Friday, October 31, 2025

அசோக் நகரில் நடந்த அரசு காண்டிராக்டர் கொலை வழக்கில் கள்ளக்காதலி - தோழி அதிரடி கைது...

 


பதிவு: வெள்ளிகிழமை, அக்டோபர் 31, 2025, ஐப்பசி 14, விசுவாவசு வருடம் 10-00: AM

சென்னை,

தப்பியோடிய கள்ளக்காதலி மற்றும் அவரது தோழியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அசோக் நகரில் நடந்த அரசு காண்டிராக்டர் கொலை வழக்கில் அவரது கள்ளக்காதலி மற்றும் தோழி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பரபரப்பான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதுச்சேரி முதலியார்பேட்டை பாப்பன்சாவடியை சேர்ந்தவர் பிரகாஷ் (38 வயது). இவர் புதுச்சேரியில் பொதுப்பணித்துறையில் காண்டிராக்டர் தொழில் செய்து வந்தார். இதற்காக தனியாக நிறுவனம் ஒன்றையும் நடத்தினார். புதுச்சேரியில் கழிவுநீரகற்றும் பணியிலும் ஈடுபட்டார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

குடும்பத்தகராறில் இவரது மனைவி 2 குழந்தைகளுடன் பிரிந்து சென்றுவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் புதுச்சேரி நெட்டப்பாக்கத்தை சேர்ந்த சுகன்யா (37 வயது) என்ற பெண்ணுடன் பிரகாசுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. சுகன்யா, பிரகாசின் காண்டிராக்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சுகன்யாவும் தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்தார்.

இதனால் பிரகாசும், சுகன்யாவும் தங்களது திருமண பந்தங்கள் மற்றும் குடும்ப வாழ்க்கையை மீறி தனியாக உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தனர். பிரகாஷ் எங்கு சென்றாலும் சுகன்யாவை தன்னுடன் அழைத்து செல்வார். நேற்று முன்தினம் கழிவுநீரை அகற்றும் பணிக்காக வாடகைக்கு வாகனங்களை ஏற்பாடு செய்ய பிரகாஷ் தனது காரில் சென்னை வந்தார். அவருடன் சுகன்யாவும் வந்தார்.

சுகன்யாவின் கணவர் தனஞ்செழியன் சென்னை ஜாபர்கான்பேட்டையில் தனியாக வாழ்ந்தார். அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சுகன்யாவின் நெருங்கிய தோழியும், உறவுப்பெண்ணுமான குணசுந்தரி (27) ஜாபர்கான்பேட்டை பகுதியில் வசித்து வந்தார். என்ஜினீயரான அவர், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தார்.

பிரிந்து வாழ்ந்தாலும் மனைவி சுகன்யாவை மறக்க முடியாமல் தனஞ்செழியன் தவித்து வந்தார். தனது மனைவி குறித்த தகவல்களை அவரது தோழியான குணசுந்தரியிடம் அடிக்கடி கேட்டு தெரிந்து கொள்வார். நேற்று முன்தினம் சுகன்யா தனது கள்ளக்காதலன் பிரகாசுடன் சென்னை வருவதை தனஞ்செழியனுக்கு குணசுந்தரி தெரிவித்தார்.

மேலும் சுகன்யாவுடன் தொடர்பு கொண்ட குணசுந்தரி நாம் ஒன்றாக ஓட்டலில் சாப்பிடலாம் என்று அழைத்தார். அதன்பேரில் சுகன்யா சென்னை வந்தவுடன் குணசுந்தரிக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து சென்னை அசோக்நகர் 4-வது அவென்யூவில் உள்ள ஓட்டல் ஒன்றில் பிரகாஷ் உள்ளிட்ட 3 பேரும் சாப்பிட்டனர். இந்த தகவலை குணசுந்தரி, தனஞ்செழியனுக்கு தெரிவித்தார்.

மனைவியை மறக்க முடியாமல் தவித்த தனஞ்செழியன் குறிப்பிட்ட ஓட்டலுக்கு பைக்கில் வந்தார். அப்போது பிற்பகல் 3 மணி இருக்கும். பிரகாஷ், சுகன்யா, குணசுந்தரி ஆகியோர் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தனர். பிரகாசும், சுகன்யாவும் காரில் ஏறினார்கள். அப்போது கையில் கத்தியுடன் வந்த தனஞ்செழியன் திடீரென்று காரில் உட்கார்ந்திருந்த பிரகாசை தாக்கினார்.

‘சீட் பெல்ட்' அணிந்திருந்ததால் பிரகாசால் தப்பியோட முடியவில்லை. இந்த நிலையில் பிரகாசை சரமாரியாக கத்தியால் குத்திய தனஞ்செழியன் மனைவி சுகன்யாவையும் மிரட்டினார். சுகன்யாவையும் தீர்த்துக்கட்ட தனஞ்செழியன் முயற்சித்தார். ஆனால் கடைசி நேரத்தில் மனம்மாறி தனது பைக்கில் ஏற சொல்லி அழைத்து சென்றுவிட்டார்.

