Saturday, November 8, 2025

அமைச்சர் நேரு அமைதிக்கு காரணம் என்ன? அமலாக்கத் துறையா?

 


பதிவு: சனிக்கிழமை, நவம்பர் 08, 2025, ஐப்பசி 22, விசுவாவசு வருடம் 06-00: AM

தஞ்சாவூர்,

நகராட்சி நிர்வாக துறையில், அலுவலர் மட்ட பணி நியமனத்தில், முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், வழக்குப்பதிவு செய்யுமாறும் தமிழக டி.ஜி.பி.,க்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.

இதனால், அத்துறை அமைச்சரான நேருவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஆலோசனை இந்த விவகாரம் பூதாகரமாகி, பதவிக்கு சிக்கல் வந்து விடக்கூடாது என்பதற்காக, சீர்காழி சட்டநாதர் கோவிலுக்கு சென்று அமைச்சர் நேரு வழிபட்டார்.

இந்நிலையில், தஞ்சாவூரில், மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், நேற்று நடந்த வாக்குச்சாவடி முகவர்கள், பூத் டிஜிட்டல் ஏஜன்ட் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

கூட்டத்தில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் செழியன், “பா.ஜ., வெற்றி பெற முடியாது என்ற நிலையில், கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தான் ஓட்டு திருட்டு.

''அடிமைகளை கையில் வைத்துக் கொண்டு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்றவர்கள் நம்மை வீழ்த்த நினைக்கின்றனர்.

''இந்தியாவில் பிரதமரையே எதிர்க்கும் துணிவு, வேறு எந்த மாநில முதல்வருக்கும் இல்லை.

வெற்றிக்கனி ''பல அரசியல் கட்சிகளும் பா.ஜ.,வுக்கு அடிபணிந்த நிலையில், 'மாநில உரிமையை கட்டிக் காப்போம்' என பிரதமரையே எதிர்த்து வெற்றிக்கனி பறிப்பவர், முதல்வர் ஸ்டாலின்,” என்றார்.

பா.ஜ., மோடி, அமித் ஷா என அமைச்சர் செழியன் வெளுத்து வாங்கிய நிலையில், பா.ஜ., மற்றும் மோடிக்கு எதிராக அமைச்சர் நேரு, எதுவும் பேசவில்லை.

நேரு பேசும்போது, “வாக்காளர் பட்டியலில், சிறுபான்மையினர் ஓட்டுகளை விடுபடாமல் சேர்க்க வேண்டும். சிறுபான்மையினர் ஓட்டு அனைத்தும், தி.மு.,க.,வுக்கான ஓட்டுகள்.

''ஆவணங்கள் இல்லாமல் பிற மாநில வாக்காளர்களை சேர்க்க அனுமதிக்கக்கூடாது. கட்சியினர், கண்ணும் கருத்துமாக செயல்பட்டு, தி.மு.க.,வை இரண்டாவது முறையாக வெற்றி பெற செய்ய வேண்டும்,” என்றார்.

'அமலாக்கத் துறையின் நெருக்கடியால், அமைச்சர் நேரு அமைதியாகி விட்டார்' என, ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற கட்சியினர் கூறினர்.

டி.எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு.... ஐ.ஜி.,க்கள் எச்சரிக்கை

 

பதிவு: சனிக்கிழமை, நவம்பர் 08, 2025, ஐப்பசி 22, விசுவாவசு வருடம் 05-30: AM

சென்னை,

'ரவுடிகளை ஒழிக்க, கொலைகள் நடக்காமல் இருக்க, முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், பதவி உயர்வில் சிக்கல் நேரிடும்' என, டி.எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு, ஐ.ஜி.,க்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மாநில அளவில் நடக்கும் குற்றங்கள், அவற்றை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, மண்டல வாரியாக ஐ.ஜி.,க்கள் ஆய்வு கூட்டங்களை நடத்தி உள்ளனர். இது குறித்து, டி.எஸ்.பி.,க்கள் கூறியதாவது:

காவல் நிலைய பதிவுகளில், விசாரிக்கப்படாத சி.எஸ்.ஆர்., ரசீதுகளே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். போலீசார், ரவுடிகளின் வீட்டருகே சென்று, விசாரணை செய்ததற்கான, 'லைவ் லொகேஷன்' விபரத்தை, இன்ஸ்பெக்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும். ரவுடிகள் குறித்து கிடைக்கும் தகவல்களை, 'பருந்து' செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

போலீஸ் நிலைய எல்லைகளில், பகுதி வாரியாக நடந்த குற்றங்கள் குறித்து நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். செயின் பறிப்பு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவோர், எளிதில் தப்பி செல்லாமல் இருக்க, தற்காலிகமாக 'செக் போஸ்ட்' அமைக்க வேண்டும்.

பகல், இரவு நேரங்களில், ரோந்து பணிகளில் கிடைத்த தகவல்களை, பதிவேடுகளில் குறித்து வைக்க வேண்டும்.

அமாவாசை நாளில் ரோந்து பணிக்கு, கூடுதலாக போலீசாரை நியமிக்க வேண்டும். முன் விரோதம், பழிக்கு பழி வாங்க துடிக்கும் எதிரிகள் உள்ளிட்டோரை கண்காணித்து கொலைகளை தடுக்க வேண்டும். போலீஸ் நிலைய எல்லைகள் தோறும், குற்றங்களை குறைக்க வேண்டும்.

டி.எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பணித்திறன் குறித்து, எஸ்.பி.,க்கள் ஆய்வு செய்வர். அவர்கள் தரும் அறிக்கை அடிப்படையில், மேல் நடவடிக்கை எடுக்கப்படும். பதவி உயர்வுக்கும் சிக்கல் ஏற்படலாம் என, ஐ.ஜி.,க்கள் எச்சரிக்கை செய்தனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.