Thursday, November 27, 2025

வடகிழக்கு பருவமழை - அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

 

பதிவு: வியாழக்கிழமை,  நவம்பர் 27, 2025, கார்த்திகை 11,  விசுவாவசு வருடம் 06-40: PM

சென்னை,

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இன்று (27.11.2025) தலைமைச் செயலகத்தில், வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தற்போது நிலவிவரும் வானிலை நிலவரம் குறித்தும், பேரிடர் மேலாண்மைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு முன்னெடுப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டமும் நடைபெற்றது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கையின் தெற்குப் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலவுகிறது என்றும், இதன் காரணமாக தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரின் தலைமையில் ஒரு ஆய்வு கூட்டமும், கூடுதல் தலைமைச் செயலர் / வருவாய் நிர்வாக ஆணையரின் தலைமையில் மூன்று கூட்டங்களும் நடைபெற்றன.

இப்பேரிடரை எதிர்கொள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சர் பல்வேறு துறை உயர் அலுவலர்களும் மற்றும் மாவட்ட நிருவாகமும் மேற்கொள்ள வேண்டிய ஆயத்த நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கினார்.

நிகழ்நேர பேரிடர் கண்காணிப்பிற்காக பொருத்தப்பட்ட தானியங்கி வானிலை கருவிகள், புயல் சீற்ற மாதிரி, மாநகராட்சிகளுக்கான வெப்ப அலை செயல்பாட்டுத் திட்டம், சென்னை நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு திட்டம், தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமையின் ஒருங்கிணைந்த வெள்ள கண்காணிப்பு மையம், தரம் மேம்படுத்தப்பட்ட மாநில அவசர கால செயல்பாட்டு மையம், பொதுமக்களுக்கான டி.என்.அலர்ட் (TN Alert) செயலி மற்றும் அரசு அலுவலர்களுக்கான டி.என். ஸ்மார்ட் 2.0 (TN Smart 2.0) இணையதளம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை திட்டம் 2025-க்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டது.

கடந்த 2021-2025 ஆம் ஆண்டுகளில் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு (SDRF) ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்த ரூ.5351.9 கோடியை விட தமிழ்நாடு அரசு கூடுதலாக ரூ. 9170.48 கோடி செலவு செய்துள்ளது என்றும், இந்த நிதியாண்டுக்கான (SDRF) 2வது தவணை ரூ. 661.20 கோடியும், (SDMF) 2-வது தவணை ரூ.165.30 கோடியும், ஆக மொத்தம் ரூ. 826.50 கோடி மத்திய அரசிடம் இருந்து வரவேண்டியுள்ளது என்றும் முதல்-அமைச்சரிடம் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் பேசும்போது;

அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும், குறிப்பாக, முதன்முறையாக தமிழ்நாட்டில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பேரிடர் மேலாண்மை சிறந்த முறையில் கையாளப்பட்டு வருவது பெருமையாக உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் 1,740 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பணிகள் குறித்தும் - மத்திய அரசு ஒதுக்கீடு செய்த தொகையைவிட, நாம் அதிகமாக பேரிடர் நிவாரணப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்து, பணிகள் மேற்கொண்டு வருவது குறித்தும், மக்கள் நன்மைக்காக அவர்களின் பாதுகாப்பில் அக்கறை கொண்டு இப்பணிகளை நாம் தொய்வில்லாமல் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மழைக்காலங்களில் அதிகமாக பாதிக்கப்படுவது ஏழை எளிய மக்கள்தான். அதனால், இவ்வரசு பொறுபேற்றப்பிறகு, பேரிடர் மேலாண்மையில் தனி கவனம் செலுத்தி, இயற்கை இடர்பாடுகளின்போது ஏற்படும் பாதிப்புகளை பெருமளவு குறைப்பதற்கு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருவதாகவும், அது அப்படியே தொடர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பே, ஆயத்த கூட்டங்களை நடத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருப்பதோடு, மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வுக் கூட்டங்களையும் தான் நடத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், அமைச்சர் பெருமக்களும், அரசு உயர் அதிகாரிகளும் களத்தில் ஆய்வு செய்துகொண்டு, தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்ததோடு, பேரிடர் மேலாண்மைக்குத் தேவையான நிதியை முறையாக ஒதுக்கீடு செய்து, முறையாக பயன்படுத்தி, மக்கள் பயன்பெறும் வகையில் அவர்களுடைய பணி அமைய வேண்டும் என்றும், காலநிலை மீள்தன்மைக்குத் தேவையான நடவடிக்கைகளையும் தொடர்ந்து, கவனத்துடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், அலுவலர்களை கேட்டுக் கொண்டார்.

