Thursday, November 20, 2025

பிஹார் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் இன்று பதவியேற்பு

 


பதிவு: வியாழக்கிழமை,   நவம்பர் 20, 2025, கார்த்திகை 04,  விசுவாவசு வருடம் 07-00: AM

பாட்னா,

பிஹாரில் ஐக்கிய ஜனதாதளத்தின் சட்டசபை கட்சித்தலைவராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். மாநில முதல்-மந்திரியாக இன்று (வியாழக்கிழமை) அவர் பதவியேற்கிறார்.

243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டசபையில் 202 இடங்களைப்பெற்று ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதில் முக்கியமாக, பா.ஜனதா 89, ஐக்கிய ஜனதாதளம் 85 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

இதைத்தொடர்ந்து மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான புதிய அரசு பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடந்தது. இதில் 22 எம்.எல்.சி.க்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், சட்டசபை கட்சித்தலைவராக நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பெயரை விஜய் சவுத்ரி மற்றும் உமேஷ் குஷ்வாகா ஆகியோர் முன் மொழிந்தனர். பிஜேந்திர யாதவ் உள்ளிட்டோர் வழிமொழிந்தனர். பின்னர் பேசிய நிதிஷ்குமார், மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஓய்வின்றி உழைக்குமாறு எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.சி.க்களை கேட்டுக்கொண்டார்.

ஐக்கிய ஜனதாதளத்தின் சட்டசபைக்குழு தலைவராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டசபைக்குழு தலைவராக (முதல்-மந்திரி) நிதிஷ் குமார் தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது. மாநிலத்தின் முதல்-மந்திரியாக 10-வது முறையாக நிதிஷ் குமார் இன்று (வியாழக்கிழமை) பதவியேற்கிறார். தலைநகர் பாட்னாவில் நடைபெறும் விழாவில் கவர்னர் ஆரிப் முகமது கான், நிதிஷ் குமாருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

                                        
இதற்கிடையே பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் கூட்டமும் நேற்று நடந்தது. இதில் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவராக சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவராக விஜய் குமார் சின்கா தேர்வானார்.

பா.ஜனதா சட்டசபைக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலுக்கான மேலிட பார்வையாளராக உத்தரபிரதேச துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா நியமிக்கப்பட்டு இருந்தார்.

மேலும் மத்திய மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால், முன்னாள் மத்திய மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி ஆகியோர் இணை பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். மேலும் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத்தும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். பா.ஜனதா சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட சாம்ராட் சவுத்ரி, முந்தைய ஆட்சியில் துணை முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, நிதிஷ் குமார் கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று கவர்னர் ஆரிப் முகமது கானை நேற்று மாலை சந்தித்தார்.

ராஜினாமா அப்போது வெளியேறும் அரசின் தலைவரான நிதிஷ், முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கவர்னரிடம் அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட கவர்னர் ஆரிப், புதிய அரசு பதவியேற்கும் வரை இடைக்கால முதல்வராக நீடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, பிஹார் முதல்வராக, 10வது முறையாக நிதிஷ் குமார் இன்று பதவி ஏற்கிறார். காந்தி மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.


கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கினார் பிரதமர் - விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி விடுவிப்பு

 

கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நேற்று தொடங்கிய தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியை, கொங்கு மண்டல மக்களின் சார்பில் வரவேற்ற உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் கு.செல்லமுத்து. அருகில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இயற்கை விவசாயிகள் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் பி.ஆர்.பாண்டியன், வாழை கருப்பையா, கு.ராமசாமி.


பதிவு: வியாழக்கிழமை,   நவம்பர் 20, 2025, கார்த்திகை 04,  விசுவாவசு வருடம் 06-30: AM

கோவை,

கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடியை விடுவித்தார். மேலும், விவசாயத்தில் பல்லடுக்கு வேளாண்மையை ஊக்குவிக்க மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மத்திய அரசின் சார்பில் பிரதம மந்திரி விவசாயிகளுக்கான கவுரவிப்பு நிதி திட்டத்தின் கீழ் (பிஎம் - கிஸான்) ரூ.18 ஆயிரம் கோடி நிதி உதவித் தொகை விடுவிக்கும் நிகழ்வு, தமிழ்நாடு இயற்கை உழவர் மற்றும் ஆர்வலர்கள் கூட்டுக் குழு சார்பில் 3 நாள் இயற்கை விவசாயிகள் மாநாட்டு தொடக்க விழா ஆகியவை கோவை கொடிசியா தொழிற்காட்சி அரங்கில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியை தொடங்கிவைக்க பிரதமர் மோடி நேற்று கோவை வந்தார்.

அவருக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடி வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்தார். மேலும், பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், 21-வது தவணையாக நாடு முழுவதும் 9 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.18 ஆயிரம் கோடியை விடுவித்தார். தொடர்ந்து இயற்கை விவசாயத்தில் சிறப்பாக பணியாற்றிய 7 விவசாயிகளுக்கு விருதுகளை வழங்கினார்.



அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது: எனக்கு வரவேற்பு கொடுக்கும் போது, விவசாயிகள் தங்களது மேல் துண்டை சுழற்றினர். அதைப் பார்த்த போது பிஹாரின் காற்று இங்கேயும் வீசுகிறதோ என்று என் மனம் அளவளாவியது. கோவை என்பது கலாச்சாரம், கனிவு ஆகியவற்றை சொந்த மாக்கிக் கொண்ட பூமி. தென் இந்தியாவின் தொழில் முனைவோர் ஆற்றலின் சக்தி பீடம். இங்கு இருக்கும் ஜவுளித் துறை தேசத்தின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பு அளிக்கிறது. இங்கு எம்.பி. ஆக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராகி அனைவருக்கும் வழிகாட்டி வருகிறார்.

