Tuesday, December 2, 2025
Madurai Malli, Jasmine price soars to over Rs.4500 per kg in Tamil Nadu
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
R.B.Udayakumar makes serious allegations, "Each polling station has more...
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Former CM of Puducherry V.Narayanasamy Says, Congratulations on Sengotta...
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Thirumavalavan Speech About SIR | Bar Association State Conference at Ma...
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலையில் நாளை மகாதீபம் - குவியும் பக்தர்கள்
பதிவு: செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 02, 2025, கார்த்திகை 16, விசுவாவசு வருடம் 07-30: AM
மகா தீபத்தன்று சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.
இங்கு பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
திருமாலுக்கும், பிரம்மாவுக்கும் இடையே ஏற்பட்ட ‘தான்’ என்ற அகந்தையை போக்க சிவபெருமான் திருவண்ணாமலையில் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளையே கார்த்திகை தீபத்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று பெயர் சூட்டி அழைக்கப்படும் 2,668 அடி உயரமுள்ள மலையையே சிவனாக வணங்கப்பட்டு வருகிறது. சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி கொடுத்ததால் அதனை போற்றும் வகையில் காா்த்திகை தீபத்தன்று இந்த மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் நடைபெறும் விழாவாகும். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவை முன்னிட்டு தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் வெவ்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் நாளை (புதன்கிழமை) மாலை 6 மணியளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. நாளை மகா தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும்.
தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்படும். மாலையில் பஞ்சமூர்த்திகள் சாமி சன்னதி முன்பாக உள்ள தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். அதைத்தொடர்ந்து 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.
அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படும். அதேநேரத்தில் மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். அப்போது கோவிலில் கூடியிருக்கும் பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்வார்கள். மகாதீபத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். மகா தீபம் ஏற்றியதும் கிரிவலப்பாதையில் இருக்கும் பக்தர்கள் மலையை நோக்கி மகாதீபத்தை வணங்குவார்கள்.
மகாதீபம் ஏற்றப்படும் நாளில் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மலையில் தீபம் ஏற்றும் வரை தங்கள் வீடுகளிலோ, வியாபார நிறுவனங்களிலோ மின்விளக்குகள் போடமாட்டார்கள். மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றிய பிறகே விளக்கு போடுவார்கள். மேலும் தங்கள் வீடுகளிலும், வீட்டின் முன்பும் அகல்விளக்குகள் ஏற்றி வழிபடுவார்கள். அந்தநேரம் திருவண்ணாமலை நகரமே ஒளிவெள்ளத்தில் காட்சியளிக்கும்.
மகாதீபம் ஏற்றியதும் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலும் உள்ள பொதுமக்கள் வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களில் அகல்விளக்குகள் ஏற்றி மலையை நோக்கி வழிபடுவார்கள். இந்த ஆண்டு மகா தீபத்தன்று சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக தீபத்தன்று அல்லது தீபத்திற்கு மறுநாள் பவுர்ணமி தொடங்கும். அதன்படி இந்த ஆண்டு 4-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 7.18 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுநாள் 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 5.37மணிக்கு நிறைவடைகிறது. அதனால் நாளை முதல் 5-ந் தேதி வரையில் 3 நாட்கள் திருவண்ணாமலையில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதனால் இன்று முதல் திருவண்ணாமலை நகர் முழுவதும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும். திருவண்ணாமலை நகரை சுற்றி இணைக்கும் புறவழிச்சாலைகள் உள்பட 24 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 130 இடங்களில் கார் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
ஒரு பஸ் நிலையத்தில் இருந்து மற்றொரு பஸ் நிலையத்திற்கு செல்ல ஆட்டோ வசதி, இலவச பஸ் வசதி போன்றவை செய்யப்பட்டு உள்ளது. கோவில், கிரிவலப்பாதை மற்றும் தற்காலிக பஸ்நிலையங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அனுமதி அளிக்கப்பட்ட 231 இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மகா தீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவதால் பாதுகாப்பு பணிக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் தலைமையில் சுமார் 15 ஆயிரம் போலீசார் திருவண்ணாமலையில் வந்து குவிந்து உள்ளனர். விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரை சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
எஸ்ஐஆர் விவகாரத்தைக் கிளப்பி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி
பதிவு: செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 02, 2025, கார்த்திகை 16, விசுவாவசு வருடம் 06-50: AM
புதுடெல்லி,
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணியைக் கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் நேற்று அமளியில் ஈடுபட்டன. இதனால், மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும், மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இந்திய பார்வையற்றோர் மகளிர் கிரிக்கெட் அணி, இந்திய மகளிர் கபடி அணி ஆகியவற்றுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) கண்டித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் அமைதி காக்குமாறு அவைத்தலைவர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார். ஆனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷமிட்டதால் அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை கூடியபோது, மணிப்பூர் ஜிஎஸ்டி சீர்திருத்த மசோதா, புகையிலைப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் மசோதா ஆகியவற்றை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன்படி, புகையிலைப் பொருட்களுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது. சிகரெட் மீதான கலால் வரி 2 மடங்காக அதிகரிக்கப்பட உள்ளது.
