Thursday, November 6, 2025

பீகாரில் இன்று முதல்கட்ட தேர்தல் - 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு

 


பதிவு: வியாழக்கிழமை, நவம்பர் 06, 2025, ஐப்பசி 20, விசுவாவசு வருடம் 05-40: AM

பாட்னா,

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிவடைகிறது

பீகார் சட்டசபை தேர்தல் 6-ந் தேதி (இன்று), 11-ந் தேதி என 2 கட்டங்களாக நடக்கிறது. 121 சட்டசபை தொகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல்கட்ட தேர்தல் நடக்கிறது. கடந்த சில நாட்களாக பரபரப்பாக நடந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

121 தொகுதிகளில் மொத்தம் 3 கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 10 லட்சத்து 72 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள். அவர்களில் 7 லட்சத்து 38 ஆயிரம் பேர் 18 மற்றும் 19 வயதானவர்கள் ஆவர்.மொத்தம் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 122 பெண் வேட்பாளர்களும், ஒரு திருநங்கை வேட்பாளரும் அடங்குவர்.

வேட்பாளர்களில் இந்தியா கூட்டணி முதல்-மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் (ரகோபூர் தொகுதி), அவருடைய அண்ணன் தேஜ்பிரதாப் யாதவ் (மஹுவா) மற்றும் துணை முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி (தாராபூர்), விஜய்குமார் சின்ஹா (லக்கிசாரை) உள்பட 16 மந்திரிகள் ஆகியோர் முக்கியமான வேட்பாளர்கள் ஆவர்.மொத்தம் 45 ஆயிரத்து 341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் கிராமப்புற பகுதிகளில் அமைந்துள்ளன.

காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைகிறது. மாலை 5 மணிக்கு வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

முதல்கட்ட தேர்தலையொட்டி, பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 1,650 கம்பெனி பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். முக்கிய கட்டிடங்களிலும் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குச்சாவடிகள் மற்றும் அவற்றை சுற்றிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குற்றப்பின்னணி கொண்டவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக போலீஸ் டி.ஜி.பி. வினய்குமார் தெரிவித்தார். 348 பார்வையாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

2026 தேர்தலில் தவெகவிற்கு 100 சதவீத வெற்றி நிச்சயம் - சிறப்பு பொதுக்குழுவில் விஜய் பேச்சு

 


பதிவு: வியாழக்கிழமை, நவம்பர் 06, 2025, ஐப்பசி 20, விசுவாவசு வருடம் 05-30: AM

சென்னை, 

2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. முதல்வர் வேட்பாளர் விஜய் என்று நேற்று நடந்த தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டணி குறித்து முடிவு எடுக்க பொதுக்குழுவில் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; விவசாயிகள் விரோத அரசாக தி.மு.க. அரசு செயல்படுகிறது.

‘ஊழல் – அவதூறு – அராஜகம்’ என்ற அடிப்படையிலேயே தி.மு.க. செயல்படுகிறது என்று தி.மு.க.வுக்கு பொதுக்குழு கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அவர் மீது அரசியல் கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தன. தொடர்ந்து மவுனம் சாதித்து வந்த விஜய், கரூர் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கியதோடு, அவர்களை மாமல்லபுரத்திற்கு நேரில் அழைத்து தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதன்பின்னர் த.வெ.க. அன்றாட அரசியல் நிகழ்வுகளில் கவனம் செலுத்தியது. கட்சியின் அன்றாடப்பணிகளை மேற்கொள்ள பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட 28 பேர் கொண்ட நிர்வாகக்குழுவை விஜய் நியமித்தார். த.வெ.க. சார்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வக்கீல்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக தொண்டரணி, மகளிரணி, இளைஞரணி, மாணவரணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.இதுதவிர விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூட்ட மேலாண்மையை கடைப்பிடித்து விரும்பத்தகாத நிகழ்வுகளை தடுப்பதற்காக 2,500 இளைஞர்களை கொண்ட மக்கள் பாதுகாப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி. ரவிக்குமார் மற்றும் ஓய்வுபெற்ற போலீசார் பயிற்சி அளித்தனர்.

