பதிவு: சனிக்கிழமை, நவம்பர் 29, 2025, கார்த்திகை 13, விசுவாவசு வருடம் 02-50: PM
சென்னை,
தமிழகம் – புதுச்சேரி – ஆந்திரா கடல் பகுதியில் நாளை அதிகாலை நெருங்குகிறது - ‘டிட்வா’ புயல்: பீதியில் சென்னை - 9 துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு - 54 விமானங்கள் ரத்து - 10 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் வரவழைப்பு
கனமழையால் வேதாரண்யத்தில் உள்ள உப்பளங்கள் நீரில் மூழ்கியுள்ளது.
தமிழ்நாடு– புதுச்சேரி – ஆந்திர கடல்பகுதியை நாளை அதிகாலை டிட்வா புயல் நெருங்கும் என்று கூறப்படுகிறது.
டிட்வா புயலால் நாகை மாவட்டத்தில் அதிக கனமழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், கோடியக்கரையில் 25 செ.மீ மழைப்பதிவாகி உள்ளது.
‘டிட்வா' புயல் இலங்கை மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அதாவது, காரைக்காலில் இருந்து தெற்கு–தென் கிழக்கே 190 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தெற்கு–தென்கிழக்கே 300 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கே 380 கி.மீ. தொலைவிலும் தற்போது மையம் கொண்டுள்ளது. ‘டிட்வா' புயல் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது தொடர்ந்து வடக்கு – வடமேற்கில் நகர்ந்து நாளை காலை வட தமிழ்நாட்டை நெருங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
‘டிட்வா' புயல் இலங்கை நிலப்பரப்பில் இருந்து முழுமையாக விலகி, டெல்டா மற்றும் வட இலங்கை கடல் பகுதிகளை இன்று காலை அடைந்துள்ளது. தற்போது வரை 65 கி.மீ. வேகத்தில் காற்று சுழற்சி இருக்கிறது. இலங்கை பரப்பில் இருந்து விலகி, டெல்டாவை அடையும்போது புயல் காற்று சுழற்சியின் மைய வேகம் 70 முதல் 80 கி.மீ. வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘டிட்வா' புயல் டெல்டா கடற்கரையை நெருங்கும்போது மெதுவாக நகரவோ அல்லது நிற்கவோ வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும், அந்த நேரத்தில் புயலின் மேற்கு பகுதி அதாவது முன் பகுதி காவிரி டெல்டா பகுதிகளில் கரையைத் தொட இருப்பதாகவும், அது முழுமையாக கரையை கடக்காது எனவும் ஹேமச்சந்தர் கூறினார். சில மணி நேரங்கள் டெல்டா நிலப்பரப்பில் ஊடுருவும் ‘டிட்வா' புயல், பின்னர் வலுவான நிலையில் தொடர்ந்து வடக்கு திசையை நோக்கி நகர்ந்து, இன்று பிற்பகலுக்கு பிறகு சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களை வந்தடையும். அவ்வாறு வரக்கூடிய ‘டிட்வா' புயல் சென்னை கடலோரப் பகுதிகளுக்கு அருகில் சற்று நிற்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இன்று முதல் மழை
தற்போதுள்ள நிலவரப்படி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) வடதமிழகம்–புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே புயல் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் இன்று பிற்பகலில் இருந்து நாளை மறுதினம் (திங்கட்கிழமை) வரையிலும் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் எனவும், அதுவும் டெல்டாவில் இன்று குறுகியநேரத்தில் தீவிர கனமழை கொட்டித்தீர்க்கவும் வாய்ப்பு உள்ளது.
இன்று மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணா மலை, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிககனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
90 கி.மீ. வேகத்தில் காற்று
நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டையில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, காஞ்சீபுரம், வேலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த புயலினால் இன்று டெல்டா மற்றும் அதனையொட்டிய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் தரைக்காற்று மணிக்கு 70 கி.மீ. முதல் 90 கி.மீ. வரையிலும், ஏனைய கடலோர மாவட்டங்களில் 55 கி.மீ. முதல் 75 கி.மீ. வரையிலும், நாளை தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. முதல் 75 கி.மீ. வேகத்திலும், ஏனைய வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் 60 கி.மீ. முதல் 80 கி.மீ. வரையிலான வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் டிட்வா புயல் வடக்கு திசை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் இன்று அதிகாலை முதலே சென்னை மற்றும் புறநகரில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்தாலும் சென்னை முழுவதும் பரவலாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
கோடியக்கரை–25 செ.மீ.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம் வருமாறு:–
கோடியக்கரை–25 செ.மீ., வேதாரண்யம் – 18 செ.மீ., வேளாங்கண்ணி– 13 செ.மீ., திருப்பூண்டி, நாகப்பட்டினம் – 12 செ.மீ., தலைஞாயிறு – 11 செ.மீ., பாம்பன்– 10 செ.மீ., ராமேஸ்வரம், தங்கச்சிமடம், மண்டபம், காயல்பட்டினம், இளையான்குடி, திருக்குவளை, தொண்டி– தலா 7 செ.மீ., தீர்த்தாண்டத்தானம், சூரங்குடி, திருச்செந்தூர் – 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
54 விமானங்கள் ரத்து
டிட்வா புயலால் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் மற்றும் வருகை தரும் 54 விமானங்கள் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் 12 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.அதேபோன்று சென்னைை, பெங்களூரு, மும்பையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் 11 சிறிய விமானங்களும், ஹைதராபாத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் 1 விமானங்கள் மற்றும் சென்னைக்கு வரும் விமானங்கள் என 54 விமானங்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து தூத்துக்குடி, மதுரை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் உள்நாட்டு விமானங்கள் மட்டுமின்றி பல வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. , பயணிகள் தங்களுக்கான விமான நிறுவன அலுவலகங்களை தொடர்புகொண்டு விமானத்தின் புறப்பாடு குறித்த தகவல்களை உறுதி செய்த பின்னா் பயணத்தை மேற்கொள்ள விமானநிலைய நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
10 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் வரவழைப்பு
விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய தமிழக கடலோர மாவட்டங்களில் மத்திய அவசரக்கால படை 14 குழுக்களை நிறுத்தியுள்ளது. மேலும் புதுச்சேரிக்கு கூடுதலாக 10 குழு வரவழைக்கப்பட உள்ளனர். கூடுதலாக புனே, வதோதராவில் இருந்து 10 என்டிஆர்எப் குழுக்கள் தமிழகம் வர உள்ளன. 5 அணிகள் சென்னையிலும், 5 அணிகள் விழுப்புரத்திலும் நிறுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்திற்கு கூடுதல் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் வரவழைக்கப்பட்ட உள்ளதாக துணை கமாண்டர் தெரிவித்துள்ளார்.
4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
டிட்வா புயல் காரணமாக 9 துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 4-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.புயல் காரணமாக துறைமுகத்தில் கப்பல்களுக்கு ஆபத்து, கடலோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் 4-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள் விடுமுறை
டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி-–கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை, விழுப்புரம், அரியலூர், திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், ராமேசுவரம், ஆர்.எஸ்.மங்களம் மற்றும் திருவாடனை வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தும். மேலும், எந்த பள்ளிகளும் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது
கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்கள் மூடல்
கொடைக்கானலிலும் இன்று விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்கள் இன்று ஒருநாள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை காரணமாக மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி, பில்லர் ராக், குணா குகை, பைன் பாரஸ்ட், மோயர் சதுக்கம், பேரிஜம் ஏரி ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




