மட்டுமன்றி ஒட்டுமொத்த உலக நாடுகளிலும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு இந்திய வம்சாவளியினர் தெரிவித்துள்ளனர்.

வழக்குத் தொடர திட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசின் புதிய விசா கட்டுப்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர தன்னார்வ தொண்டு அமைப்புகள் திட்டமிட்டு உள்ளன.

Featured post

கரூர் நெரிசல் வழக்கில் தவறு நடக்கிறது - பதில் கேட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு - விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம்

பதிவு:  சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025, கார்த்திகை 27,  விசுவாவசு வருடம் 01-40: AM புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்...