Sunday, November 23, 2025
Arjun Sampath says, Vijay - DMK's "Tool Kit" for 2026 elections
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - டெல்டா உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
பதிவு: ஞாயிறுக்கிழமை, நவம்பர் 23, 2025, கார்த்திகை 07, விசுவாவசு வருடம் 05-45: AM
சென்னை,
அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக டெல்டா உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 23) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியருப்பதாவது: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மத்திய ரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.
இது, வடமேற்கு திசையில் நகர்ந்து, 24-ம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும்.
இதன் காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும், நாளை மறுதினமும் ஒருசில இடங்களிலும், 25 முதல் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, கடலூர், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகியவற்றில் ஓரிரு இடங்களிலும், 24-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களிலும், 25-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும் இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 12 செமீ, நாலுமுக்கில் 11 செமீ, காக்காச்சி, மாஞ்சோலையில் தலா 9 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் மைலாடியில் 7 செமீ, சிற்றாறு, கன்னியாகுமரி, சிவகங்கையில் தலா 6 செமீ, கடலூர் மாவட்டம் லால்பேட்டை, கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Subscribe to:
Comments (Atom)
-
பதிவு: திங்கள்கிழமை, அக்டோபர் 27, 2025, ஐப்பசி 10, விசுவாவசு வருடம் 04-15: AM சென்னை, 'வங்கக்கடலில் அந்தமான் தீவுகள் அருகே நிலை கொண்டி...
