Wednesday, November 26, 2025

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் - அடுத்த கட்ட நகர்வு என்ன..? த.வெ.க.வா?, தி.மு.க.வா?

 

பதிவு: புதன்கிழமை,  நவம்பர் 26, 2025, கார்த்திகை 10,  விசுவாவசு வருடம் 05-00: PM

சென்னை,

9 முறை எம்.எல்.ஏ. ஆக இருந்தவர் - எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன் - சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தார் - நாளை த.வெ.க.வில் இணைகிறார்?

முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்தார். விஜய் முன்னிலையில் நாளை த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அண்ணா தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். முதல்முறை சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதன் பிறகு 8 முறை கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அண்ணா தி.மு.க. ஆட்சி காலத்தில் வனத்துறை, போக்குவரத்து துறை, வேளாண்மை துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, வருவாய் துறை, பள்ளி கல்வித்துறை என பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக அவர் செயல்பட்டு வந்த நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் ஓபிஎஸ் டிடிவி தினகரன் உள்ளிட்டோரை கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும் என்று கூறிய செங்கோட்டையன், அதற்கு கட்சி தலைமைக்கு காலக்கெடு விதித்தார். இதனால் அவரது கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன. ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் தேவர் குருபூஜை விழாவில் செங்கோட்டையன் கலந்து கொண்டதைத் தொடர்ந்து அண்ணா தி.மு.க.வில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அவருடைய ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

த.வெ.க.வில் இணைகிறார்

இந்த நிலையில், அமைதி காத்து வந்த கே.ஏ.செங்கோட்டையன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நாளை (வியாழக்கிழமை) சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகம் செல்லும் அவர், விஜய் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில், இன்று காலை 11.45 மணிக்கு சென்னை தலைமைச்செயலகம் வந்த கே.ஏ.செங்கோட்டையன், சபாநாயகர் மு.அப்பாவுவை சந்தித்து தனது கோபி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடித்ததை வழங்கினார். அதனை சபாநாயகர் அப்பாவு பெற்றுக் கொண்டார். அடுத்த கட்ட முடிவு பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, ''இன்னும் ஒரு நாள் பொறுத்திருங்கள்,'' என்று கூறினார்.

ஏற்கனவே, ஆலங்குளம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் ராஜினாமா செய்துவிட்டு, தி.மு.க.வில் இணைந்த நிலையில், தற்போது கே.ஏ.செங்கோட்டையனும் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செங்கோட்டையன் – சேகர் பாபு சந்திப்பு

இந்த நிலையில், கே.ஏ.செங்கோட்டையன் தலைமைச் செயலகத்துக்கு வருவதை கேள்விப்பட்ட அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அவரை சபாநாயகர் அப்பாவுவின் அறைக்கே சென்று சந்தித்து பேசினார். சுமார் 5 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நடைபெற்றது. ஏற்கனவே, அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வில் இணைந்த பி.கே.சேகர்பாபு, தற்போது கே.ஏ.செங்கோட்டையனையும் தி.மு.க.வுக்கு இழுக்க பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

 

பேச்சு வார்த்தைக்குப்பிறகு வெளியே வந்த கே.ஏ.செங்கோட்டையனை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு பல்வேறுகேள்விகளை எழுப்பினார்கள். ஆனால் யாருடைய கேள்விக்கும் பதிலளிக்காமல் கையெடுத்து கும்பிட்டபடி காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

த.வெ.க.வா?, தி.மு.க.வா? என்பது கே.ஏ.செங்கோட்டையன் எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது. செங்கோட்டையன் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதும், அவரது அடுத்த கட்ட நகர்வு என்ன..? என்பதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஐம்பது ஆண்டுகால உழைப்பிற்கு அதிமுகவின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி பரிசு கொடுத்துள்ளனர்” என வருத்தம் தெரிவித்திருந்தார்.

‘தி.மு.க. அரசின் சட்டங்கள் வெற்றியைப் பெறுவது தான் வரலாறு’ - முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

 

பதிவு: புதன்கிழமை,  நவம்பர் 26, 2025, கார்த்திகை 10,  விசுவாவசு வருடம் 04-00: PM

ஈரோடு, 

மொடக்குறிச்சியில் மாவீரன் பொல்லான் உருவச்சிலை, அரங்கம் திறப்பு விழா - ‘தி.மு.க. அரசின் சட்டங்கள் வெற்றியைப் பெறுவது தான் வரலாறு’:ஸ்டாலின் பெருமிதம் - ‘லட்சக்கணக்கான அருந்ததியர் இன மக்கள் வாழ்க்கையில் ஒளியேற்றியது தி.மு.க. என்ற கொள்கை பேரியக்கம்’

‘தி.மு.க. அரசின் சட்டம் எப்போதும் வெற்றியைப் பெறுவது தான் வரலாறு’ என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.

லட்சக்கணக்கான அருந்ததியர் இன மக்கள் வாழ்க்கையில் ஒளியேற்றியது தி.மு.க. என்ற கொள்கை பேரியக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு மாவட்டம், ஜெயராமபுரம், மொடக்குறிச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லானின் முழு திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை திறந்து வைத்து பேசியதாவது:–

பூலித்தேவன் - வீரபாண்டிய கட்டபொம்மன் - தீரன் சின்னமலை - மருதிருவர் - வீரமங்கை வேலு நாச்சியார் - மாவீரன் பொல்லான் என்று, நம் தமிழ் மண் ஈன்றெடுத்த மாவீரர்கள் அத்தனை பேரும் நம்முடைய மண் - மொழி - மானம் ஆகியவற்றை காத்திருக்கக்கூடியவர்கள். இடைவிடாமல் அதற்காக போராடிக் கொண்டிருக்கவேண்டும் என்று இன்றைக்கு நமக்கெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டிருக்கக்கூடியவர்கள்.

சொன்னால், சொன்னதை செய்பவன்தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் – அதற்கு சாட்சியாக சொல்லவேண்டும் என்று சொன்னால், இந்தமாவீரன் பொல்லான் சிலைதான் அதற்கு சாட்சி!

2019-ல் நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நேரத்தில், மகுடஞ்சாவடியில் நடைபெற்ற ஆதித்தமிழர் பேரவையின் வெள்ளி விழா – அதை முன்னின்று நடத்தியவர் நம்முடைய அதியமான். அதில் பங்கேற்று, சிறப்பித்து பெருமை சேர்த்தவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய ஈஸ்வரன்.

மாவீரன் பொல்லானுக்கு சிலையும், மணிமண்டபமும் அமைப்போம் என்று அந்த நிகழ்ச்சியில் நான்உறுதியளித்தேன். இன்றைக்கு அதை உங்கள் முன்னால் திறந்து வைத்திருக்கிறேன். இன்று திரையில் பொல்லானின் வாழ்க்கை வரலாற்றை சிறு குறிப்பாக எடுத்து வெளியிட்ட நேரத்தில் அதை சுட்டிக்காட்டினார்கள்.

பவானிப்போர் - ஓடாநிலைப் போர் - அரச்சலூர் போர் என்று அந்நியரான ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு, தீரன் சின்னமலையின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்தவர்தான் மாவீரன் பொல்லான்!

நினைவுச் சின்னம் கோரிக்கை நிறைவேறியது...

பொல்லானின் வீரத்தை கண்டு, சினம் கொண்ட ஆங்கிலேயப் படை தளபதி கர்னல் ஹாரிஸ் தலைமையிலான படையால், மாவீரன் பொல்லான் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய தியாகத்தைப் போற்ற அவருடைய வீரத்தை காலத்துக்கும் எடுத்துச் சொல்ல, இப்படியொரு நினைவுச் சின்னம் வேண்டும் என்று பல ஆண்டுகாலமாக இருந்த வந்த கோரிக்கை, இப்போது திராவிட மாடல் அரசின் மூலமாக அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது!

இந்த பெருமையான தருணத்தில், ஒரு முக்கியமான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். ஏன் உங்களின் பலருக்குக் கூட அது நினைவிருக்கும் என்று கருதுகிறேன். கடந்த ஜூன் மாதம் ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில், ஒரு செய்தி வந்திருந்தது. அதை படித்ததுமே, எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்தச் செய்தி என்னவென்றால் அருந்ததியினர் உள் ஒதுக்கீடு சட்டம், அந்த மக்களுக்கு எத்தகைய ஒளிவிளக்காக திகழ்கிறது என்பதைப் பற்றி தி இந்து பத்திரிகையில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். அதாவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்களைப் பெற்று, ஆதாரத்துடன் இந்த செய்தியை வெளியிட்டிருந்தார்கள்.

