Monday, November 24, 2025

வங்கக்கடலில் 'சென்யார்' புயல் உருவாக வாய்ப்பு - 11 மாவட்டத்தில் இன்று மழை

 

பதிவு:  திங்கள்கிழமை,  நவம்பர் 24, 2025, கார்த்திகை 08,  விசுவாவசு வருடம் 06-45: AM

சென்னை,

'அந்தமான் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை மறுநாள் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 26 செ.மீ., மழை பெய்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, அதே மாவட்டம் ஊத்து 25; காக்காச்சி 23; மாஞ்சோலை 21; துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார், குலசேகரன்பட்டினத்தில் தலா 13; துாத்துக்குடி மாவட்டம் கயத்தாறு 11; காயல்பட்டினம் 10; அதே மாவட்டம் சாத்தான்குளம், தென்காசி மாவட்டம் ஆய்க்குடி மற்றும் செங்கோட்டையில், தலா 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில், நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. நேற்று காலை நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.

இன்று, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையலாம். தொடர்ந்து அதே திசையில் நகர்ந்து, நாளை மறுநாளான 26ம் தேதி, புயலாக வலுவடைய வாய்ப்புள்ளது.

குமரிக்கடல் மற்றும் நிலநடுக்கோட்டை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, குமரிக்கடல் மற்றும் இலங்கை, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால், தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று, இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். கடலோர மாவட்டங்களில் சில இடங்களில், இன்று பலத்த தரைக்காற்று வீசக்கூடும். தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், வரும் 29 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் இன்று ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தெற்கு அந்தமான் கடல், வடக்கு அந்தமான் கடல், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் இன்று கரைக்கு திரும்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'சென்யார்' என்றால் சிங்கம்

வங்கக்கடலில் அந்தமான் பகுதியில், தற்போது நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, படிப்படியாக வலுவடைந்து, வரும் 26ல் புயல் உருவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு உருவாகும் புயலுக்கு, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமி ரேட்ஸ் பரிந்துரைப்படி, 'சென்யார்' என பெயரிடப்பட்டுள்ளது. அரபு மொழியில், 'சென்யார்' என்றால் சிங்கம் என்று பொருள். எனினும், குமரிக்கடல் பகுதியில் நாளை புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையின் நகரும் திசை, தன்மையை பொறுத்தே புதிய புயல் அமையும்.

மாவட்ட நிர்வாகங்கள் உஷாராக இருக்க 'அட்வைஸ்' தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு

'தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று மிக கனமழை பெய்யக்கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அத்துடன் கடலுார், அரியலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், மிதமானது முதல் கனமழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மாவட்டங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் அறிவுத்தப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் இரண்டு அணியினர் துாத்துக்குடி மாவட்டத்திலும், ஒரு அணியினர் திருநெல்வேலி மாவட்டத்திலும் மீட்பு மற்றும் நிவாரண பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

“தவெகவினர் தற்குறிகள் அல்ல.. அரசியல் மாற்றத்திற்கான அறிகுறி..” - மக்கள் சந்திப்பில் விஜய் பரபரப்பு

 

பதிவு:  திங்கள்கிழமை,  நவம்பர் 24, 2025, கார்த்திகை 08,  விசுவாவசு வருடம் 06-30: AM

காஞ்சிபுரம்,

நான் சும்மா எதையும் சொல்ல மாட்டேன்.. ஒன்னு சொன்னா அதை செய்யாம விட மாட்டேன் என்று மக்கள் சந்திப்பில் விஜய் கூறினார்.

தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. தீவிரமாக தயாராகி வருகிறது. கரூர் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் மக்கள் சந்திப்பை விஜய் இன்று தொடங்கி இருக்கிறார்.

முன்னதாக சேலத்தில் இருந்து மக்கள் சந்திப்பை தொடங்க இருந்தார். ஆனால் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அந்த பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி வளாக உள் அரங்கத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்நிலையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது:-

நாட்டிற்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார், பொதுநலத்தில் தானே நாள் முழுவதும் கண்ணாய் இருந்தார் என்ற எம்.ஜி.ஆர். பாடலை அனைவரும் கேட்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட தலைவரான அறிஞர் அண்ணா பிறந்த இடம்தான் இந்த காஞ்சிபுரம் மாவட்டம். தன்னுடைய வழிகாட்டி என்பதால், தனது கட்சியின் கொடியில் அறிஞர் அண்ணாவை வைத்தார் எம்.ஜி.ஆர்.