மசோதாக்களை அமைச்சர் தாக்கல் செய்து பேசியபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டனர். இதனால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் அவை கூடியபோது, மணிப்பூர் ஜிஎஸ்டி திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போதும் எஸ்ஐஆர் பணியைக் கண்டித்து காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணமூல் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில் வெளிநடப்பு
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் முதல் முறையாக நேற்று மாநிலங்களவையை வழிநடத்தினார். இதையொட்டி, அவையின் சார்பில் அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்திப் பேசினர்.
பிறகு, பிற்பகலில் மாநிலங்களவை கூடியபோது, எஸ்ஐஆர் பணி குறித்து அவையில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்து அமளியில் ஈடுபட்டனர்.
‘எஸ்ஐஆர் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், உடனடியாக விவாதம் நடத்துமாறு நிர்ப்பந்தம் செய்யக் கூடாது’ என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
பிரதமர் மோடி அறிவுரை
கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பிரதமர் பேசியதாவது: குளிர்கால கூட்டத்தொடர் வெறும் சடங்காக மாறிவிடக் கூடாது. நாட்டின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் சிறப்பு கூட்டத்தொடராக அமைய வேண்டும்.

சமீபத்தில் நடைபெற்ற பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்திய ஜனநாயகம் மேலும் வலுவடைந்துள்ளது. இந்தியாவின் ஜனநாயகத்தையும், அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியையும் பார்த்து உலக நாடுகள் வியப்பில் ஆழ்ந்துள்ளன.
பெரும்பாலும் தேர்தல்களுக்கான களமாகவோ அல்லது தேர்தல் தோல்விக்குப் பிறகு விரக்தியை வெளிப்படுத்தும் இடமாகவோ நாடாளுமன்றம் பயன்படுத்தப்படுகிறது. இந்த நடைமுறையை மக்கள் ஏற்பது இல்லை. தேர்தல் தோல்வி விரக்தியால் நாடாளுமன்றத்தை முடக்கக் கூடாது. அதேநேரம், தேர்தல் வெற்றியின் ஆணவமும் இருக்கவே கூடாது. குளிர்கால கூட்டத்தொடர் சமநிலையுடன் இருக்க வேண்டும். அவையின் மாண்பை அனைத்து உறுப்பினர்களும் காப்பாற்ற வேண்டும்.
நாடாளுமன்றத்தில் நாடகம் நடத்தக்கூடாது. வெற்று கோஷம் எழுப்பக்கூடாது. எதிர்ப்பு, எதிர்மறை என்பதெல்லாம் அரசியலுக்குப் பயனுள்ளதாக இருக்கலாம். ஆனால், நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தும்போது நேர்மறை சிந்தனைகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் தங்களது ஜனநாயகக் கடமையை உணர வேண்டும். நாட்டின் நலன்களை கருத்தில் கொண்டு ஆக்கப்பூர்வமான விஷயங்கள் குறித்து மட்டுமே பேச வேண்டும். முக்கியமான, அர்த்தமுள்ள பிரச்சினைகளை மட்டுமே அவையில் எழுப்ப வேண்டும்.