குணசுந்தரியும் மொபட்டில் தப்பி சென்றுவிட்டார். கத்திக்குத்து காயத்துடன் உயிருக்கு போராடிய பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவம் அசோக்நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தப்பிச்சென்ற தனஞ்செழியனை கைது செய்ய போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன் மேற்பார்வையில் அசோக்நகர் உதவி கமிஷனர் ஆல்ட்ரீன் தலைமையிலான தனிப்படை போலீசார் தனஞ்செழியனை தேடிவந்தனர். அவர் நேற்று முன்தினம் இரவோடு, இரவாக கைது செய்யப்பட்டார்.

தனஞ்செழியனின் மனைவி சுகன்யாவையும், அவரது தோழி குணசுந்தரியையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் இருவரும் பிரகாஷ் கொலைக்கு உடந்தையாக செயல்பட்டதாக போலீசார் கருதினார்கள். பிரகாசை தனஞ்செழியன் கத்தியால் குத்தியபோது அவரை காப்பாற்ற இருவரும் முயற்சிக்கவில்லை. அதற்கு மாறாக சுகன்யா தனது கணவரோடு பைக்கில் ஏறி சென்றுவிட்டார்.

குணசுந்தரி தனியாக தனது மொபட்டில் தப்பி சென்றுவிட்டார். பிரகாசை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தால் அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு இருந்தது. அதை செய்யாமல் போலீசுக்கும் இந்த சம்பவம் பற்றி தகவல் கொடுக்காமல் தப்பிச்சென்றதால் சுகன்யாவையும், குணசுந்தரியையும் இந்த வழக்கில் போலீசார் குற்றவாளிகளாக சேர்த்தனர்.

அதையொட்டி அவர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். கைதான தனஞ்செழியன், சுகன்யா, குணசுந்தரி ஆகிய 3 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Wednesday, October 29, 2025

110 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றுடன் ஆந்திராவில் கரையை கடந்தது ‘மோந்தா' புயல்

 


பதிவு: புதன்கிழமை, அக்டோபர் 29, 2025, ஐப்பசி 12, விசுவாவசு வருடம் 07-00: AM

அமராவதி,

புயல் காரணமாக மசூலிப்பட்டினம், கிருஷ்ணா ஆகிய கடலோர பகுதிகளில் மின் கம்பங்கள், ராட்சத மரங்கள் ஆகியவை வேரோடு சாய்ந்தன.

வங்கக்கடலில் உருவான ‘மோந்தா' புயல், ஆந்திராவை நோக்கி நேற்று முன்தினத்தில் இருந்து பயணித்து, நேற்று இரவு கரையை கடக்கத் தொடங்கியது. 

மணிக்கு 17 கி.மீ வேகத்தில் காக்கிநாடா, மசூலிப்பட்டினம் அருகே ‘மோந்தா’ புயல் கரையை கடக்க தொடங்கியது. புயல் கரையை கடக்க தொடங்கியதில் இருந்து ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் 110 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசியது. மேலும் அங்கு விடிய, விடிய இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திராவின் காக்கிநாடா, கிருஷ்ணா, எலுரு, கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி, அம்பேத்கர் கோனசீமா, அல்லூரி சீதாராம ராஜூ உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் தங்கியிருந்த 2 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டனர். மேலும் அந்த 7 மாவட்டங்களுக்கும் இன்று (புதன்கிழமை) காலை 6 மணிவரை அனைத்து வாகன போக்குவரத்துக்கும் தடைவிதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் பேரிடர் மீட்புத்துறையினர், போலீசார் உள்பட சுமார் 10 ஆயிரம் பேர் களம் இறக்கப்பட்டனர். அவர்கள் கடலோர பகுதியில் புயல் கரையை கடக்கும் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அமராவதியில் உள்ள கண்காணிப்பு மையத்தில் இருந்தவாறு புயல் பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு முடுக்கிவிட்டார்.

இந்தநிலையில் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் காக்கிநாடாவின் தெற்கே மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே ‘மோந்தா’ புயல் கரையை கடந்தது. புயல் காரணமாக மசூலிப்பட்டினம், கிருஷ்ணா ஆகிய கடலோர பகுதிகளில் மின் கம்பங்கள், ராட்சத மரங்கள் ஆகியவை வேரோடு சாய்ந்தன. மேலும் இடி, மின்னலுடன் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.

