Friday, November 21, 2025

Middle Class Movie Team Press Meet at Madurai

வில்லங்க சான்றிதழ் போல இனி பட்டா வரலாற்றையும் தெரிந்து கொள்ளலாம் - தமிழக அரசு

 

பதிவு: வெள்ளிக்கிழமை,  நவம்பர் 21, 2025, கார்த்திகை 05,  விசுவாவசு வருடம் 10-30: AM

சென்னை,

சொத்து பற்றிய உரிமை விவரங்களை மக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒரு காலத்தில் சொத்துக்கு பட்டா வாங்குவது என்பது குதிரை கொம்பாக இருந்தது. ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை காரணமாக இப்போது அது எளிதாகிவிட்டது.

அதாவது https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் எளிதாக பட்டா பெற்றுக்கொள்ளலாம். அதேபோல இப்போது பத்திரப்பதிவு செய்தவுடன் உட்பிரிவு இல்லாத சொத்துகளுக்கு உடனடி பட்டா மாறுதலும் செய்யப்படுகிறது.

தற்போது சொத்து பற்றிய உரிமை விவரங்களை மக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், தமிழக அரசின் வருவாய்த்துறை புதிய ஆன்லைன் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.

அதன்படி ஒரு சொத்தின் உரிமையாளர் யார், அவரது பெயர் என்ன? இதற்கு முன்பு இந்த சொத்து யார் பெயரில் இருந்தது? அதோடு வங்கியில் இந்த சொத்து அடமானத்தில் இருக்கிறதா? இந்த சொத்தின் மீது என்னென்ன பறிமாற்றங்கள் நடந்து இருக்கிறது என்பதை பத்திரப்பதிவு துறை வழங்கும் வில்லங்கச் சான்றிதழ் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

அதே நேரத்தில் ஒரு சொத்தின் தற்போதைய உரிமையாளரை வருவாய்த்துறை மூலம் பட்டா மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் பட்டாவில், பத்திரப்பதிவுத்துறை வழங்கும் வில்லங்க சான்றிதழ் போல் அனைத்து விவரங்களையும், பரிமாற்றங்களையும் தெரிந்துகொள்ள முடியாது. ஆனால் தமிழக அரசு, அதற்கு தீர்வு காணும் வகையில் தற்போது‘‘பட்டா வரலாறு" என்ற புதிய சேவையை பொதுமக்களுக்காக கொண்டு வந்துள்ளது.

இதன் மூலம், அந்த நிலத்தின் முன்பிருந்த பட்டா வைத்திருந்தவர்களின் பெயர்கள், பெயர் எப்போது மாற்றப்பட்டது, எந்த ஆணையின் பேரில் மாற்றம் நடைபெற்றது, பட்டா எந்த காலக்கட்டத்தில் யாரிடம் இருந்தது போன்ற விவரங்களை முழுமையாக தெரிந்துகொள்ள முடியும்.

இந்த பட்டாவுக்கு வில்லங்க சான்றிதழ் பெறும் நடைமுறை அடுத்த வாரம் முதல் சோதனை அடிப்படையில் தொடங்குகிறது. முதல்கட்டமாக ஒரு தாலுகாவில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

மேலும் இந்த பட்டா வில்லங்க சான்றிதழ் பெற பொதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டும். சோதனை முறை வெற்றி பெற்றுவிட்டால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவார். மேலும் தற்போதைய நிலையில் இந்த பட்டா வரலாறு 2014-ம் ஆண்டு முதல்தான் இப்போதைக்கு எடுக்க முடியும்.

10வது முறையாக பிஹார் முதல்வராக நிதிஷ்குமார் பதவி ஏற்றார் - பிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா நேரில் வாழ்த்து

 






பதிவு: வியாழக்கிழமை,   நவம்பர் 20, 2025, கார்த்திகை 04,  விசுவாவசு வருடம் 07-00: AM


பாட்னா,

பிஹார் முதல்வராக, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் 10வது முறையாக நேற்று பதவியேற்றார். நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நட்டா மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர் .