ஆனால் அறிஞர் அண்ணா ஆரம்பித்த அந்த கட்சியை, அதன் பிறகு கைப்பற்றியவர்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். தனிப்பட்ட முறையில் தி.மு.க.வுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. அவர்கள் வேண்டுமானால் நம் மீது வன்மத்தோடு இருக்கலாம், ஆனால் நாம் அப்படி இல்லை.

காஞ்சிபுரம் பாலாற்றில் சுமார் 22 லட்சம் யூனிட் மணலை கொள்ளையடித்திருக்கின்றனர். இதன் மூலம் சுமார் ரூ.4,730 கோடி மதிப்பிலான பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.

நம்மிடம் பொய் சொல்லி ஏமாற்றி ஆட்சிக்கு வந்து நல்லது செய்வதுபோல் நடிப்பவர்கள் நாம் எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்? இதை காஞ்சி மண்ணில் இருந்து நான் சொல்வதற்கு காரணம், நமது முதல் களப்பயணம் தொடங்கியதே பரந்தூரில் இருந்துதான். அந்த மக்களுக்காக நாம் கேள்விகளை கேட்டதும் இதே மண்ணில் இருந்துதான். இன்று ஒரு பெரிய மனவேதனைக்கு பிறகு மக்கள் சந்திப்பு நிகழ்சிக்கு நான் வந்திருக்கும் இடமும் அதே காஞ்சிபுரம் மாவட்டம்தான்.

60 வருடத்துக்கு முன்பு கட்டியது தான் காஞ்சிபுரம் பேருந்து நிலையம். இன்னும் அதை புதுப்பிக்கவில்லை. கேட்டால் அந்த இடத்தில் வழக்கு உள்ளது என்பார்கள். அரசாங்கத்தால் வேறு இடத்தில் பேருந்து நிலையம் அமைத்து தர முடியாதா? அவர்களுக்கு மக்கள் குறித்து சிந்திக்க நேரமில்லை. வாலாஜா பாத் அருகில் அவளூர் ஏரி உள்ளது. அங்கு தடுப்பணை கட்ட வேண்டும்.

இதே காஞ்சிபுரத்தில் தான் பரந்தூர் விமான நிலையம் கட்டும் பிரச்சினை உள்ளது. இதில் நாங்கள் விவசாயிகள் உடன் நிற்போம். அதில் சந்தேகம் இல்லை. அரசு இதிலிருந்து தப்பிக்க முடியாது. சட்டசபை தொடங்கி சாதாரண நிகழ்ச்சி வரை தவெகவை தான் ஆட்சியாளர்கள் குறிவைக்கிறார்கள். தவெக ஆட்சிக்கு வந்தால்.. வருவோம்.. மக்கள் நம்மை வரவேற்பார்கள்.

நமக்கு எல்லாவற்றையும் கொடுத்த மக்களுக்காக நாம் எல்லா நல்லதையும் செய்ய வேண்டும், அதையும் சட்டப்பூர்வமாக, மனப்பூர்வமாக, அங்கீகாரத்துடன், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் செய்ய வேண்டும் என்ற லட்சியத்தில்தான் நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். அதனால் தான் மக்களிடம் செல் என்று சொன்ன அண்ணாவை கையில் எடுத்தோம்.

நமக்கு கொள்கை இல்லை என்று தமிழக முதல்-அமைச்சர் சொல்கிறார். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற தத்துவத்தை நமது கட்சியின் அடிப்படை கோட்பாடாக அறிவித்த நமக்கு கொள்கை இல்லையா? சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொன்ன நமக்கு கொள்கை இல்லையா? சி.ஏ.ஏ. அறிவிப்பை எதிர்த்த நமக்கு, வக்பு சட்டத்தை எதிர்த்த நமக்கு கொள்கை இல்லையா? வக்பு சட்டத்தை எதிர்த்த நமக்கு கொள்கை இல்லையா? கல்வியை மாநில பட்டியலுக்கு சேர்க்க கூறியும், அதற்கு இடைக்கால தீர்வு கூறிய நமக்கு கொள்கை இல்லையா? சமத்துவம் சம வாய்ப்பு வழங்க கோரிய நமக்கு கொள்கை இல்லையா?

நீட்டை ஒழித்துவிடுவோம் என்று கதை விடாமல், கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று சொன்னதோடு, அதற்கு ஒரு இடைக்கால தீர்வையும் சொன்ன நமக்கு கொள்கை இல்லையா? இவர்கள் மட்டும்தான் எல்லா கொள்கையையும் குத்தகைக்கு எடுத்தது போல் பேசுகிறார்கள். தி.மு.க.வின் கொள்கையே கொள்ளைதான். இதெல்லாம் மக்களுக்கு தெரியாது என்று நினைத்துக் கொண்டார்களா?