வரும் 29 மற்றும் 30-ஆம் தேதிகளில், குறிப்பிட்ட சில மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் (Red Alert) என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளதை தொடர்ந்து, அனைத்து அரசு துறைகளும், குறிப்பாக - வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, மீன்வளத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து, மக்கள் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், தேவையான மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை உடனடியாக அனுப்பி வைத்திடவும், மீட்பு மற்றும் நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்து, மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அங்கு முறையாக வழங்குவதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

தலைமைச் செயலாளர் ஏற்கெனவே அறிவுறுத்தியபடி, அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்ததோடு, கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த எல்லா பேரிடர் நிகழ்வுகளையும் சிறப்பாக எதிர்கொண்டு, பணியாற்றிய அனைத்து அலுவலர்களையும் பாராட்டி, நன்றி தெரிவித்து, தொடர்ந்து இப்பணிகளை சிறப்பான வகையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், வருவாய் நிருவாக ஆணையர்/கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.சாய்குமார், எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பெ.அமுதா, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பி. சந்திரமோகன், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், நீர்வளத்துறை செயலாளர் ஜெ. ஜெயகாந்தன், நெடுஞ்சாலைத் துறை செயலாளர் ரா. செல்வராஜ், உயர்கல்வித் துறை செயலாளர் பொ. சங்கர், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் நா. சுப்பையன், பேரிடர் மேலாண்மை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் சீமா அகர்வால், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சௌ. டேவிட்சன் தேவாசிர்வாதம், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ.அருண், இ.கா.ப., மற்றும் காவல்துறை / அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றே உருவாகிறது ‘தித்வா’புயல்.. வட தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு..!

 

பதிவு: வியாழக்கிழமை,  நவம்பர் 27, 2025, கார்த்திகை 11,  விசுவாவசு வருடம் 11-40: AM

சென்னை,

அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாகக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மலாக்கா ஜலசந்தி பகுதியில் ‘சென்யார்' புயல் உருவானது. இது இந்தோனேசியா கடற்கரையை கடந்து வலுவிழந்து, அதன் ஆற்றல் மட்டும் தென் சீனக் கடல் பகுதிக்கு சென்றது. இந்த புயலினால் எந்த மழை வாய்ப்பும் நமக்கு இல்லை.

இந்நிலையில் இந்தோனேசியாவில் கரையைக் கடந்த சென்யார் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது என்றும், இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை அருகே அடுத்த 12 மணி நேரத்தில் புயலக உருவாகி வட தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி புயல் வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரா நோக்கி வரும் என்றும், புயலால் நாளை மறுநாள் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்றும் ஏமன் பரிந்துரைத்த 'தித்வா' என்ற பெயர் இந்த புயலுக்கு பெயரிடப்பட உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய புயலுக்கு பெயர் ‘தித்வா’

புயல் உருவான பிறகு, அதனை அடையாளம் காணுவதற்கு ஏதுவாக பெயர் சூட்டும் வழக்கம் இருக்கிறது. ஆனால் புயல் உருவான பின்னர் தான் அந்த பெயரை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும். ஆனால் இதற்காக 13 உறுப்பு நாடுகள் ஏற்கனவே பெயரை பட்டியலிட்டு வழங்கியிருக்கிறது.