எதிர்க்கட்சிகள் தங்கள் அணுகுமுறை, உத்தியை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. சிறப்பாக செயல்படுவது குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்க தயாராக உள்ளேன்.
முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் எம்.பி.க்கள் தங்கள் தொகுதி பிரச்சினைகள், நாட்டின் வளர்ச்சி குறித்து பேச அனைத்து கட்சிகளும் உரிய வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் கூறினார்.
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு புகழாரம்
நாட்டின் 15-வது குடியரசு துணைத்தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த செப்டம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், மாநிலங்களவைக்கு அவர் முதல்முறையாக தலைமை தாங்கினார். அவருக்கு வாழ்த்து தெரி வித்து மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசியதாவது:
மாநிலங்களவைக்கு முதல்முறையாக தலைமை தாங்கும் தங்களுக்கு வாழ்த்துகள். அரசியல் என்பது உங்கள் பயணத்தின் ஒரு பகுதிதான். இளைஞராக இருந்தது முதல் தற்போது வரை சமூக சேவைதான் தங்களது முக்கிய நோக்கமாக இருந்துள்ளது. மிக எளிமையான வாழ்க்கையில் இருந்து நீங்கள் உயர் பதவிக்கு வந்திருப்பது நமது ஜனநாயகத்தின் வலிமையை காட்டுகிறது. உங்களது பணிவான தோற்றமானது சேவை, அர்ப்பணிப்பு, பொறுமையைப் பிரதிபலிக்கிறது.
குழந்தைப் பருவத்தில் நீங்கள் எதிர்பாராதவிதமாக அவிநாசி கோயில் குளத்தில் மூழ்கினீர்கள். ‘நான் மூழ்கியது மர்மமாகவே இருந்தது. என்னை யார் காப்பாற்றினார்கள்? எப்படி காப்பாற்றப்பட்டேன்? எதுவுமே எனக்கு தெரியாது. ஆனால் உயிர் பிழைத்தேன்’ என்று கூறியுள்ளீர்கள். அதேபோல, கோவையில் அத்வானி ரதயாத்திரையின்போது நடந்த குண்டு வெடிப்பில் சுமார் 60-70 பேர் கொல்லப்பட்ட நேரத்தில், நீங்கள் நூலிழையில் உயிர் தப்பினீர்கள். இந்த இரு சம்பவங்களிலும் இறைவன் அருள் இருப்பது தெளிவாக தெரிகிறது.
முதல்முறையாக காசிக்கு சென்று கங்கை அன்னையின் ஆசியை பெற்ற போது, இனி அசைவம் சாப்பிட மாட்டேன் என்று சபதம் ஏற்றீர்கள். வாராணசி எம்.பி. என்ற வகையில் இந்த சம்பவம் எப்போதும் எனது நினைவில் இருக்கும்.
எந்த பொறுப்பை வழங்கினாலும், திறம்படச் செய்யக்கூடியவர். உங்களது பயணம் ஒட்டுமொத்த தேசத்துக்கும் ஊக்கம் தருகிறது. அவையின் பாரம்பரியத்தையும், தலைவரின் கவுரவத்துக்கும் அனைத்து உறுப்பினர்களும் மதிப்பளிப்பார்கள் என நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை,
சென்னையில் இடைவிடாது பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னையை நோக்கி நகர்ந்து வருவதால் நகர் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இடைவிடாது பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். தொடர் மழையால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
இந்தநிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து நகர்ந்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னைக்கு கிழக்கே சுமார் 50 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதற்கடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, சென்னையில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் இருக்கக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை (புதன்கிழமை) முதல் 5-ந்தேதி வரையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:-
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பிறப்பித்துள்ளனர். மேலும் இன்று நடைபெற இருந்த பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளன.
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
-
பதிவு: திங்கள்கிழமை, அக்டோபர் 27, 2025, ஐப்பசி 10, விசுவாவசு வருடம் 04-15: AM சென்னை, 'வங்கக்கடலில் அந்தமான் தீவுகள் அருகே நிலை கொண்டி...


