Friday, December 12, 2025

‘ஜெயிலர் – 2’ படப்பிடிப்பில் ‘கேக்’ வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி

 

பதிவு:  வெள்ளிக்கிழமை, டிசம்பர் 12, 2025, கார்த்திகை 26,  விசுவாவசு வருடம் 04-10: PM

சென்னை, 

‘ஜெயிலர்–2’ படப்பிடிப்பு தளத்தில் இன்று தனது 75–வது பிறந்த நாளை நடிகர் ரஜினிகாந்த் கேக் வெட்டி கொண்டாடினார்.

வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார் ரஜினிகாந்த். அவருடன் இயக்குநர் நெல்சன் உள்பட ஜெயிலர் 2 படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டினர்.

ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படையப்பா இன்று ரீ– ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தப் படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கியது. படையப்பா படத்தை பார்க்க தியேட்டர்களில் குவிந்த ரஜினியின் ரசிகர்கள், கட்–அவுட்டுக்கு மாலை அணிவித்து, பால் அபிஷேகம் செய்து, தேங்காய் உடைத்து, ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

சென்னை ரோகினி திரையரங்கில் படையப்பா ரீ–ரிலீஸை லதா ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர் பார்த்தனர். சென்னை காசி திரையரங்கில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பார்த்தார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த வீட்டின் முன் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். ரஜினிகாந்த் ஜெயிலர் படப்பிடிப்பில் இருந்ததால், அவரை காண முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பின் ரசிகர்களை சந்தித்த லதா ரஜினிகாந்த், “ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். படையப்பா படம் ரீ-ரிலிஸ் செய்யப்படுவதற்கு வாழ்த்து தெரிவித்தார். ரசிகர்களை பாதுகாப்பாக வீடு திரும்ப லதா ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார்.

சென்னையில் சாலையில் படுத்து மறியல் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: கைது குண்டுகட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றிய போலீசார்

 

பதிவு:  வெள்ளிக்கிழமை, டிசம்பர் 12, 2025, கார்த்திகை 26,  விசுவாவசு வருடம் 04-00: PM

சென்னை, 

சென்னை மெரீனா கடற்கரை கருணாநிதி நினைவிடம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளும் பணி, மற்றும் பெண் தூய்மை பணியாளர்கள் மூலமாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி ஆகியவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் காரணமாக துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 2000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இப்படி தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு மண்டலங்களிலும் தனியார் மயமாக்கப்பட்டதை கைவிட்டு விட்டு பழைய முறைப்படியே குப்பை அள்ளும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதனால் அம்பத்தூர் மண்டலத்தில் குப்பை அள்ளும் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் வெளி மண்டலத்தில் இருந்து தூய்மை பணியாளர்களை வரவழைத்து பணிகள் செய்யப்பட்டன. இதற்கிடையில், கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு அண்ணா தி.மு.க., த.வெ.க. நாம் தமிழர் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

இந்த போராட்டம் 13வது நாளை கடந்த நிலையில் சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் கட்டிடத்திற்கு வெளியே போராட்டம் நடத்தி வரும் துப்புரவுத் தொழிலாளர்களை வெளியேற்றுமாறு சென்னை ஐகோர்ட் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அங்கிருந்து தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக அவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டம் 100 நாட்களையும் கடந்து நீடித்து வந்தது.

இந்நிலையில் இன்று காலை சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் அருகே ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் குவிந்தனர். திடீரென அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து அங்கு குவிந்திருந்த போலீசார் தூய்மைப் பணியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் அங்கிருந்த செல்ல மறுத்தனர். இதனால் போலீசார் தூய்மைப் பணியாளர்களை வலுக்கட்டமாக குண்டுகட்டாக தூக்கி சென்று வேனில் ஏற்றி தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி சிறிது பரபரப்பாக காணப்பட்டது. மேலும் போராட்டத்தால் காமராஜர் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தலைமைச் செயலகம் முன்பு போராட்டம்

இதற்கிடையில், சென்னை தலைமையகம் முன்வு 30க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தப்படுத்த முயன்றனர். ஆனால் போரட்டக்காரர்கள் தரையில் படுத்துக் கொண்டு போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Featured post

கரூர் நெரிசல் வழக்கில் தவறு நடக்கிறது - பதில் கேட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு - விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம்

பதிவு:  சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025, கார்த்திகை 27,  விசுவாவசு வருடம் 01-40: AM புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்...