கடுமையான சோதனை

கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் பொதுவெளியில் நிகழ்ச்சிகளில் எதுவும் பங்கேற்காமல் இருந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் த.வெ.க.வின் அடுத்த கட்ட நடவடிக்கை, சட்டசபை தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது.

நுழைவு வாயிலில் காலை 9 மணியில் இருந்து ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் அழைப்பு கடிதம், கார் பாஸ் மற்றும் கட்சி அடையாள அட்டை, காண்பித்து முதல் கட்ட சோதனையாக, கூட்டம் நடைபெறும் அரங்கத்திற்கு சென்றனர். பின்னர் அடையாள அட்டையில் உள்ளவர் பெயரை உறுதி செய்ய 2-ம் கட்ட சோதனையாக ஆதார் போன்ற அரசு அடையாள அட்டைகளை காண்பிக்க கூறி வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். 3-ம் கட்ட இறுதி சோதனையாக அவர்களது தொகுதி, மாவட்டம், பொறுப்பு உள்ளிட்ட விபரங்களை எழுதி வாங்கி பின்னர் பதிவேட்டில் கையெழுத்து போட்டதும் பொதுக்குழுக் கூட்ட அரங்கத்திற்கு அவர்கள் அனுப்பப்பட்டனர்.

முதலாவதாக கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அக்கட்சியின் கொள்கை தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்புரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்

முதல் தீர்மானமாக செப்டம்பர் 27–ந் தேதி மூன்றாவது கட்டமாக நாமக்கல் மக்கள் சந்திப்பை முடித்து, கரூரில் நடைபெற்ற நம் வெற்றித் தலைவரின் மக்கள் சந்திப்பில், திட்டமிட்டு, கற்பனைக்கும் எட்டாத வகையில், பாதுகாப்புக் குறைபாடு மற்றும் இன்னபிற செயற்கையான குளறுபடிகள் ஏற்படுத்தப்பட்டனவோ என்று எண்ணத்தக்க வகையில் அசம்பாவிதம் நிகழ்ந்தது. அதில், நம் குடும்ப உறவுகளான 41 உயிர்கள் பலியாகினர். தமிழக அரசியல் வரலாற்றில், மாற்றத்தை விரும்பும் மக்களரசியலை மையமாகக் கொண்ட நம் இலட்சியப் பயணத்தில் பங்கெடுத்துக்கொள்ள வந்து உயிர்நீத்த நம் சொந்தங்களான அந்தத் தியாகிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை இந்தப் பொதுக்குழு தெரிவித்துக்கொள்கிறது.

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையே நம் நெஞ்சைவிட்டு அகலவில்லை. அதற்குள் கோவையில் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளார் என்ற செய்தி தமிழ்நாட்டையே பதற வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தி, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்.

தொடர்ந்து இதுபோன்ற கொடுமைகள் நடந்தவண்ணம் இருப்பதால் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எங்கே? பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு எங்கே? என்ற கேள்விகளும் எழுந்த வண்ணம் உள்ளன. தொடர்ந்து துன்பம் நேர்கிறதே, காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் தூக்கம் களைந்து எப்போது எழுவார்? என்றும் தெரியவில்லை. இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடே தலைகுனிந்து நிற்கிறது என்பதைக் கூறுவதோடு, சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யாத தி.மு.க. அரசுக்கு வன்மையான கண்டனங்களை இச்சிறப்புப் பொதுக்குழு பதிவு செய்கிறது.

35 மீனவர்கள் கைதுக்கு கண்டனம்

நம் மீனவச் சகோதரர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தாக்குதலும் கைது நடவடிக்கையும் ஈவு இரக்கமின்றி, தொடர்ந்து நீடித்த வண்ணமே உள்ளன. சமீபத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நம் மீனவச் சகோதரர்கள் 35 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்தது. அத்தோடு, அவர்களுக்குச் சொந்தமான மூன்று விசைப் படகுகளையும் ஒரு நாட்டுப் படகையும் பறிமுதல் செய்தது.