பிஹாரில் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு, இரண்டு கட்டங்களாக கடந்த 6 மற்றும் 11ல் தேர்தல் நடந்தது. இதில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இந்த கூட்டணி, 202 தொகுதிகளை கைப்பற்றியது. பா.ஜ., 89 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களிலும் வெற்றி பெற்றன.

கூட்டணி கட்சிகளான லோக் ஜனசக்தி - ராம்விலாஸ் பஸ்வான் 19; ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 5; ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா 4 தொகுதி களிலும் வென்றன.

இதையடுத்து, பிஹார் முதல்வராக, 10வது முறையாக நிதிஷ் குமார் நேற்று பதவி ஏற்றார். பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு, கவர்னர் ஆரிப் முகமது கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நிதிஷ் உடன், பா.ஜ., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 26 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். முந்தைய ஆட்சியில் துணை முதல்வர்களாக இருந்த பா.ஜ.,வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய்குமார் சின்ஹா உட்பட அக்கட்சியைச் சேர்ந்த 14 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த எட்டு பேருக்கும், லோக் ஜனசக்தியைச் சேர்ந்த இருவருக்கும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவருக்கும் அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நட்டா,

பா.ஜ.,வைச் சேர்ந்த உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், வடகிழக்கு மாநிலமான அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், டில்லி முதல்வர் ரேகா குப்தா, தே.ஜ., கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வரலாறு காணாத வெற்றியை தந்த பீஹார் மக்களுக்கு, பிரதமர் மோடி, முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் தே.ஜ., கூட்டணி தலைவர்கள் நன்றி தெரிவித்தனர்.

நிதிஷ் குமார் தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றதை அடுத்து, பா.ஜ.,வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய்குமார் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டனர். முதல்வர் நிதிஷ் உட்பட பதவியேற்ற அனைவருக்கும், பிரதமர் மோடி தன் சமூக வலைதளத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மவுனம் கலைத்த தேஜஸ்வி 

பிஹாரில் புதிய அரசு பதவியேற்றதற்கு, முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் வாழ்த்து தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலில் அக்கட்சி படுதோல்வியை சந்தித்த நிலையில், இதுவரை வாய் திறக்காமல் இருந்த அவர் நேற்று மவுனம் கலைத்தார். 

அவர் தன் சமூக வலைதளத்தில், 'முதல்வராக பொறுப்பேற்ற நிதிஷ் குமார் உள்ளிட்டோருக்கு வாழ்த்துகள். 

புதிய அரசு, மக்களின் நம்பிக்கைகள் மற்றும் எதிர்ப்பார்ப்புகளையும், அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் என நம்புகிறேன். அதேசமயம், பிஹார் மக்களின் வாழ்க்கையில், நேர்மறையான மற்றும் தரமான மாற்றங்களை கொண்டு வரும் என்றும் நம்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் சாதனையை முறியடித்த நிதிஷ் குமார் 

கடந்த 2000 மார்ச் துவங்கி இதுவரை பல்வேறு ஆட்சிக் காலங்களில், 19 ஆண்டுகள் ஆட்சி செய்த பெருமையை நிதிஷ் பெற்றுள்ளார். இதன் வாயிலாக, நாட்டில் நீண்ட காலம் முதல்வர்களாக இருந்த முதல் 10 பேர் அடங்கிய பட்டியலில் இவர் இடம் பிடித்துள்ளார். 

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, பல்வேறு ஆட்சிக் காலத்தின் வாயிலாக, 18 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்த நிலையில், அவரின் சாதனையை நிதிஷ் முறியடித்துள்ளார்.

அரசு நிலத்தை அரசுக்கே விற்று மோசடி - ரூ.18.10 கோடி சொத்துக்கள் முடக்கம்

 

பதிவு: வெள்ளிக்கிழமை,  நவம்பர் 21, 2025, கார்த்திகை 05,  விசுவாவசு வருடம் 06-30: AM

சென்னை,

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் 'சிப்காட்' விரிவாக்கத்திற்கு, அரசு நிலத்தை அரசுக்கே விற்று இழப்பீடு பெற்றதில் நடந்த சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, 15 இடங்களில் சோதனை நடத்தி, 18.10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு, பீமந்தாங்கல் கிராமத்தில், அரசு அனாதீன நிலங்களுக்கு முறைகேடாக பட்டா பெற்று, அவற்றை அரசுக்கே விற்று, 33 கோடி ரூபாய் இழப்பீடு பெறப்பட்டு உள்ளது.

