பதிவு: வெள்ளிக்கிழமை, நவம்பர் 28, 2025, கார்த்திகை 12, விசுவாவசு வருடம் 04-40: PM
சென்னை,
மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசும் - இன்றும், நாளையும் 9 மாவட்டங்களுக்கு அதிக கனமழை எச்சரிக்கை - மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து தமிழகத்தை நெருங்கும் ‘டிட்வா புயல்’ - 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்தனர்.
திருவாரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மாநில பேரிடர் மேலாண்மை குழுவினரை கலெக்டர் மோகனச்சந்திரன் நேரில் சந்தித்து கலந்துரையாடி, செயல்விளக்க முறையினை பார்வையிட்டார்.
‘டிட்வா புயல்’ மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து தமிழகத்தை நெருங்குகிறது. 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை 11.30 மணியளவில் புயலாக வலுவடைந்து இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த புயலுக்கு ‘டிட்வா' என பெயரிடப்பட்டு உள்ளது. ஏமன் நாடு இந்த பெயரை பரிந்துரைத்து இருக்கிறது.
டிட்வா புயல் தற்போது சென்னைக்கு 530 கி.மீ தூரத்திலும், புதுச்சேரிக்கு 430 கி.மீ தெற்கு தென்கிழக்கு திசையிலும் நிலைகொண்டு இருக்கிறது. இந்நிலையில் 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த டிட்வா புயல் தற்போது 10 கி.மீ வேகத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது வருகிற 30-ந்தேதி அதிகாலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை அடையக்கூடும் என ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் மேலும் கடல் பகுதியிலும் பலத்த காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பேரிடர் மீட்புப் படையினர் விரைந்தனர்
வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த புயலால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே கணிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, இன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என்றும் ராமநாதபுரம், திருச்சி, அரியலூரி, சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பலத்த காற்று வீசுவதால் பாம்பன் பாலத்தில் ரெயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், நாகை, பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகத்தில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகளின் வேண்டுகோளை அடுத்து மீட்புப் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். ஒவ்வொரு தேசிய பேரிடர் மீட்புக் குழுவுக்கும் 30 பேர் வீதம் மொத்தம் எட்டு குழுக்கள் அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டுள்ளனர்.
புதுவைக்கு 60 பேர்
புதுச்சேரிக்கு இரண்டு குழுக்கள் (60 பேர்), தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக, இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மக்களைக் கண்டுபிடித்து காப்பாற்ற உதவும் வகையில் மோப்ப நாய்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் ராணி, மிக்கி, லைக்கா மற்றும் ராம்போ ஆகிய நான்கு பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நாய்கள் பேரிடர்களின் போது இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மக்களைக் கண்டுபிடித்து காப்பாற்றுவதற்கு மீட்புக் குழுவினருக்கு உதவுகின்றன.
பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை
புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்து வருவதால், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மதியம் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை நாளை (சனிக்கிழமை) தமிழக வடமாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும். திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னையில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கரூர், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும்பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வட மாவட்டங்களில் சில இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழையும் பெய்யக்கூடும். அதிகனமழை வரை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையையும் (ரெட் அலர்ட்), மிக கனமழை வரை பதிவாகும் இடங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையையும், கனமழை வரை பெய்யும் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையையும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு, வானிலை ஆய்வு மையம் நிர்வாக ரீதியாக விடுத்து இருக்கிறது.
9 மாவட்டங்களில் கனமழை
அந்த வகையில் இன்றும், நாளையும் 9 மாவட்டங்களில் அதி கனமழை வரை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் இன்றும், நாளையும் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வரை வீசக்கூடும். ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை மறுநாள் வரை மணிக்கு 50 முதல் 80 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ராமேசுவரம்பாம்பன் பாலம் பகுதியில் மணிக்கு 60.07 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதால், ரெயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ராமேசுவரத்தில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு தாம்பரம் நோக்கி புறப்படும் ரெயில் மண்டபத்தில் இருந்து புறப்படும். இதேபோல், ராமேசுவரத்தில் இருந்து இன்று மாலை 5.50 மணிக்கு சென்னை எழும்பூர் நோக்கி புறப்படும் ரெயிலும் மண்டபத்தில் இருந்து புறப்படும் என்றுதெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


