Wednesday, November 5, 2025

தவெக சிறப்பு பொதுக்குழு இன்று கூடுகிறது - முக்கிய முடிவுகளை விஜய் அறிவிக்க வாய்ப்பு

 


பதிவு: புதன்கிழமை, நவம்பர் 05, 2025, ஐப்பசி 19, விசுவாவசு வருடம் 06-30: AM

சென்னை, 

விஜய்யின் பேச்சை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு செல்வதற்காக, அக்கட்சியினர் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அவர் மீது அரசியல் கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தன. தொடர்ந்து மவுனம் சாதித்து வந்த விஜய், கரூர் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கியதோடு, அவர்களை மாமல்லபுரத்திற்கு நேரில் அழைத்து தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பின்னர் த.வெ.க. அன்றாட அரசியல் நிகழ்வுகளில் கவனம் செலுத்தியது. கட்சியின் அன்றாடப்பணிகளை மேற்கொள்ள பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட 28 பேர் கொண்ட நிர்வாகக்குழுவை விஜய் நியமித்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் த.வெ.க.வின் அடுத்த கட்ட நடவடிக்கை, சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடக்கிறது. இதில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் பொதுவெளியில் நிகழ்ச்சிகளில் எதுவும் பங்கேற்காமல் இருந்தார்.

எனவே அந்த சம்பவத்திற்கு பிறகு நடைபெறும் பொதுக்குழு கூட்டம் என்பதால் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதும் விஜய் சிறப்புரையாற்ற இருக்கிறார். 

அவருடைய அனல் தெறிக்கும் பேச்சு நிறைவடைந்ததும், அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட இருக்கிறது. விஜய்யின் பேச்சை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு செல்வதற்காக, அக்கட்சியினர் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

அழைப்பு கடிதம் மற்றும் தலைமைக்கழக அடையாள அட்டை வைத்திருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே பொதுக்குழுவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அடையாள அட்டையில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

காலை 9.15 மணிக்குள் பொதுக்குழு அரங்கிற்குள் வந்துவிடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை கட்சி தலைமை பிறப்பித்துள்ளது.

10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

 


பதிவு: புதன்கிழமை, நவம்பர் 05, 2025, ஐப்பசி 19, விசுவாவசு வருடம் 06-20: AM

சென்னை, 

முதல்முறையாக கணக்குப்பதிவியல் தேர்வில் கால்குலேட்டருக்கு அனுமதி - 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு - அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார்

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் நேற்று வெளியிட்டார்.

அப்போது பிளஸ் –2 பொதுத் தேர்வில் கணக்குப்பதிவியல் பாடத்துக்கு முதல்முறையாக தேர்வு அறைக்குள் கால்குலேட்டர் அனுமதிப்படும் என்று அவர் தெரிவித்தார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் இன்று முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் 10 மற்றும் 12–ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மாணவர்கள் பொதுத் தேர்வை அச்சமின்றி எழுத வேண்டும். இது மாணவர்களுக்கான தேர்வல்ல, ஆசிரியர்களுக்கான தேர்வும்கூட. மகிழ்ச்சியாக தேர்வுக்கு தயார் ஆகுங்கள்.

இம்முறை அதிக மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு 2026ம் ஆண்டு மார்ச் 11–ந்தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 23–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் மே 20–ந்தேதி வெளியாகும்.

அதேபோல பிளஸ்–2 (12ம் வகுப்பு) மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 2–ந்தேதி முதல் மார்ச் 26ம் வரை நடைபெறவுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 9–ந்தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும். இவர்களின் தேர்வு முடிவுகள் மே 8–ந்தேதி வெளியாகும்.

11ம் வகுப்பு தோற்ற மாணவர்களுக்கு தேர்வு

கடந்த ஆண்டு நடத்த 11–ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு மட்டும் (அரியர்) பொதுத்தேர்வு நடைபெறுகிறது.

இவர்களுக்கான தேர்வுகள் மார்ச் 3–ந்தேதி துவங்கி 27–ந்தேதி வரை நடைபெறுகிறது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 8.70 லட்சம் மாணவர்களும், பிளஸ் – 2 பொதுத் தேர்வை 8.07 லட்சம் மாணவர்களும் எழுதவுள்ளனர்.

ஒவ்வொரு தேர்வுக்கும் 3 முதல் 5 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணக்குப்பதிவியல் தேர்வுக்கு முதன்முறையாக கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலைக் கருத்தில்கொண்டு பொதுத் தேர்வு தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணக்குப்பதிவியல் தேர்வு எழுதும் மாணவர்கள் கால்குலேட்டரை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அது இந்தாண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் செய்தி கணக்குப்பதிவியல் பாடத்தை எடுத்து பயின்று வரும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் காலை 10 மணிக்கு துவங்கி பகல் 1.15 மணிக்கு முடிவடைகிறது.