அந்த அட்டவணையின்படி, தற்போது இலங்கை அருகே உருவாகும் புதிய புயலுக்கு ‘தித்வா' என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. இந்த பெயரை ஏமன் நாடு பரிந்துரைத்து இருக்கிறது. ‘தித்வா' என்ற பெயருக்கு அரபு மொழியில் ‘தீவு' என்ற அர்த்தம் சொல்லப்படுகிறது. ஏமனுக்கு அருகில் உள்ள ‘சோகோட்ரா' தீவின் ஒரு பகுதியின் பெயராக கூட இது இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

முன்னதாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு இலங்கை-இந்திய பெருங்கடல் பகுதிகளில் இருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தெற்கு இலங்கை மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று (வியாழக்கிழமை) காலைக்குள் வலுப்பெற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதன் தொடர்ச்சியாக நாளை (வெள்ளிக்கிழமை) காலைக்குள் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அன்றைய தினம் நள்ளிரவு வட இலங்கையையொட்டிய கடல் பகுதியில் புயலாகவும் மாற வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் 29-ந்தேதி (சனிக்கிழமை) காலை தமிழ்நாட்டின் டெல்டா கடற்கரைப் பகுதியை வந்தடையும் என்றும், டெல்டா பகுதிகளில் புயலின் முன் பகுதி நுழையும் அதாவது நிலப்பகுதிகளில் ஊடுருவும் என்றும், பின்னர் வடக்கு திசையில் சென்னை நோக்கி நகர்ந்து, 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு சென்னைக்கு அருகில் கரையை கடக்கவோ அல்லது கரைக்கு அருகில் நிலைக்கொள்ளவோ வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

இதன் காரணமாக காவிரி டெல்டா பகுதிகளில் நாளையில் இருந்து 30-ந்தேதி காலை வரையிலும், வருகிற 29-ந்தேதி காலையில் இருந்து அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி வரையில் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பதிவாக வாய்ப்பு இருப்பதாகவே ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மேற்சொன்ன 4 நாட்கள் பரவலாக கன முதல் மிக கனமழையும், புயலின் நகர்வை பொறுத்து பல இடங்களில் அதி கனமழை வரையும் பெய்வதற்கான சூழல் இருப்பதாகவே தற்போது கணிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த பகுதிகளில் மழைக்கான முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன் - தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்

 

பதிவு: வியாழக்கிழமை,  நவம்பர் 27, 2025, கார்த்திகை 11,  விசுவாவசு வருடம் 11-00: AM

சென்னை,

எம்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்த நிலையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார்.

அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக செயல்பட்டு வந்த செங்கோட்டையனுக்கும். கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கே.ஏ.செங்கோட்டையன் கோரிக்கை வைத்த நிலையில், கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட அவர், பிறகு கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். அவருடைய ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதற்கிடையே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடந்தது. இதில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார். அப்போது அவர், கட்சியை ஒருங்கிணைப்பது தொடர்பாக பேசியதாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். எனவே செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனால் அவர் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக செங்கோட்டையன் விஜய் தலைமையிலான த.வெ.க.வில் இணைய இருப்பதாக தகவல் பரவியது. இது தொடர்பான கேள்விக்கும் செங்கோட்டையன் பதில் அளிக்கவில்லை. அதேபோல் த.வெ.க. தரப்பில் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவிடம் கேட்கப்பட்டபோதும் அவரும் பதில் அளிக்காமல் மவுனம் காத்தார். இதனால் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைவது கிட்டத்தட்ட உறுதியானது.

அதனை உறுதிபடுத்தும் வகையில் செங்கோட்டையன் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அதற்காக அவர் நேற்று காலை 11 மணியளவில் தலைமைச்செயலகம் வந்தார். அவர், நேராக சபாநாயகர் அறைக்கு சென்றார். அங்கு தான் கையோடு கொண்டு வந்திருந்த ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து போட்டு, அதனை சபாநாயகர் அப்பாவுவிடம் வழங்கினார்.

பின்னர் வெளியே வந்த அவரை பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்க சூழ்ந்தனர். ஆனால் செங்கோட்டையன், ‘‘ஒரு நாள் மட்டும் பொறுத்திருங்கள்'' என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். அதனைத்தொடர்ந்து, செங்கோட்டையனை அமைச்சர் சேகர்பாபு சந்தித்து சுமார் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பு அவரை தி.மு.க.வுக்கு இழுக்கும் முயற்சி நடக்கிறதோ என்ற கேள்வியை எழ செய்தது. பின்னர் செங்கோட்டையன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். காரில் இருந்து அ.தி.மு.க. கொடியையும் அகற்றினார்.