கடிதம் எழுதிவிட்டு தூங்குவதா?

இலங்கைக் கடற்படையின் இந்த அராஜகச் செயலை ஒன்றிய பா.ஜ.க. அரசு, ஓர வஞ்சனையுடன் கண்டும் காணாமல் கண்மூடிக் கொண்டிருப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அதே போல, நம் மீனவச் சகோதரர்கள் விஷயத்தில் கடிதம் மட்டுமே எழுதிவிட்டு, கண்மூடித் துயில் கொள்வதே வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் வாடிக்கையாகிவிட்டது.

கைது செய்யப்பட்ட நம் மீனவச் சகோதரர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும். இதற்கான நடவடிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு தாமதமின்றி உடனடியாக எடுக்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழக அரசும் தாமதிக்காமல் உண்மையாகத் தர வேண்டும். மேலும், நம் மீனவச் சகோதரர்களின் இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, நிரந்தரத் தீர்வை நோக்கி ஒன்றிய அரசு நகர வேண்டும் என்று பொதுக்குழு வலியுறுத்துகிறது.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்...

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் என்பது, மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை அச்சுறுத்தும் ஒரு செயலாகவே இருக்கிறது. சிறப்புத் தீவிரத் திருத்தம் என்கிற பெயரில், பீகாரில் ஏற்கெனவே லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதே அதற்குச் சான்று. ஆறு கோடி வாக்காளர்களுக்கும் மேல் இருக்கும் தமிழ்நாட்டில் அத்தனைப் பெயர்களையும் சரிபார்க்க ஒரு மாத காலம் எப்படிப் போதுமானதாக இருக்கும்? அவசர கதியில் நடைபெறும் இப்பணிகளால் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை பாதிக்கப்படுவதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நியாயமான, எந்தவித அரசியல் குறுக்கீடுமற்ற, சுதந்திரமான தேர்தல் நடைபெற, சிறப்புத் தீவிரத் திருத்தம் எனும் இந்தக் குழப்பமான நடைமுறையைக் கைவிட்டு, ஏற்கெனவே இருக்கும் பழைய நடைமுறையைத் தேர்தல் ஆணையம் பின்பற்ற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

விவசாயிகள் விரோத தி.மு.க. அரசு

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளிடம் உரிய நேரத்தில், கொள்முதல் செய்யாமல் நெல் உள்ளிட்ட தானியங்கள் மழையில் நனைந்து, மூட்டையிலேயே முளைத்து வீணாகும் நிலைக்குக் காரணமான, விவசாயிகள் விரோத ஆட்சியாளர்களுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும், மழைநீர் வடிகால்களைச் சீரமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே செய்து முடிக்க வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட ராம்சர் சதுப்பு நிலத்தில் கட்டுமானம் கட்டத் தனியார் நிறுவனத்திற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

மக்கள் சந்திப்பு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கழகத் தலைவருக்கும் அவரைக் காண வரும் பொதுமக்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் தமிழக அரசு, முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும்.

“ஊழல் – அவதூறு – அராஜகம்”

அரசாங்கத்தின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளை நேர்மையாக – உண்மையாக – ஆதாரங்களோடு சுட்டிக் காட்டும் எதிர்க்கட்சியினரையும், சமூக ஆர்வலர்களையும் வழக்கு – கைதுகளால் மிரட்டும் தி.மு.க. அரசு, அவதூறு பரப்பும் ஆளும் கட்சியின் ஊதுகுழல்களை மறைமுகமாக உற்சாகப்படுத்தி வருகிறது. அதனால், எந்த விதமான நியாய தர்மமும் இன்றி, ஆளும் கட்சியின் அவதூறுக் குழுக்கள் அராஜகமாகச் செயல்பட்டு வருகின்றன.

