Saturday, December 13, 2025

"The dargah management has not any objection to lighting lamps on the pi...

5 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த போராட்டம்... கடப்பாரையால் கதவை உடைத்து... சவுக்கு சங்கர் கைது

 

பதிவு:  சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025, கார்த்திகை 27,  விசுவாவசு வருடம் 05-00: PM

சென்னை,

அவதூறாக பேசி தன்னிடம் ரூ 2 லட்சம் பறித்துவிட்டதாக சினிமா தயாரிப்பாளர் ஆயிஷா சாதிக் அளித்த புகாரின் பேரில் போலீஸார் யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. காலை முதலே அவரது வீட்டிற்கு இரு வேன்களில் வந்த போலீஸார் அவரது வீட்டுக் கதவை கடப்பாரையால் உடைத்து கைது செய்ததாக தெரிகிறது. 

இதுகுறித்து சவுக்கு சங்கர் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் "நானும் மாலதி, மொத்த சவுக்கு மீடியா டீமும் கைது செய்யப்பட இருக்கிறோம். கீழே இரண்டு போலீஸார் வேன்களில் 20 பேர் காத்திருக்கிறார்கள். 

சம்மனை கொடுங்கள் என எனது வழக்கறிஞர் கேட்டால் கொடுக்க மறுத்து கதவை திறக்க வேண்டும் என தொடர்ந்து சென்னை மாநகர போலீஸார் தன்னை மிரட்டி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் சவுக்கு சங்கரை கைது செய்ய போலீஸார் அதிகாலையிலேயே அவரது வீடு முன்பு குவிந்ததாக தெரிகிறது. 

அவர்கள் வந்ததை அறிந்த சவுக்கு சங்கர் கதவை திறக்க மறுத்துவிட்டாராம். இதை காவல் துறை அதிகாரி ஒருவர் தனது உயர் அதிகாரிக்கு போனில் தகவல் கொடுத்தார். "சார் தனது அட்வகேட் வந்தால் மட்டுமே கதவை திறப்பேன் என்று கூறுகிறார்" என்று அந்த காவல் துறை அதிகாரி தெரிவிக்கிறார். 

அவர் மேலும் இன்னொருவரிடம் கூறுகையில், 3 வழக்கறிஞர்கள் வந்தும் எங்களை வீடியோதான் எடுக்கிறார்கள். சம்மனை ஏற்கெனவே அவருக்கு அனுப்பிவிட்டோம். ஆனால் எங்களை பணி செய்ய விடாமல் தடுக்கிறீர்கள், எவ்வளவு நேரம் காத்திருப்பது, அதனால் கைது செய்கிறோம் என அந்த போலீஸ் அதிகாரி கூறுகிறார். 

சவுக்கு சங்கர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: "சென்னை மாநகர காவல் துறை என்னை கைது செய்ய வந்திருக்கிறது. நான் இன்நும் கதவை திறக்கவில்லை, வழக்கறிஞர் வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். போலீஸாரோ உடனே கதவை திறங்கள் என்கிறார்கள். 

அக்டோபர் இறுதியில் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து ஒரு சம்மன் வந்தது. என்ன வழக்கு என பார்த்தால், ரெட்டன் ஃபாலோ என்ற ஒரு படத்தின் தயாரிப்பாளர் புருஷோத்தமன் என்பவர் கடந்த ஜூன் 30ஆம் தேதி என் அலுவலகத்திற்கு வந்து என்ன பத்தி அந்த வீடியோவில் தப்பா பேசிட்டீங்க, அந்த வீடியோவை நீக்குங்கள் என சொன்னதாகவும் நான் , மாலதி உள்ளிட்டோர் சேர்ந்து அவரை அடித்து ரூ 10 லட்சம் கொடுத்தால்தான் வீடியோவை நீக்குவோம் என சொன்னதாகவும் அப்போது அவர் கையில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை பறித்துக் கொண்டு விட்டதாகவும் அந்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

"இதற்கு பதிலளிக்கும் விதமாக இது முழுக்க பொய் வழக்கு. இது போன்ற ஒரு சம்பவமே நடக்கவில்லை. நீங்கள் சொல்லும் புருஷோத்தமன் என யாரும் என் அலுவலகத்திற்கு வரவில்லை. இதை என்னுடைய விளக்கமாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நவம்பர் 1ம் தேதியே பதில் கடிதம் அனுப்பி விட்டேன். இதுவரை காவல்துறை தரப்பில் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. 

நேற்று இரவு ஒரு முறைகேடு குறித்து விவரங்களை வெளியிட்டதும் அதிகாலையில் இதே வழக்கில் கைது செய்ய போலீஸார் வந்துள்ளனர். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க வழக்கறிஞர் வந்த பிறகு தான் கதவு திறக்கப்படும் என்று கூறியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 

தற்போது சவுக்கு சங்கரின் வீட்டுக் கதவை உடைக்க கடப்பாரையுடன் தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் லிப்டில் கடப்பாரையுடன் செல்லும் காட்சி, வீட்டுக் கதவை இடிக்க முயலும் காட்சிகளையும் சவுக்கு சங்கர் வீடியோவாக வெளியிட்டுள்ளார். 