இழப்பீடு நெமிலி கிராமத்தில், 2.24 லட்சம் சதுரடி உடைய ஓ.எஸ்.ஆர்., எனப்படும், அரசு நிலங்களுக்கு பத்திரம் பதிவு செய்தும், வல்லம், வடகால் கிராமங்களில், 'சிப்காட்' தொழிற்சாலை பகுதியில் உள்ள ஓ.எஸ்.ஆர்., எனப்படும் அரசு நிலங்களுக்கு, போலி பத்திரம் தயாரித்தும், 21 கோடி ரூபாய் மோசடியாக இழப்பீடு பெறப் பட்டுள்ளது.

வடகால் கிராமத்தில், 'வி.ஜி.பி., ஹவுசிங் டெவலப் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனம், அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைப்பிரிவில் அமைந்துள்ள, சாலை, பூங்கா பரப்பான, 7.25 லட்சம் சதுரடி இடத்தை அரசுக்கு விற்று, 21.08 கோடி ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளது.

இந்த மோசடி தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட போலீசார், நில எடுப்பின் போது, மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த ராஜேந்திரன், தாசில்தார் எழில்வளவன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், தனி நபர்கள் என, 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

அதன் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இவ்வழக்கு தொடர்பாக, சென்னை ஸ்ரீநகர் காலனியில் வசித்து வரும், ரியல் எஸ்டேட் அதிபர் கலைச்செல்வன் வீடு உட்பட, 15 இடங்களில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.

ஆய்வு அப்போது சிக்கிய ஆவணங்களை ஆய்வு செய்ததில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் சிப்கார்ட் விரிவாக்கம் நடப்பதை முன் கூட்டியே அறிந்து, போலி ஆவணங்கள் வாயிலாக, நிலத்தின் சந்தை மதிப்பை உயர்த்தி காட்டி, அரசிடம் இருந்து கோடிக்கணக்கில் இழப்பீடு பெற்று மோசடி செய்திருப்பது,உறுதி செய்யப்பட்டது.

இதில், வி.ஜி.பி., குழுமத்தைச் சேர்ந்த ராஜேஷ், முக்கிய பங்கு வகித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.

சோதனையில் சிக்கிய, 1.56 கோடி ரூபாய், 74 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், 8.40 கோடி ரூபாய் வங்கி இருப்பு, 7.40 கோடி ரூபாய்க்கான பங்கு பத்திரங்கள் என, 18.10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.

குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம் விளக்கம் - முழு விவரம்

 

பதிவு: வெள்ளிக்கிழமை,  நவம்பர் 21, 2025, கார்த்திகை 05,  விசுவாவசு வருடம் 06-00: AM

புதுடெல்லி,

சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு ஆளுநர்களுக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக் கெடு விதிக்க அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை. அதேநேரம், மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு 3 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. கருத்து வேறுபாடுகள் இருந்தால் மாநில அரசுடன் பேசித் தீர்க்க வேண்டும். முடிவெடுக்காமல் மசோதாக்களை நீண்டகாலம் நிறுத்தி வைக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விளக்கம் அளித்துள்ளது.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து விளக்கம் கோரி உச்ச நீதிமன்றத்துக்கு 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எழுப்பியிருந்தார். இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட், செப்டம்பரில் 10 நாட்கள் விசாரித்தது. மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி ஆகியோர் வாதிட்டனர்.

அனைத்துத் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்த விவகாரத்தில் குடியரசுத் தலைவரின் கேள்விகள் மீதான விளக்கத்தை உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்திருந்தது. இந்நிலையில், குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று விளக்கம்அளித்துள்ளது.