கட்சி ஒன்றும் சங்கரமடம் இல்லை என சொன்னது யார்? அதை யார் சொன்னார்? எதற்கு சொன்னார்? இப்போது கட்சியில் என்ன நடக்கிறது என்பதை யோசித்து பாருங்கள். அதனால் பவள ​விழா பாப்பா. நீ பாசாங்கு காட்​டாதே பாப்​பா. நீ நல்​ல​வர் போல நடிப்​ப​தைப் பார்த்து நாடே.. (வாய் மூடி சைகை காட்டி சிரிக்கிறார்) .. பாப்​பானு ஆசையா, பாசமா, சாப்ட்டா தான் சொன்னோம். ஆனா அதையே விமர்சனமா எடுத்துக்கிடா எப்படி.. நாங்க இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவே இல்லையே. அதுக்குள்ள அலறுனா எப்படி? அதனால் உங்களின் அரசவை புலவர்கள் இருந்தால், கர்சீப் கொண்டு அவர்கள் கண்ணீரை துடைத்துவிடுங்கள்.

ஆட்சிக்கு வந்தால்... விஜய் வாக்குறுதிகள்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.. வந்தால் என்ன.. கண்டிப்பாக வருவோம்.. தவெக ஆட்சிக்கு வந்தால் பல சீர்திருத்தம் அமலுக்கு வரும். தவெக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை. அனைவருக்கும் நிரந்தரமான வீடு, இருசக்கர வாகனம், வீட்டுக்கொரு பட்டதாரி இருக்கும் வகையில் கல்வி சீரமைப்பு. ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு நிரந்தர வருமானம், உண்மையான பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்படும். சட்டம் - ஒழுங்கு சிறப்பாக செயல்படுத்தப்படும்.

மீனவர்கள், நெசவாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கருத்து கேட்டு அதனை செயல்படுத்துவோம். அண்ணா பல்கலைகழகம், கோவை போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்படும். இதை செயல்படுத்துவது குறித்து தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்படும்.

நாங்கள் கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார் என்று அறிவித்து விட்டு தான் வந்திருக்கிறோம். கரூர் விவகாரம் பத்தி பேசுவோம்னு நினைச்சிருப்பாங்க. அத நான் அப்புறம் பேசுறேன்.

தவெக தொண்டர்களை தற்குறி என்கிறார்கள்.. தவெகவினர் தற்குறிகள் கிடையாது.. தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சர்யக்குறிகள்.. அரசியல் மாற்றத்திற்கன அறிகுறி.. இந்த தற்குறிகள் எல்லாம் ஒண்ணா சேர்ந்துதான் வாழ்நாள் முழுக்க, விடையே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உங்க அரசியலையே கேள்விக்குறியாக்கப் போறாங்க.. விஜய் எதையும் சொல்ல மாட்டான்.. ஒன்னு சொன்னா அதை செய்யாம விட மாட்டான். ஏன்டா இந்த விஜயை தொட்டோம். ஏன்டா விஜய்கூட இருக்குற இந்த மக்களை தொட்டோம் என நினைச்சு நினைச்சு பீல் பண்ணப் போறீங்க..

இவ்வாறு அவர் பேசினார்.

பதிவேற்றப்பட்ட வாக்காளர்கள் விபரம் இணையத்தில் வெளியீடு

 

பதிவு:  திங்கள்கிழமை,  நவம்பர் 24, 2025, கார்த்திகை 08,  விசுவாவசு வருடம் 05-45: AM

சென்னை,

கணக்கெடுப்பு படிவம் பதிவேற்றப்பட்ட வாக்காளர்களின் விபரங்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை, இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக, கடந்த 4ம் தேதி முதல் வரும், 4ம் தேதி வரை, வாக்காளர் கணக்கெடுப்பு பணி நடக்கிறது.

இப்பணியில், 68,470 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளனர். தமிழகத்தில், 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில், 6.15 கோடி பேருக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டு உள்ளது. இது, 95.6 சதவீதம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள், நேற்று வரை 2.59 கோடி பேரிடம் பெறப்பட்டு, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. இது, 40.4 சதவீதம்.

வாக்காளர்கள் பூர்த்தி செய்து வழங்கிய கணக்கீட்டு படிவங்கள், 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்யப்பட்டதா என்ற விவரத்தை, தேர்தல் ஆணையத்தின், https://voters.eci.gov.in/login இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

அதில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி கணக்கெடுப்பு படிவம் பூர்த்தி செய்வதை கிளிக் செய்து, மாநிலத்தை தேர்வு செய்து, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிட்டால், கணக்கெடுப்பு படிவம் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம்.