புயல் காரணமாக ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வர இருந்த 6 விமானங்களும், சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்ல இருந்த 3 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. ஆந்திராவில் கனமழை பெய்து வருவதால் 75 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

புயல் காரணமாக ஆந்திராவில் 3,778 கிராமங்கள் பாதிக்கப்பட்டதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். மேலும் மோந்தா புயல் காரணமாக 1.76 லட்சம் ஹெக்டர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு அழிந்ததாக அவர் தெரிவித்தார். இந்த புயல் காரணமாக கபுலுபடாவில் 12.5 செ.மீ., விசாகப்பட்டினத்தில் 12 செ.மி மற்றும் ஆனந்தபுரத்தில் 11.7 செ.மீ அளவில் மழை பதிவானது.

‘மோந்தா’ புயல் காரணமாக ஒடிசாவிலும் கனமழை வெளுத்து வாங்கியது. அங்குள்ள மல்கன்கிரி, கோரபூட், ராயகடா, கஜபதி, கஞ்சம், நபரனங்கபூர் உள்பட 8 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பேரிடர் மீட்புத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் என 5 ஆயிரம் பேர் களம் இறக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

Tuesday, October 28, 2025

திமுக ஆட்சியாளர்களை மக்கள் வீட்டுக்கு அனுப்பப்போவது உறுதி - தவெக தலைவர் விஜய்

 

பதிவு: செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 28, 2025, ஐப்பசி 11, விசுவாவசு வருடம் 03-15: PM

சென்னை,

விவசாயிகளின் வேதனைகளுக்கு திமுக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது? என விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

தொடர் மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப் போல மக்கள் விரோத தி.மு.க.ஆட்சிக்கு எதிரானத் தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி!

தொடர் மழையால், விவசாயிகளின் கடின உழைப்பால் விளைவிக்கப்பட்ட நெல்மணிகள் முதல்முறை வீணான போதே துரிதமாகச் செயல்பட்டு மீதமுள்ள நெல்மணிகளைப் தமிழக அரசு பாதுகாத்திருக்க வேண்டாமா?

டெல்டா விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெல்மணிகளை உரிய நேரத்தில், உரிய விலைகொடுத்துக் கொள்முதல் செய்யாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை வீணாக்கியதன் காரணம் என்ன?

பருவமழை என்பது ஒவ்வோர் ஆண்டும் பெய்யக் கூடியது. இந்தப் பருவமழையை நம்பியே விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அப்படியிருக்க, அந்தப் பருவமழையினால் விவசாயப் பயிர்கள் மற்றும் விளைநிலங்கள் சேதமடையாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

அதிக மழைப் பொழிவு இருந்தாலும் விவசாய நிலத்தில் பயிர்கள் மூழ்காதபடி போதுமான தண்ணீரைத் தவிர்த்து, அதிகப்படியான தண்ணீர் விவசாய நிலங்களில் இருந்து தானாகவே வெளியேறி, சேமித்து வைக்கப்பட வேண்டிய நீர்நிலைகளைச் சென்றடைய, போதுமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா?

விளைவிக்கப்பட்ட நெல் உள்ளிட்ட தானியங்கள் மழையில் நனைந்து வீணாகாமல், நல்லமுறையில் பாதுகாப்பாக சேமித்து வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

ஒவ்வோர் ஆண்டும் நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகின்றனவே. அதைப் பார்த்தாவது, அடுத்த ஆண்டாவது நெல்மணிகள் மழையில் நனையாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எண்ணம் வரவில்லையா? இல்லையெனில் நெல் உள்ளிட்ட தானியங்கள் வீணாகட்டும். விவசாயிகளின் வாழ்வு பாதிக்கப்படட்டும். அதனால் நமக்கென்ன? என்று தெரிந்தே ஒவ்வோர் ஆண்டும் கடந்து போகிறதா இந்த அரசு?

கடந்த சில நாட்களாக பெய்த மழையால், நெல்மணிகள் நனைந்து வீணாகியதற்கும். அதை விளைவித்த விவசாயிகளின் வேதனைகளுக்கும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?

விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெல்மணிகள் இந்த வெற்று விளம்பர திமுக அரசின் அலட்சியத்தால் மழையில் நனைந்து வீணாகி, மூட்டையிலேயே முளைத்துள்ளன. அதைப் போல், தமிழ் நாட்டு மக்கள் மனங்களில் முளைத்து வளர்ந்து செழித்து நிற்கும் அரசு மீதான எதிர்ப்பு இன்னும் வலுவாகி. வெகுஜன மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி!

வடகிழக்கு பருவமழைக் காலம் இன்னும் நீடிக்க உள்ளது. எனவே இனியேனும் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தி, இனி வரும் மழையினால் நெல் உள்ளிட்ட பயிர்கள் வீணாகாமல் தடுக்க வேண்டும். அத்தோடு பருவமழையின் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விளம்பர செயல்பாடுகளாக இன்றி போர்க்கால அடிப்படையில் உண்மையாகவே மேற்கொள்ள வேண்டும். 