10ம் வகுப்பு தேர்வு அட்டவணை:–

மார்ச் 11–ந்தேதி தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்

16–ந்தேதி – ஆங்கிலம்

25–ந்தேதி – கணிதம்

30–ந்தேதி – அறிவியல்

ஏப்ரல் 2–ந்தேதி – சமூக அறிவியல்

6–ந்தேதி – விருப்ப மொழிகள்

12–ம் வகுப்பு தேர்வு அட்டவணை:–

மார்ச் 2–ந்தேதி – தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்

5–ந்தேதி – ஆங்கிலம்

9–ந்தேதி – வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்

13–ந்தேதி – இயற்பியல், பொருளாதாரம்

17–ந்தேதி – கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் அண்ட் டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, விவசாய அறிவியல், நர்சிங்.

23–ந்தேதி – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங், அடிப்படை சிவில் என்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் என்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் என்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலாளர் பணி

26–ந்தேதி – நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழில்முறை) அடிப்படை எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங்.

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மூவரையும் பிடித்தது எப்படி? - காவல் ஆணையர் விளக்கம்

 


பதிவு: புதன்கிழமை, நவம்பர் 05, 2025, ஐப்பசி 19, விசுவாவசு வருடம் 06-00: AM

கோவை,

கோவை பீளமேடு விமான நிலையம் அருகே, கல்லூரி மாணவி நேற்று முன்தினம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீஸார் விசாரித்து மூவரை கைது செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் ஆ.சரவணசுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மாணவி வன்கொடுமை வழக்கில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் (எ) கருப்பசாமி, இவரது சகோதரர் கார்த்திக் (எ) காளீஸ்வரன் (21), இவர்களது தூரத்து உறவினர் மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த குணா (எ) தவசி (20) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு முன்பு மூன்று பேரும் பிணையில் வந்துள்ளனர்.

இவர்கள் மீது கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. க.க.சாவடி, துடியலூர் காவல் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் இவர்கள் மீது உள்ளன. இவர்கள் மரம் வெட்டுதல், லேத் ஒர்க் போன்ற கிடைக்கும் வேலைகளுக்கு சென்று வந்துள்ளனர்.

இவர்கள் கோவில்பாளையம் பகுதியில் சாவியுடன் நின்றிருந்த மொபட்டை திருடி பயன்படுத்தி வந்தனர். சம்பவ நாளில் இருகூர் வீட்டில் மது அருந்திவிட்டு, சம்பவம் நடந்த பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு காரில் தோழியுடன் பேசிக் கொண்டிருந்த வாலிபரை அரிவாளால் தாக்கி, பெண்ணை இருட்டான பகுதிக்கு 3 பேரும் இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். காயமடைந்த வாலிபர் இரவு 11.20 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். 10 நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் தீவிரமாகத் தேடினர். அங்கு மிகவும் இருட்டாக இருந்ததால் 100 போலீஸார் தேடுதலுக்குப் பின் அதிகாலை நாலு மணி அளவில் நீண்ட தேடுதலுக்கு பின்னர் மாணவி மீட்கப்பட்டார்.

ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு சம்பவம் நடந்த பகுதி உட்பட பல இடங்களில் 300 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, அறிவியல் பூர்வமான ஆதாரங்களை திரட்டி குற்றவாளிகளை தேடியதில், மூவரும் துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியில் மறைந்திருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீஸார் மூவரையும் பிடிக்க முயன்றபோது அவர்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் காவலர்களை தாக்கினர். அரிவாளால் வெட்டியதில் தலைமைக் காவலர் சந்திரசேகருக்கு (47) இடது கையில் வெட்டு விழுந்தது. போலீஸார் சுட்டதில் மூன்று பேருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது 296 (b), 118, 140, 309, 80 ஆகிய சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதானவர்களிடமிருந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போன் மோதிரம் மற்றும் ஒரு மொபைல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது போன்ற ஆபத்தான காலத்தில் போலீஸாரை தொடர்பு கொள்ள காவல் உதவி ஆப் செயல்பட்டு வருகிறது. இந்த ஆப்பில் sos பட்டனை அழுத்தினாலோ அல்லது 3 முறை அசைத்தாலோ காவல்துறைக்கு புகார் செல்லும். லொகேஷனை கண்டறிந்து யாரேனும் ஆபத்தில் சிக்கி இருந்தால் மீட்க முடியும். சம்பவ இடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த டாஸ்மாக் பார் மூடப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த பகுதியில் தினமும் 5 பீட் ஆபிசர், இரண்டு ரோந்து வாகனங்கள் தினமும் ரோந்து சுற்றி வருகின்றனர். சம்பவத்துக்கு சற்று முன்பு பிருந்தாவன் நகர் மெயின் ரோட்டில் போலீஸார் ரோந்து சென்றுள்ளனர். மாணவிகளின் பாதுகாப்புக்கு ‘போலீஸ் அக்க’, மாணவர்களின் பாதுகாப்புக்கு ‘போலீஸ் புரோ’ திட்டங்கள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன”.

இவ்வாறு அவர் கூறினார்.