இயற்கை விவசாயம் மிகவும் சிறப்பானது. இந்த மாநாட்டில் உள்ள அரங்குகளை பார்த்தேன். ஒருவர் பொறியியல் பட்டம் பெற்ற பிறகு விவசாயத்துக்கு வந்திருக்கிறார். ஒருவர் இஸ்ரோவை விட்டுவிட்டு வேளாண் தொழிலுக்கு வந்துள்ளார். இந்த வேளையில் தமிழ்நாட்டின் வேளாண் பெருமக்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்களை உங்களது துணிச்சலுக்காக காணிக்கையாக்குகிறேன்.

      


நாட்டின் அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.18 ஆயிரம் கோடி இங்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் கூட பல லட்சம் விவசாயிகளின் வங்கிகணக்கில் பிரதம மந்திரியின் விவசாய கவுரவ நிதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த திட்டத்தில் ரூ.4 லட்சம் கோடி விவசாயிகளுக்கு நேரடியாக சேர்ந்துள்ளது. இந்த தொகை விவசாயத்துடன் தொடர்புடைய பல்வேறு பணிகளை செய்ய உதவியாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் 37 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் இயற்கை வேளாண்மை நடைபெற்று வருகிறது. இயற்கை வேளாண்மை நமது நாட்டின் சுதேசி கருத்து. தென்னிந்திய விவசாயிகள் பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் உள்ளிட்டவற்றை உள்வாங்கி உள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. இயற்கை வேளாண்மையுடன் சிறுதானியங்களையும் பயிர் செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் முருக பெருமானுக்கு தேனும், திணையும் படைக்கிறோம்.

தமிழ்நாட்டில் கம்பும், சாமையும், கேரளாவில் ராகி, ஆந்திராவில் சஜ்ஜா ஆகியவை பல தலைமுறைகளாக நமது உணவு பழக்கத்துடன் ஒன்று கலந்தது. இந்த சிறந்த உணவானது உலகின் சந்தைகளில் சென்று சேர வேண்டும்.

கேரளா, கர்நாடகாவில் மலைப்பாங்கான பகுதிகளில் ஒரே வயலில் பாக்கு, தென்னை, பழ மரங்கள் இருக்கும். இவற்றுக்கு இடையில் ஊடு பயிராக, மசாலா பொருட்கள், மிளகு போன்றவை பயிரிடப்படுகின்றன. விவசாயத்தில் இந்த மாதிரியை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். தென்னிந்தியா விவசாயத்தின் வாழும் பல்கலைக்கழகமாக இருந்து வருகிறது. இந்த பகுதியில் உலகின் பழமையான நீர்ப்பாசன முறை உள்ளது.

இதற்கு 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காலிங்கராயன் அணைக்கட்டை முன்னுதாரணமாக கூறலாம். மண்ணின் பராமரிப்பு முறை, குளங்கள், நீர்ப்பாசன திட்டங்கள் வழிகாட்டும் வகையில் அமைந்தன.இயற்கை வேளாண்மையை பாட திட்டத்தில் முக்கிய பங்காக கொண்டு வர வேண்டும்.

கிராமங்களுக்கு சென்று விவசாயிகளின் வயல்களை உங்களின் பரிசோதனை கூடமாக மாற்ற வேண்டும். இயற்கை விவசாயத்தின் இந்த இயக்கத்தில் மாநில அரசு, விவசாயிகள், உற்பத்தியாளர்களின் பங்களிப்பு அவசியம். நமது விவசாயிகளின் பாரம்பரியமான ஞானம், அறிவியலின் பயன், அரசுகளின் அதரவு ஆகியவை இணையும் போது பலம் பெறுவார்கள். நமது பூமி தாயும் ஆரோக்கியமாக இருப்பாள்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

முன்னதாக, மாநாட்டில் விவசாயிகள் சார்பில் இயற்கை விவசாயம் சார்ந்த பொருட்கள் இடம் பெற்ற கண்காட்சியில் 17 அரங்குகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அங்கு வைக்கப்பட்டு இருந்த பொருட்களை பார்வையிட்டு, அதன் உற்பத்தி குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். இயற்கை விவசாயிகள் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் கு.ராமசாமி, பி.ஆர்.பாண்டியன், வாழை கருப்பையா, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பல்லா யிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


கோவையில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

 


பதிவு: வியாழக்கிழமை,   நவம்பர் 20, 2025, கார்த்திகை 04,  விசுவாவசு வருடம் 06-00: AM

கோவை,

தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டை தொடங்கி வைக்க கோவை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் தொண்டர்களும் பொதுமக்களும் பெருமளவில் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.

  

கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள கொடிசியா அரங்கில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க  நேற்று மதியம் கோவை வந்த பிரதமர் நரேந்திர மோடி-க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாஜக தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொடர்ந்து விமான நிலையம் முதல் கொடிசியா கண்காட்சி அரங்கம் வரை சாலையின் இருபுறங்களிலும் தொண்டர்கள், பொதுமக்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்டு அவர்களை நோக்கி கையசைத்தபடியே பிரதமர் காரில் சென்றார்.

பின்னர், கொடிசியா வளாகத்தில் இயற்கை விவசாயிகள் மாாடு 2025-ஐ பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இயற்கை விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களை பார்வையிட்ட பிரதமர், விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.


Featured post

கரூர் நெரிசல் வழக்கில் தவறு நடக்கிறது - பதில் கேட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு - விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம்

பதிவு:  சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025, கார்த்திகை 27,  விசுவாவசு வருடம் 01-40: AM புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்...