அண்ணா சொன்ன, “கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு” என்ற கோட்பாட்டைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, “ஊழல் – அவதூறு – அராஜகம்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படும் ஆளும் கட்சியின் கூலிப் படையை பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழகத் தொழில் துறைக்கு வந்திருக்கும் முதலீடுகள், அவற்றின் மூலம் உருவான வேலைவாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தி.மு.க. அரசின் அராஜக சர்வாதிகாரப் போக்கு

தமிழ்நாட்டில் ஜனநாயக அடிப்படையில் பொதுப் பிரச்சனைகளில் கருத்துத் தெரிவிப்பவர்களைக் கைது செய்து, அவர்களின் கருத்துரிமையைச் சிதைக்கும் வெற்று விளம்பர மாடல் அரசுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு விலைபோகாத ஊடகங்களையும் சமூகச் செயற்பாட்டாளர்களையும் எதிர்க்கட்சிகளையும் வழக்கு, விசாரணை, கைது என்பனவற்றைப் பயன்படுத்தி அச்சுறுத்துகிறது.

இது தமிழக அரசியல் சூழலுக்கு மட்டுமல்ல, இந்திய அரசியலமைப்புச் சாசனத்திற்கும் ஜனநாயகத்திற்கும் பேராபத்து என்பதைச் சுட்டிக் காட்டுவதோடு, சர்வாதிகார மாடல் தி.மு.க. அரசின் அராஜக – சர்வாதிகாரப் போக்கை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

முதல்வர் வேட்பாளர் விஜய்

தமிழகம் முழுவதும் கோடானு கோடி மக்களின் பேராதரவைப் பெற்று, முதன்மைச் சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் நம் வெற்றித் தலைவர் தலைமையில், 2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பது என்றும், தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரத்தைக் கழகத் தலைவருக்கே வழங்கி, இச்சிறப்புப் பொதுக்குழு ஒப்புதல் அளிக்கிறது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

 'தி.மு.க., ஆட்சியில் தமிழகம் தலை குனிந்து நிற்கிறது' த.வெ.க., சிறப்பு பொதுக்குழு தீர்மானங்கள் 

அண்ணா பல்கலையை தொடர்ந்து, கோவையில் கல்லுாரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் இது போன்ற கொடுமைகள் நடந்தபடி இருக்கின்றன. சட்டம் - ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யாததால், தி.மு.க., ஆட்சியில் தமிழகம் தலை குனிந்து நிற்கிறது.

 தமிழகத்தில் வாக்காளர்களின் ஜனநாயக கடமையான ஓட்டுரிமையை பறிக்கும், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில், விவசாயிகளிடம் உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாததால், மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகின. இதற்கு, விவசாயிகள் விரோத தி.மு.க., ஆட்சி தான் காரணம்.

பாதுகாக்கப்பட்ட ராம்சார் மண்டலத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், கட்டடம் கட்ட தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் ஒத்துழைப்புடன் இது நடந்துள்ளது. அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும்

மக்கள் சந்திப்பு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் த.வெ.க., தலைவர் விஜய்க்கும், அவரை காண வரும் பொது மக்களுக்கும், பாரபட்சமின்றி தமிழக அரசு முழுமையான பாதுகாப்பை வழங்க வேண்டும் .

தமிழகத்தில் வெளிநாட்டு நிறுவனம் முதலீடு செய்துள்ளதாக, தொழில் துறை அமைச்சர் அறிவித்ததை அந்நிறுவனம் மறுத்துள்ளது. எனவே, தமிழகத்தில் தொழில் துறைக்கு வந்துள்ள முதலீடுகள் குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தமிழகத்தில் ஜனநாயக முறையில், பொது பிரச்னைகள் குறித்து கருத்து தெரிவிப்பவர்கள் கைது செய்யப்படுகின்றனர். அவர்களின் கருத்துரிமையை சிதைக்கும் சர்வாதிகார செயலை, அரசு நிறுத்த வேண்டும்.

முதல்வர் வேட்பாளராக த.வெ.க., தலைவர் விஜய் தலைமையில், 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும். கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரமும் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது.