Friday, November 14, 2025

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் - பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுக - சீமான்

 


பதிவு: வெள்ளிக்கிழமை,   நவம்பர் 14, 2025, ஐப்பசி 28, விசுவாவசு வருடம் 05-00: AM

சென்னை,

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

உரிய ஊதியம், ஊக்கத்தொகை, பழைய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வழங்க வலியுறுத்தி மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்கள் சென்னையில் தொடர் காத்திருப்பு அறப்போராட்டத்தை முன்னெடுத்து வருவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அறிவிற் சிறந்த அடுத்தத் தலைமுறையை உருவாக்கும் பேரறிஞர்களான ஆசிரியர் பெருமக்களை வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்கு திமுக அரசு தள்ளியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, பணிமேம்பாட்டு ஊதியம் மற்றும் நிலுவைத்தொகையினை உடனடியாக வழங்க வேண்டும்.

UGC நெறிமுறைகளின்படி கல்லூரி ஆசிரியர் பெருமக்களுக்கு முதுநிலைப் பட்டத்திற்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.

பணியில் உள்ள ஆசிரியர் பெருமக்களின் புத்தாக்கப் பயிற்சிக்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும்.

இணைப்பேராசிரியர் பணி மேம்பாட்டிற்குப் பி.எச்.டி கட்டாயம் என்ற நிபந்தனையைத் தளர்த்திட வேண்டும்.

கல்லூரி ஆசிரியர்களுக்கு, பேராசிரியர் பதவிக்கான கல்லூரிக் கல்வி இயக்குநரின் செயல்முறை ஆணைகளை உடனடியாக வழங்க வேண்டும்.

தமிழ் கல்வித்தகுதி தேர்வு பல்கலைக்கழகங்களில் முடித்திருப்பவர்களுக்கு அனுமதி வழங்கிட வேண்டும்.

கல்லூரி நிர்வாகிகளின் ஆசிரியர் விரோதப்போக்கினை தடுத்து நிறுத்த வேண்டும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளைத் தனித்தனியாகப் பிரித்து, அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கு எவ்விதப் பணிப்பலன்களும் கிடைக்கப்பெறாமல் செய்யக் கொண்டு வரப்படும் தனியார் பல்கலைக்கழகம் திருத்த சட்ட முன்வடிவை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கல்லூரி ஆசிரியப் பெருமக்களின் நியாயமான கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

தங்களின் அடிப்படை உரிமைகளைக் காக்க, சென்னை சைதாப்பேட்டையிலுள்ள கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் 40-வது முறையாகத் தொடர் காத்திருப்பு அறப்போராட்டத்தை முன்னெடுத்துள்ள ஆசிரியர் பெருமக்களுக்கு நாம் தமிழர் கட்சி தம்முடைய முழுமையான ஆதரவினை அளித்துக் கோரிக்கைகள் வெல்லும்வரை துணைநிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

பிஹார் சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார்? - இன்று வாக்கு எண்ணிக்கை

 


பதிவு: வெள்ளிக்கிழமை,   நவம்பர் 14, 2025, ஐப்பசி 28, விசுவாவசு வருடம் 04-30: AM

பாட்னா,

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பிஹார் சட்டசபை தேர்தல் கடந்த 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடந்தது. மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுதான் பீகாரில் அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும். வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், ‘விவிபாட்’ எனப்படும் ஒப்புகை சீட்டு எந்திரங்களும் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நிறைந்த பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. அறைகளுக்கு இரட்டை பூட்டுப்போடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அறைகளின் வளாகங்களில் தலா ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மாவட்ட உயர் அதிகாரிகள் பணியில் உள்ளனர். அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும், சட்டசபை தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் பாதுகாப்பு அறைகளுக்கு அடிக்கடி நேரில் சென்று ஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

38 மாவட்டங்களில் மொத்தம் 46 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஈரடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள்அடுக்கில், ஆயுதம் தாங்கிய துணை ராணுவப்படையினரும், வெளிஅடுக்கில் மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமராக்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், 46 வாக்கு எண்ணிக்கை மையங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. காலை 8 மணிக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. காலை 9 மணியில் இருந்து முன்னிலை நிலவரம் தெரிய வரும். மத்திய பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். எல்லாம் வீடியோவில் பதிவு செய்யப்படும்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இதெல்லாம் நம்ப முடியாதது, மகா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று அக்கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். எனவே, பீகாரில், தொடர்ந்து 5-வது தடவையாக நிதிஷ்குமார் ஆட்சியை பிடிப்பாரா? அல்லது எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்பது இன்று தெரிந்துவிடும்.

தொடரை வெற்றியுடன் துவக்குமா இந்தியா? - இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்


பதிவு: வெள்ளிக்கிழமை,   நவம்பர் 14, 2025, ஐப்பசி 28, விசுவாவசு வருடம் 03-30: AM

கோல்கட்டா,

இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் இன்று துவங்குகிறது. கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் தொடரை வெற்றியுடன் துவக்கலாம்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் (மகாத்மா காந்தி-நெல்சன் மண்டேலா கோப்பை) பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்குகிறது. இந்திய அணி, சொந்தமண்ணில் முதன் முறையாக இளம் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் களமிறங்குகிறது.

தனது முதல் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து மண்ணில் 'டிரா' (2-2) செய்து அசத்திய சுப்மன் கில், மீண்டும் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்திய அணிக்கு இளம் ஜெய்ஸ்வால், அனுபவ லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் தரவுள்ளது. 3வது வீரராக தமிழகத்தின் சாய் சுதர்சன் வருகிறார். இதுவரை 5 டெஸ்டில், 9 இன்னிங்சில் 273 ரன் மட்டும் எடுத்துள்ளார். ஒரு சதமும் அடிக்கவில்லை. இத்தொடர் இவருக்கு அக்னிப் பரீட்சையாக இருக்கும்.