அந்தச் செய்தியில், 2009-ல் 193 அருந்ததியினர் மாணவர்கள் பொறியியல் படித்துக் கொண்டிருந்த நிலைமாறி, இந்த ஆண்டு 3 ஆயிரத்து 944 மாணவர்கள் பொறியியல் படிக்கிறார்கள் என்றும்,

2023-–24-ஆம் ஆண்டில், 193 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிக்கிறார்கள் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்கள்!

இதில் எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட பெருமை என்னவென்றால், உங்களில் பலருக்கும் தெரியும். இந்த உள் ஒதுக்கீடு சட்டத்தை கலைஞர் நிறைவேற்ற முடிவு செய்தார் – முடிவு செய்து, அது சட்டமன்றத்தில் சட்ட மசோதவை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் – ஆனால், திடீரென்று அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதனால் அவரால் எழுந்து நடமாட முடியாத நிலை அன்றைக்கு ஏற்பட்டது. அன்றைக்கு காலையில் “உடனே புறப்பட்டு மருத்துவமனைக்கு வா” என்று எனக்கு தொலைபேசியிலிருந்து அழைப்பு வருகிறது. வந்தவுடன் என்னை அழைத்து சொன்னார், நான் ஒரு சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் இன்றைக்கு நிறைவேற்றவேண்டும் – அறிமுகப்படுத்த வேண்டும் – என்னை மருத்துவர்கள் செல்வதற்கு அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். அதனால், நீ சென்று என்னுடைய சார்பில் அந்த மசோதாவை அறிமுகப்படுத்து என்று எனக்கு உத்தரவிட்டார். அந்த மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்கின்ற வாய்ப்பு இந்த அடியேன் ஸ்டாலினுக்கு கிடைத்தது என்று இன்றைக்கு நான் பெருமைப்படுகிறேன்!

சமூகநீதிப் பாதையை கட்டமைப்பதில்...

ஒரு சமூகத்தையே முன்னேற்று வதற்கான அந்த சமூகநீதிப் பாதையை கட்டமைப்பதில் என்னுடைய பங்கும் இருந்திருக்கிறது என்பதை எண்ணி இன்றைக்கும் மகிழ்ச்சி அடைகிறேன். அதுதான் எனக்குக் கிடைத்த பெருமை!

அதுமட்டுமல்ல, அந்தச் செய்தியில், இன்னொரு முக்கியமான விஷயத்தையும் தி இந்து பத்திரிகையில்எழுதியிருந்தார்கள். அது என்னவென்றால், “தி.மு.க. அரசு எந்தவொரு சட்டத்தை நிறைவேற்றும் போதும், அதற்குரிய காரணங்களை முறையாக ஆராய்ந்து, தரவுகளை எல்லாம் தொகுத்து, ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்டு குழு அமைத்து, அவர்களுடைய பரிந்துரைகளை எல்லாம் பெற்று, சாமானிய மக்களுக்கு உரிய பயன்களை உண்மையிலேயே அளித்து வருவதால், தி.மு.க. அரசின் சட்டம் எப்போதும் வெற்றியைப் பெற்று வருவது தான் வரலாறு!” என்று பாராட்டியிருந்தார்கள்!

லட்சக்கணக்கான அருந்ததியர் இன மக்கள் வாழ்க்கையில் ஒளியேற்றியதால் இந்தப் பாராட்டுதான், தி.மு.க. என்ற கொள்கை பேரியக்கத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய அடையாளம்!

எல்லார்க்கும் எல்லாம் என்ற நம்முடைய இலட்சியத்தை அடைய வேண்டும். பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், சமூக நிலையையும் உயர்த்த வேண்டும் என்று திராவிட மாடல் அரசின் சார்பில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

அது அத்தனையும் இங்கே பட்டியிலிட முடியாது – நேரமில்லை – அடுத்த நிகழ்ச்சிக்கு நாங்கள் சென்றாக வேண்டும். அதை பட்டியலிட்டால், இன்றைக்கு முழுவதும் போதாது. எனவே, அருந்ததியர் இன மக்களுக்காக செய்யப்பட்டுள்ள சிலவற்றை மட்டும் தான் அதுவும் தலைப்புச் செய்திகளாக உங்களிடத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, தேனி மற்றும் கரூர் மாவட்டங்களில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக 182 கோடி ரூபாயில் 26 விடுதிகள், - 74 கோடி ரூபாயில், 107 பள்ளிக் கட்டடங்கள், 20 கோடி ரூபாயில், 26 சமுதாயக் கூடங்கள், - 134 கோடி ரூபாயில், 131 கிராம அறிவுசார் மையங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில், 29 மாணவர்களுக்கு 10 கோடியே 30 லட்சம் ரூபாயை உதவித்தொகையாக வழங்கியிருக்கிறோம்!