அதன் விவரம்: மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் அல்லது மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்துசட்டப்பேரவைக்கு கருத்துகளுடன் திருப்பி அனுப்ப வேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தில் இந்த 3 வாய்ப்புகள் மட்டுமே ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளன.ஆளுநர் பொதுவாக அமைச்சரவையின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும். இருப்பினும், அவர் தன் விருப்புரிமை அடிப்படையில் செயல்படவும் அரசமைப்புச் சட்டம் அதிகாரம் தந்துள்ளது. இதன்படி, மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பலாம் அல்லது கருத்துகளுடன் பேரவைக்கு திருப்பி அனுப்பலாம்.

விசாரணைக்கு உட்பட்டவர்தான்மசோதாக்கள் மீது ஆளுநர் எடுக்கும் முடிவுகளை நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு உட்படுத்த முடியாது. உரிமையியல் வழக்கு தொடர விலக்கு அளித்துள்ள அரசமைப்புச் சட்டத்தின் 361-வது பிரிவை, மசோதா விவகாரத்தில் ஆளுநர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு முகாந்திரமாகக் கொள்ள முடியாது.

ஆளுநர்களுக்கு எதிராக வழக்கு தொடர அரசமைப்புச் சட்டம் விலக்குரிமை அளித்திருந்தாலும், அவர் உச்ச நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டவர்தான். ஆளுநரை நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்பது, குடியரசுத் தலைவருக்கும் பொருந்தும்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் தர, அரசமைப்புச் சட்டத்தில்காலக் கெடு விதிக்காதபோது, தமிழ்நாடு வழக்கில் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுநர்களுக்கு காலக் கெடு விதித்தது பொருத்தமாக இல்லை.இதுபோல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்க அரசமைப்புச் சட்டத்தில் இடம் தரப்படவில்லை.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் குடியரசுத் தலைவரின் விருப்பமே போதுமானது. இருப்பினும், மசோதா குறித்த தெளிவற்ற நிலை இருந்தாலோ, உச்ச நீதிமன்ற ஆலோசனை தேவை என்ற பட்சத்திலோ விளக்கம் கேட்டுப் பெறலாம்.

மசோதா சட்டமாகும் முன்னரே, அதுகுறித்த ஆளுநர்களின் அல்லது குடியரசுத் தலைவரின் முடிவுகளை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த முடியாது. மசோதா சட்டமாகும் முன்பு, அதன் சாராம்சங்களை நீதிமன்றங்கள் விசாரிக்க முடியாது.

‘ஆளுநர்கள், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காத மசோதாக்கள், உச்ச நீதிமன்றம் சிறப்புஅதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்ததாக கருதப்படும்’ என்று உத்தரவிட முடியாது. இவ்வாறு, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்ததாக கருதப்படும் என்று அளிக்கப்படும் தீர்ப்பு, நிர்வாகப் பணிகளை நீதித்துறை எடுத்துக் கொள்வதாகிவிடும் என்பதால் அனுமதிக்க முடியாது.

ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசின் மசோதா சட்டமாகாது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் ஆளுநரின் பணியை வேறு எந்த ஒரு அமைப்பும் பறிக்க முடியாது. அரசமைப்புச் சட்டம் தொடர்பான வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வுதான் விசாரிக்க வேண்டுமா என்ற கேள்விக்கு உச்ச நீதிமன்றம் பதில் அளிக்கவில்லை.

அரசமைப்புச் சட்டத்துக்கு முரணாக உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவிட முடியுமா என்ற கேள்விக்கு, ‘உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரம் பரந்துபட்டது. இதற்கான பதில் 10-வது கேள்வியில் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய - மாநில அரசுகள் இடையிலான பிரச்சினையை மூல வழக்கின்றி வேறு வகையில் தீர்க்க உச்ச நீதிமன்றத்தை அரசமைப்புச் சட்டம் தடுக்கிறது என்ற கேள்வி பொருத்தமற்றது என்பதால் பதில் அளிக்கவில்லை. இவ்வாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Featured post

கரூர் நெரிசல் வழக்கில் தவறு நடக்கிறது - பதில் கேட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு - விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம்

பதிவு:  சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025, கார்த்திகை 27,  விசுவாவசு வருடம் 01-40: AM புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்...