'மிடில் ஆர்டரில்' கேப்டன் சுப்மன் கில், காயத்தில் இருந்து மீண்ட விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட், சமீபத்திய உள்ளூர் போட்டிகளில் அசத்தி வரும் துருவ் ஜுரெல் (140, 56, 125, 44, 132, 127) ரன் சேர்க்கும் பட்சத்தில் எதிரணிக்கு நெருக்கடி தரலாம்.

இரண்டு 'வேகம்'

பவுலிங்கை பொறுத்தவரையில் இந்திய அணியில் பும்ராவுடன், முகமது சிராஜ் அல்லது உள்ளூர் வீரர் ஆகாஷ் தீப் சேர்க்கப்படலாம்.

சுழற்பந்து வீச்சில் தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர், 'சீனியர்' ஜடேஜா, அக்சர் படேல் என மூவர் கூட்டணிக்கு வாய்ப்பு தரப்படும். இவர்கள் 'ஆல் ரவுண்டர்களாக' இருப்பது, இந்திய அணியின் பேட்டிங்கிற்கு கைகொடுக்கும். இதனால் குல்தீப் யாதவ் இடம் பெறுவது சந்தேகம் தான்.

'சுழல்' பலம்

டெஸ்ட் உலகின் நடப்பு சாம்பியன் தென் ஆப்ரிக்கா. கேப்டன் பவுமா மீண்டும் அணிக்கு திரும்பியது பலம். மார்க்ரம், ரிக்கிள்டன் ஜோடி துவக்கம் தர, ஸ்டப்ஸ், டோனி டி ஜோர்ஜி, விக்கெட் கீப்பர் வேர்ரேன், என பலர் பேட்டிங்கில் உதவ காத்திருக்கின்றனர். பவுமா வருகையால், விளாசல் வீரர் டிவால்டு பிரவிஸ் இடம் பறிபோகலாம்.

வழக்கமாக தென் ஆப்ரிக்க அணி வேகப்பந்து வீச்சில் சிறப்பாக செயல்படும். சமீபகாலமாக கேஷவ் மஹாராஜ், தமிழகத்தின் நாகப்பட்டினத்தை பூர்விகமாக கொண்ட சேனுரன், சைமன் ஹார்மர் என மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் எதிரணிகளை மிரட்டி வருகிறது. சமீபத்திய 2 டெஸ்டில் இவர்கள் 35 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இந்திய மண்ணிலும் நெருக்கடி தர முயற்சிக்கலாம். வேகத்தில் ரபாடா, யான் சென் உள்ளனர்.

பந்து சுழலுமா?

ஈடன் கார்டன் ஆடுகளத்தில் கடந்த 15 ஆண்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 159 விக்கெட்டுகள் வீழ்ந்தன. இதில் வேகப்பந்து வீச்சாளர்கள் 97 விக்கெட் (61 சதவீதம்) சாய்த்துள்ளனர்.

இம்முறை ஆடுகளத்தில் லேசான புற்கள் காணப்படுகின்றன. அடுத்தடுத்த நாளில் அதிக விரிசல் ஏற்படாது. முதல் 2 நாள் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். காலை, மாலையில் நன்றாக பந்து 'சுவிங்' ஆகும்.

மழை வருமா?

கோல்கட்டாவில் இன்று முதல் அடுத்த ஐந்து நாளில் வானம் தெளிவாக காணப்படும். மழை வர வாய்ப்பில்லை.

யார் ஆதிக்கம்?

இரு அணிகள் 44 டெஸ்டில் மோதின. இந்தியா 16, தென் ஆப்ரிக்கா 18ல் வென்றன. 10 போட்டி 'டிரா' ஆகின.

* ஈடன் கார்டனில் இரு அணிகள் மோதிய 3 டெஸ்டில் இந்தியா 2, தென் ஆப்ரிக்கா 1ல் வென்றன.

* 2000க்குப் பின் இங்கு இந்தியா விளையாடிய 12 டெஸ்டில் 8ல் வென்றது. 3 'டிரா' ஆகின. 1ல் தோற்றது (2010, இங்கிலாந்து).

காத்திருக்கும் சாதனை

இந்திய அணியின் ஜடேஜா, இதுவரை 87 டெஸ்டில் 338 விக்கெட் வீழ்த்தி, 3990 ரன் எடுத்துள்ளார். இன்னும் 10 ரன் எடுக்கும் பட்சத்தில் டெஸ்டில் 300 விக்கெட், 4000 ரன் என்ற மைல்கல்லை எட்டிய, நான்காவது 'ஆல் ரவுண்டர்' ஆகலாம். முதல் 3 இடத்தில் இந்தியாவின் கபில் தேவ் (5248 ரன், 434 விக்.,), இங்கிலாந்தின் இயான் போத்தம் (5200, 383), நியூசிலாந்தின் வெட்டோரி (4531, 362) உள்ளனர்.

காலை 9.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

இந்தியா

யஷஸ்வி ஜெய்ஸ்வால், லோகேஷ் ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் அல்லது அக்‌ஷர் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

தென்ஆப்பிரிக்கா

எய்டன் மார்க்ரம், ரையான் ரிக்கெல்டன், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ேடானி டி ஜோர்ஜி, பவுமா (கேப்டன்), கைல் வெரைன், செனுரன் முத்துசாமி, சைமன் ஹார்மர், கேஷவ் மகராஜ், மார்கோ யான்சென், ககிசோ ரபடா.