முழுநேர முனைவர் ஆராய்ச்சி படிப்பிற்காக 329 மாணவர்களுக்கு 3 கோடியே 29 இலட்சம் ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்கியிருக்கிறோம்! - போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகையை 3 இலட்சத்து 69 ஆயிரத்து 550 பேருக்கும், - ஃப்ரி-மெட்ரிக் கல்வி உதவித்தொகையை 5 இலட்சத்து 42 ஆயிரத்தி 396 மாணவர்களுக்கும் வழங்கியிருக்கிறோம்!

தூய்மைப் பணியாளர்களுக்கான நலவாரியத்தை திருத்தி அமைத்திருக்கிறோம்!

2021-ல், 18 ஆயிரத்து 225 பேர் மட்டுமே இருந்த இந்த வாரியத்தில், நம்முடைய அரசு சிறப்பாக செயல்பட்டதால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், மூன்று லட்சம் பேர் உறுப்பினர்களாக வாரியத்தில் சேர்ந்திருக்கிறார்கள்! இவர்களுக்கு எல்லாம் 11 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது!

அதுமட்டுமல்ல, அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கியிருக்கிறோம். சுகாதார அங்காடிகள் அமைத்திருக்கிறோம். இந்த வாரியத்துக்கு ஆண்டுதோறும் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறோம்.

கடந்த ஆகஸ்ட் 14-ஆம் நாள் ஆறு முக்கிய சிறப்புத் திட்டங்களை அறிவித்திருக்கிறோம். இப்படி என்னால் தொடர்ந்து பட்டியலிட்டுக் கொண்டிருக்க முடியும்!

உண்மையான வளர்ச்சி

இதையெல்லாம் செய்வது, எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்! எல்லோரும் சமமாக வாழுகின்ற சமூகம் உருவாக வேண்டும்! அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் உண்மையான வளர்ச்சி என்பதற்காகத்தான்! இந்த லட்சியத்தோடு நடைபோடும் திராவிட மாடல் அரசுக்கு அடுத்து அமையவுள்ள திராவிட மாடல் 2.0 அரசுக்கும், நீங்கள் எல்லோரும் ஆதரவாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்க மாவீரன் பொல்லான்! வாழ்க அவரது புகழ்!

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், மதிவேந்தன், கயல்விழிசெல்வராஜ், நாடாளுமன்றஉறுப்பினர்கள் அந்தியூர் செல்வராஜ், பிரகாஷ், மாதேஸ்வரன், சட்டமன்றஉறுப்பினர்கள் ஈஸ்வரன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, வெங்கடாசலம், சந்திரகுமார், வாரியத்தின் தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, துணைத் தலைவர் கனிமொழி, மாவட்ட கலெக்டர் கந்தசாமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் அதியமான் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Rajini Gaang Movie Team Press Meet at Coimbatore | all set to release on...

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழகத்தில் எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு?

 

பதிவு: புதன்கிழமை,  நவம்பர் 26, 2025, கார்த்திகை 10,  விசுவாவசு வருடம் 06-00: AM

சென்னை,

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில், இன்று ( நவம்பர் 26) இலங்கை அருகேயும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், தமிழக கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு

மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நிகோபார் தீவுகளில் இருந்து தென்கிழக்கே 870 கிமீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறக்கூடும்.

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் – இலங்கை பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, தெற்கு இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மாறுநாள் (நவம்பர் 27) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

இதன் காரணமாக  இன்றும் (நவம்பர் 26), நாளையும் (நவம்பர்27) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

28-ம் தேதி கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் ஓரிரு இடங்களிலும், 29-ம் தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், 30-ம் தேதி வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், டிச.1-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், தமிழகத்தில் இன்று (நவம்பர் 26) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், 27-ம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களிலும், 28-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

29-ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

30-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கா்க்ராயில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (நவம்பர் 26) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கில் தலா 17 செமீ, காக்காச்சியில் 14 செமீ, மாஞ்சோலையில் 13 செமீ, கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரியில் 8 செமீ, திருவாரூரில் 7 செமீ, கடலூர் மாவட்டம் புவனகிரி, புதுக்கோட்டை மாவட்டம் மிமிசல், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, நீடாமங்கலத்தில் தலா 6 செமீ, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். 27 முதல் 29-ம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.