தனது சமூகவலைதள பக்கத்தில் அடுத்தடுத்த வீடியோக்களை வெளியிட்ட சவுக்கு சங்கர், தனது வீட்டுக் கதவை உடைக்க கடப்பாரையுடன் தீயணைப்புத் துறையினர் வந்துள்ளதாக தெரிவித்திருந்தார். 

மேலும் அவர்கள் அவரது வீட்டு ஃலிப்டில் செல்வது போலவும், சவுக்கு சங்கரின் வீட்டு கதவை திறப்பது போன்றும் வீடியோக்களை வெளியிட்டிருந்தார். 

சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த போராட்டத்தில் தற்போது சவுக்கு சங்கரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கரூர் நெரிசல் வழக்கில் தவறு நடக்கிறது - பதில் கேட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு - விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம்

பதிவு:  சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025, கார்த்திகை 27,  விசுவாவசு வருடம் 01-40: AM

புதுடெல்லி,

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏதோ தவறு நடக்கிறது' என குறிப்பிட்டு, வழக்கில் உயர் நீதிமன்ற பதிவாளரையும் ஒரு தரப்பாக சேர்த்து பதிலளிக்கும்படி நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள வேலுசாமிபுரத்தில், செப்டம்பர் 27ல் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இது குறித்து விசாரிக்க, தமிழக அரசு சார்பில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது.மனு தாக்கல் இதற்கிடையே, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த தனி நீதிபதி செந்தில் குமார், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டார்.

இது, சி.பி.ஐ., விசாரணை வேண்டாம் என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவுக்கு மாறாக இருந்தது.

இந்த விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிறப்பு புலனாய்வு குழு, ஒரு நபர் கமிஷனை ரத்து செய்து அக்டோபரில் உத்தரவிட்டது.

மேலும், கரூர் சம்பவத்தை சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட்டதோடு, அதை ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்றும் குறிப்பிட்டது.

இந்நிலையில், ஒரு நபர் கமிஷன், சிறப்பு புலனாய்வு குழு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, ஜே.கே.மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாதிடுகையில், ''ஒரு நபர் கமிஷன் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும். இது, சி.பி.ஐ., விசாரணையில் தலையிடாது.

''கூட்ட நெரிசல் சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க விதிமுறைகளை வகுக்கவும், பரிந்துரைகளை வழங்கவுமே ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது,'' என்றார்.

இதன்பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், எல்லாமே நியாயமாகவும், பாரபட்சமின்றியும் இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.

நோட்டீஸ் பொதுக்கூட்டங்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, எப்படி குற்றவியல் ரிட் மனுவாக பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து, சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் அனுப்பிய அறிக்கையை நாங்கள் படித்து பார்த்தோம்.

அங்கு ஏதோ தவறு நடக்கிறது. உயர் நீதிமன்றத்தில் நடப்பது எதுவும் சரியாக இல்லை. அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற பதிவாளரையும் ஒரு தரப்பாக சேர்க்க நோட்டீஸ் பிறப்பிக்கிறோம்.

திட்டவட்டம் 

அங்கு வழக்குகளை பட்டியலிடுவது, விசாரிப்பதில் பின்பற்றப்படும் விதிமுறைகள் தொடர்பாக நாங்கள் ஆய்வு செய்வோம். அதன்பின், மற்ற விஷயங்களை பற்றி விசாரிக் கலாம்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை இறுதி விசாரணைக்காக ஒத்தி வைத்தனர்.

அதே சமயம், இந்த விவகாரத்தில் ஏற்கனவே வழங்கிய இடைக்கால உத்தரவில் எந்த மாற்றங்களையும் மேற்கொள்ள முடியாது என, நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினர்.

விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம் 

கரூர், வேலுச்சாமிபுரத்தில் நடந்த நெரிசல் விபத்து தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதற்காக, கரூர் கலெக்டர் அலுவலக பயணியர் மாளிகையில், சி.பி.ஐ., சிறப்பு அலுவலகம் செயல்படுகிறது. இங்கு, சி.பி.ஐ., -- எஸ்.பி., பிரவீன்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், இணை பொதுச்செயலர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், கரூர் மாவட்ட அரசு தரப்பு மற்றும் போலீசார் வழங்கிய ஆவணங்களை, சி.பி.ஐ., அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில் த.வெ.க., தலைவர் விஜயை சம்மன் அனுப்பி நேரில் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். கரூருக்கு விஜயை அழைத்தால் பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருப்பதால், சென்னை சி.பி.ஐ., அலுவலகத்தில் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். 

இதற்காக, விஜய்க்கு டில்லியில் இருந்து சம்மன் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.