இதற்கிடையே த.வெ.க. தலைவர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது மற்றொரு வீட்டுக்கு நேற்று மாலை வந்தார். அங்கு அவர் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவுடன் ஆலோசனை நடத்தினார்.

தி.மு.க.வா?, த.வெ.க.வா? என்ற கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று மாலை 4.36 மணிக்கு செங்கோட்டையன் பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் வீட்டுக்கு திடீரென்று சென்றார். அவரை ஆதவ் அர்ஜுனா தனது காரில் அழைத்துச் சென்றார். அங்கு சுமார் 2 மணி நேரம் விஜய்யுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். அவர்கள் இருவரும் மனம் விட்டு பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினர்.

இந்தநிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்திற்கு செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்தார். ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்சி ஆனந்த் ஆகியோர் அவரை வரவேற்றனர். பின்னர் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து தனது 50 -க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் முறைப்படி த.வெ.க.வில் இணைந்தார்.

நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி

இந்நிலையில் செங்கோட்டையனுக்கு த.வெ.க.வில் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 4 மாவட்டங்களுக்கு (கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி) அமைப்பு பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இன்று சென்னை அருகே பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்துக்கு வந்த செங்கோட்டையன், அங்கு அக்கட்சியின் தலைவர் விஜய்யை சந்தித்து பேசினார். பின்னர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன் அதிமுக முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட ஆதரவாளர்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

உதயநிதி ஸ்டாலின் 49-வது பிறந்தநாள் - அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் துணை முதல்-அமைச்சர் மரியாதை

 


 

 
 
பதிவு: வியாழக்கிழமை,  நவம்பர் 27, 2025, கார்த்திகை 11,  விசுவாவசு வருடம் 10-30: AM

சென்னை,

தந்தை பெரியார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தனது 49-வது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 

“ஆதிக்கவாதிகளிடம் குவிந்திருந்த அதிகாரத்தை சாமானிய மக்களிடம் கொண்டு சேர்த்த தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் நமது பிறந்த நாளில் மரியாதை செலுத்தினேன். பேரறிஞர் அண்ணா வழியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காப்போம்! மாநில உரிமைகளையும் - சமூக நீதியையும் நிலைநாட்டுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

கனிமொழி எம்.பி. வாழ்த்து:-

‘தமிழ்நாடு துணை முதல்-அமைச்சரும், கழக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது மக்கள் பணி சிறந்திட வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் எம்.பி. வாழ்த்து:-

‘தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர், எப்போதும் இனியவர், என் அன்பிற்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின் நீடு வாழ்க. பொன்றாப் புகழுடனும் குன்றாப் பெருமையோடும் நிலைத்து வளர்க’ என்று தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் தங்கம் அபகரிக்கப்பட்ட வழக்கில் நடிகர் ஜெயராமை கைது செய்ய விசாரணை அதிகாரிகள் முடிவு

 

பதிவு: வியாழக்கிழமை,  நவம்பர் 27, 2025, கார்த்திகை 11,  விசுவாவசு வருடம் 10-00: AM

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் அபகரிக்கப்பட்ட வழக்கில் நடிகர் ஜெயராமை கைது செய்ய விசாரணை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்ட தங்கத் தகடுகளில் இருந்து தங்கம் அபகரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கேரள ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. வெங்கடேஷ் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு தங்கத்தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் போற்றி மற்றும் தங்கத்தகடுகளை தாமிர தகடுகள் என்று சான்றிதழ் வழங்கிய தேவசம் போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு உள்பட 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சபரிமலையில் தங்கம் அபகரிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் தேவஸ்தான மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரனை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். ஆனால் கேரளாவில் அடுத்த மாதம் (டிசம்பர்) 9 மற்றும் 11-ந் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கு பிறகு அவரிடம் விசாரணை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அதற்கு முன்னதாக துவார பாலகர் சிலைகள் மற்றும் சபரிமலை கோவில் கதவு நிலைகளை தனது வீட்டில் வைத்து பூஜை நடத்த ஏற்பாடு செய்த நடிகர் ஜெயராமை கைது செய்து விசாரிக்க, விசாரணை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.


