Saturday, December 13, 2025

கரூர் நெரிசல் வழக்கில் தவறு நடக்கிறது - பதில் கேட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு - விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம்

பதிவு:  சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025, கார்த்திகை 27,  விசுவாவசு வருடம் 01-40: AM

புதுடெல்லி,

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏதோ தவறு நடக்கிறது' என குறிப்பிட்டு, வழக்கில் உயர் நீதிமன்ற பதிவாளரையும் ஒரு தரப்பாக சேர்த்து பதிலளிக்கும்படி நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள வேலுசாமிபுரத்தில், செப்டம்பர் 27ல் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இது குறித்து விசாரிக்க, தமிழக அரசு சார்பில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது.மனு தாக்கல் இதற்கிடையே, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த தனி நீதிபதி செந்தில் குமார், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டார்.

இது, சி.பி.ஐ., விசாரணை வேண்டாம் என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவுக்கு மாறாக இருந்தது.

இந்த விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிறப்பு புலனாய்வு குழு, ஒரு நபர் கமிஷனை ரத்து செய்து அக்டோபரில் உத்தரவிட்டது.

மேலும், கரூர் சம்பவத்தை சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட்டதோடு, அதை ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்றும் குறிப்பிட்டது.

இந்நிலையில், ஒரு நபர் கமிஷன், சிறப்பு புலனாய்வு குழு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, ஜே.கே.மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாதிடுகையில், ''ஒரு நபர் கமிஷன் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும். இது, சி.பி.ஐ., விசாரணையில் தலையிடாது.

''கூட்ட நெரிசல் சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க விதிமுறைகளை வகுக்கவும், பரிந்துரைகளை வழங்கவுமே ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது,'' என்றார்.

இதன்பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், எல்லாமே நியாயமாகவும், பாரபட்சமின்றியும் இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.

நோட்டீஸ் பொதுக்கூட்டங்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, எப்படி குற்றவியல் ரிட் மனுவாக பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து, சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் அனுப்பிய அறிக்கையை நாங்கள் படித்து பார்த்தோம்.

அங்கு ஏதோ தவறு நடக்கிறது. உயர் நீதிமன்றத்தில் நடப்பது எதுவும் சரியாக இல்லை. அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற பதிவாளரையும் ஒரு தரப்பாக சேர்க்க நோட்டீஸ் பிறப்பிக்கிறோம்.

திட்டவட்டம் 

அங்கு வழக்குகளை பட்டியலிடுவது, விசாரிப்பதில் பின்பற்றப்படும் விதிமுறைகள் தொடர்பாக நாங்கள் ஆய்வு செய்வோம். அதன்பின், மற்ற விஷயங்களை பற்றி விசாரிக் கலாம்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை இறுதி விசாரணைக்காக ஒத்தி வைத்தனர்.

அதே சமயம், இந்த விவகாரத்தில் ஏற்கனவே வழங்கிய இடைக்கால உத்தரவில் எந்த மாற்றங்களையும் மேற்கொள்ள முடியாது என, நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினர்.

விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம் 

கரூர், வேலுச்சாமிபுரத்தில் நடந்த நெரிசல் விபத்து தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதற்காக, கரூர் கலெக்டர் அலுவலக பயணியர் மாளிகையில், சி.பி.ஐ., சிறப்பு அலுவலகம் செயல்படுகிறது. இங்கு, சி.பி.ஐ., -- எஸ்.பி., பிரவீன்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், இணை பொதுச்செயலர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், கரூர் மாவட்ட அரசு தரப்பு மற்றும் போலீசார் வழங்கிய ஆவணங்களை, சி.பி.ஐ., அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில் த.வெ.க., தலைவர் விஜயை சம்மன் அனுப்பி நேரில் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். கரூருக்கு விஜயை அழைத்தால் பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருப்பதால், சென்னை சி.பி.ஐ., அலுவலகத்தில் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். 

இதற்காக, விஜய்க்கு டில்லியில் இருந்து சம்மன் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Featured post

கரூர் நெரிசல் வழக்கில் தவறு நடக்கிறது - பதில் கேட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு - விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம்

பதிவு:  சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025, கார்த்திகை 27,  விசுவாவசு வருடம் 01-40: AM புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்...