Monday, December 1, 2025

சமந்தா – இயக்குநர் ராஜ் திடீர் திருமணம்

 

பதிவு: திங்கட்கிழமை,  டிசம்பர் 01, 2025, கார்த்திகை 15,  விசுவாவசு வருடம் 03-30: PM

சென்னை,

சமந்தா – இயக்குநர் ராஜ் இருவரும் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா மையத்தில் 2-வது திருமணம் செய்துக் கொண்டனர்.

சமீபமாக சமந்தா – ‘பேமிலி மேன்’ இயக்குநர் ராஜ் இருவரும் காதலித்து வந்தனர். இருவருமே இதனை உறுதிப்படுத்தவில்லை. ஆனால், அவர்கள் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இதனை உறுதிப்படுத்தின.

தற்போது இருவரும் கோயம்புத்தூரில் உள்ள ஈஷாவில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்த திருமணத்தில் இருவருக்கும் மிக நெருக்கமான நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா பின்பு விவகாரத்து பெற்றார். அதே போல் இயக்குநர் ராஜும் திருமணம் செய்து விவகாரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தா – இயக்குநர் ராஜ் இருவருக்குமே இது இரண்டாவது திருமணமாகும். சமந்தா – ராஜ் திருமணம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி, பலரும் வாழ்த்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை தொடரும் - வானிலை மையம்

 

பதிவு: திங்கட்கிழமை,  டிசம்பர் 01, 2025, கார்த்திகை 15,  விசுவாவசு வருடம் 03-30: PM

சென்னை,

வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறவிப்பு மற்றும் எச்சரிக்கை:

நேற்று (30-11-2025) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் புதுவை கடலோரப்பகுதிகளில் நிலவிய "டிட்வா" புயல், நேற்று 0530 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து அதே பகுதிகளில் நிலவியது. இது வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று (01-12-2025) காலை 08.30மணி அளவில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வடதமிழகம் புதுவை -தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு வடகிழக்கே 130 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலூருக்கு வடகிழக்கே 150 கிலோ மீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு தெற்கு தென்கிழக்கே சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. அப்பொழுது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப்பகுதிகளிலிருந்து வடதமிழக-புதுவை கடற்கரைக்குமான குறைந்தபட்ச தூரம் 40 கிலோ மீட்டராக இருந்தது.

இது, அடுத்த 12 மணி நேரத்துக்கு, வடதமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அப்பொழுது, சென்னையிலிருந்து குறைந்தபட்ச தூரமானது 30 கிலோமீட்டராகவும் இருக்கக்கூடும்.

01-12-2025

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பலத்த தரைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

02-12-2025

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

03-12-2025 முதல் 05-12-2025 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

06-12-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (01-12-2025)

வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். பொதுவாக வெப்பநிலை 22-24° செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

நாளை (02-12-2025)

வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வட தமிழகம் புதுவை கடலோரப்பகுதிகள்:

01-12-2025

சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், மாலை முதல் காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து, மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 02-12-2025 காலை முதல் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

தென் தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள்:

01-12-2025

சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு, காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 02-12-2025 காலை முதல் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள்:

01-12-2025

சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், மாலை முதல் காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து, மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 02-12-2025 காலை முதல் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆழ் கடல் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் இப்பகுதிகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிட் பண்ட் நடத்தி பண மோசடி - காங்கிரஸ் மாநில பொதுச்​ செயலார் தளபதி பாஸ்கர் கைது

 

பதிவு: திங்கட்கிழமை,  டிசம்பர் 01, 2025, கார்த்திகை 15,  விசுவாவசு வருடம் 02-25: PM

சென்னை,

சிட் பண்ட் நடத்தி பண மோசடியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் நிர்வாகியை கைது செய்து போலீஸார் விசாரிக்கின்றனர். வளசர​வாக்​கம் அருகே காரம்​பாக்​கம், பொன்​னி ​நகர், விவே​கானந்​தர் தெரு​வில் வசிப்​பர் தளபதி பாஸ்​கர் (52).

காங்​கிரஸ் கட்​சி​யின்​ ​மாநில பொதுச்​ செயல​ராக உள்ளார். இவர் போரூரில் சிவலிங்கா சிட் ஃபைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறு​வனம் நடத்தி வந்தார். இந்நிறு​வனத்தை நடத்​தி​ய​தில் பாஸ்​கருக்கு கடுமை​யான நஷ்டம் ஏற்பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது.

தளபதி பாஸ்கரின் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து, ஏமாந்தவர்கள் சென்னை காவல் ஆணையரிடம் ஏற்கெனவே புகார் அளித்திருந்தனர். அதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் திடீரென தலைமறைவான தளபதி பாஸ்கர், கோயம்பேட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருப்பது தெரிந்து நேற்று முன்தினம் இரவு அங்கு திரண்ட பணம் முதலீடு செய்தவர்கள் 25-க்கும் மேற்பட்டவர்கள், தளபதி பாஸ்கரை அறைக்குள் அடைத்து வைத்து பணத்தை திருப்பிக் கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து கோயம்பேடு போலீஸார் சம்பவ இடம் விரைந்து தளபதி பாஸ்கரை மீட்டு மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் நேற்று ஒப்படைத்தனர். இதையடுத்து அவரை கைது செய்து, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கம் விலை... ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்தை தாண்டியது

 

பதிவு: திங்கட்கிழமை,  டிசம்பர் 01, 2025, கார்த்திகை 15,  விசுவாவசு வருடம் 02-05: PM

சென்னை,

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடனேயே போக்கு காட்டி வருகிறது. முதலீட்டாளர்களின் கவனம் ஒரு நாள் தங்கத்தின் பக்கமும், மறுநாளில் பங்கு சந்தைகள் பக்கமும் மாறி மாறி செல்வதால் இந்த நிலை நீடிக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97,600 என்ற உச்சத்துக்கு சென்று, அதே மாதம் 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.88,600 என்ற நிலைக்கு வந்தது.

தங்கம் விலை மீண்டும் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்தைக் கடந்தது. வெள்ளி விலையும் ஏற்றம் கண்டுள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், அக்.17-ம் தேதி ரூ.97,600-ஆக விலை அதிகரித்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு கடந்த அக். 28-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.88,600 ஆக குறைந்தது. தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருக்கிறது.

இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.1) கிராமுக்கு ரூ.90 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12,070-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.720 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.96,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.196-க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.4 ஆயிரம் அதிகரித்து, ஒரு கிலோ ரூ.1,96,000-க்கு விற்பனையாகிறது.