இந்த வழக்கில் ஏற்கனவே முன்னாள் தேவஸ்தான தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பத்மகுமார் கடந்த 20-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பத்மகுமாரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவுக்கு கோர்ட்டு நேற்று அனுமதி வழங்கியது. தங்கம் அபகரிப்பு விவகாரம் தொடர்பாக சபரிமலை அய்யப்பன் கோவிலின் மூத்த தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, கண்டரரு மோகனரு ஆகியோர் சிறப்பு விசாரணை குழு முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

சென்னையை நோக்கி நகரும் புதிய புயல்.! - இந்தோனேசியாவில் கரையைக் கடந்தது ‘சென்யார்’ புயல்

 

பதிவு: வியாழக்கிழமை,  நவம்பர் 27, 2025, கார்த்திகை 11,  விசுவாவசு வருடம் 06-00: AM

சென்னை,

29-ந்தேதி முதல் வட தமிழகத்துக்கு மிக கனமழைக்கான வாய்ப்பிருப்பதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

புதிய புயல்

மலாக்கா ஜலசந்தி பகுதியில் ‘சென்யார்' புயல் உருவானது. இது இந்தோனேசியா கடற்கரையை கடந்து வலுவிழந்து, அதன் ஆற்றல் மட்டும் தென் சீனக் கடல் பகுதிக்கு சென்றது. இந்த புயலினால் எந்த மழை வாய்ப்பும் நமக்கு இல்லை.

இதுதவிர, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு இலங்கை-இந்திய பெருங்கடல் பகுதிகளில் இருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தெற்கு இலங்கை மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று (வியாழக்கிழமை) காலைக்குள் வலுப்பெற உள்ளது.

இதன் தொடர்ச்சியாக நாளை (வெள்ளிக்கிழமை) காலைக்குள் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அன்றைய தினம் நள்ளிரவு வட இலங்கையையொட்டிய கடல் பகுதியில் புயலாகவும் மாற வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

சென்னைக்கு நோக்கி நகர்ந்து...

இதைத்தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் 29-ந்தேதி (சனிக்கிழமை) காலை தமிழ்நாட்டின் டெல்டா கடற்கரைப் பகுதியை வந்தடையும் என்றும், டெல்டா பகுதிகளில் புயலின் முன் பகுதி நுழையும் அதாவது நிலப்பகுதிகளில் ஊடுருவும் என்றும், பின்னர் வடக்கு திசையில் சென்னை நோக்கி நகர்ந்து, 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு சென்னைக்கு அருகில் கரையை கடக்கவோ அல்லது கரைக்கு அருகில் நிலைக்கொள்ளவோ வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

இதன் காரணமாக காவிரி டெல்டா பகுதிகளில் நாளையில் இருந்து 30-ந்தேதி காலை வரையிலும், வருகிற 29-ந்தேதி காலையில் இருந்து அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி வரையில் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பதிவாக வாய்ப்பு இருப்பதாகவே ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

வட தமிழக மாவட்டங்கள்

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மேற்சொன்ன 4 நாட்கள் பரவலாக கன முதல் மிக கனமழையும், புயலின் நகர்வை பொறுத்து பல இடங்களில் அதி கனமழை வரையும் பெய்வதற்கான சூழல் இருப்பதாகவே தற்போது கணிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த பகுதிகளில் மழைக்கான முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

புயல் கரைக்கு அருகே வந்து உருவாவதாலும், நிலப்பரப்பில் ஊடுருவல் இருப்பதாலும் காற்று பாதிப்பு இருக்காது. ஆனால் அதேநேரத்தில் மழைக்கான சூழல் அதிகம் இந்த நிகழ்வில் இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (நவம்பர் 27) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 29-ம் தேதி வரை சூறாவளிக்காற்று அதிகபட்சமாக 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

30-ம் தேதி வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று அதிகபட்சமாக 65 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 8 செமீ, ராமேஸ்வரத்தில் 6 செமீ, மண்டபத்தில் 5 செமீ, தங்கச்சிமடத்தில் 4 செமீ, வாலிநோக்கத்தில் 2 செமீ மழை பதிவாகியுள்ளது என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Featured post

கரூர் நெரிசல் வழக்கில் தவறு நடக்கிறது - பதில் கேட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு - விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம்

பதிவு:  சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025, கார்த்திகை 27,  விசுவாவசு வருடம் 01-40: AM புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்...