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Monday, October 27, 2025

Kandha Sashti 2025 | Arulmigu Subramaniya Swamy Temple | Thiruparankundram

Vaiko's criticisms of Vijay and Tamilaga Vettri Kazhagam (TVK) | Vaiko P...

வங்கக்கடலில் உருவானது ‘மோந்தா' புயல்: “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழைக்கான 'ஆரஞ்ச் அலெர்ட்”

 


பதிவு: திங்கள்கிழமை, அக்டோபர் 27, 2025, ஐப்பசி 10, விசுவாவசு வருடம் 04-15: AM

சென்னை,

'வங்கக்கடலில் அந்தமான் தீவுகள் அருகே நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று ( அக்டோபர் 27) 'மோந்தா' புயலாக உருமாறி வலுவடைந்தது. 

இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழைக்கான 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது' என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திராவில் உஷார் நிலை 

வங்கக்கடலில்  'மோந்தா' புயல் காரணமாக, ஆந்திராவின் காக்கிநாடா, கோனாசீமா, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, பாபட்லா, பிரகாசம், ஸ்ரீ பொட்டி ஸ்ரீராமுலு, நெல்லுார் மாவட்டங்களில் சில பகுதிகளில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. சித்துார், திருப்பதி உட்பட 16 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யலாம் என்பதால், 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. கர்னுால், அனந்த புரம், ஸ்ரீசத்யசாய் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, மாநிலம் முழுதும் அனைத்து அரசு துறைகளும் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. மீட்புப் பணிக்கு துணை ராணுவமும், தேசிய பேரிடர் மீட்புப் படையும் தயார் நிலையில் உள்ளன.



வங்கக்கடலில் கடந்த 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற நிலைகளை கடந்து, தற்போது புயலாக வலுவடைந்துள்ளது. இந்த புயலுக்கு ‘மோந்தா' என பெயரிடப்பட்டு இருக்கிறது. மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் வட கிழக்கு திசையில் மோந்தா புயல் நகர்ந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னைக்கு 640 கி.மீ. தொலைவில் மோந்தா புயல் மையம் நிலை கொண்டுள்ளது. இது நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் முதல் புயல் ஆகும்.

பசிபிக் உயர் அழுத்த பிடியால் மேற்கு - வடமேற்கு திசையில் இன்று இரவு புயல் நகரத்தொடங்கும். பின்னர், இமயமலையில் இருக்கக்கூடிய மேற்கத்திய தாழ்வு நிலை புயலை தன்பக்கமாக இழுக்கும்.

இந்த இருவேறு வானிலை நிகழ்வுகளால், வளிமண்டலத்தில் காற்று முறிவு ஏற்பட்டு வடக்கு - வடமேற்கு திசையில் ஆந்திராவின் காக்கிநாடாவை நோக்கி தீவிர புயலாக நகரும். ஆந்திர கடலோரப் பகுதிகளில் மசூலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடாவுக்கு அருகில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை அல்லது இரவு நேரத்தில் கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



கரையை நெருங்கும்போது புயல் வலுவிழக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது. வளிமண்டலத்தில் காற்று முறிவு ஏற்படுவதால் ஆந்திராவில் காற்று பாதிப்பு இருக்காது என கணிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில், ஆந்திராவின் ஓங்கோல் முதல் நெல்லூர் வரையிலான தெற்கு ஆந்திர பகுதியில் மிக கனமழையும், குறுகிய நேரத்தில் அதி கனமழையும் பதிவாகக்கூடும்.

ஆந்திராவுக்கு புயல் செல்வதால், தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு இருக்காதோ? என்ற பேச்சு இருக்கிறது. ஆனால் வட மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழை வரை பதிவாக வாய்ப்பு உள்ளது.

சென்னை, திருவள்ளூரில் கனமழை

குறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யக்கூடும். புயல் சென்னைக்கு நேராக அதாவது கிழக்கு பகுதியில் அதன் மேகக்கூட்டங்கள் வந்து நின்று, பின்னர் மேல் நோக்கி ஆந்திராவை நோக்கி நகரப்போகிறது. இதனால் இந்த புயல் காரணமாக மழை இன்று(திங்கட்கிழமை) காலை 11 மணியில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, விட்டு விட்டு கனமழையும், சென்னை, திருவள்ளூரில் அனேக இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழை வரையிலும் பதிவாகக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

மழை இருக்கும் அதே நேரத்தில், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் தரைக்காற்று வடக்கு - வடமேற்கு நோக்கி 30 கி.மீ. முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை வரை சூறாவளி காற்று மணிக்கு 80 கி.மீ. முதல் 100 கி.மீ. வரையிலும், ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளி காற்று இன்று முதல் நாளை மறுதினம் (புதன்கிழமை) காலை வரை 80 கி.மீ. முதல் 110 கி.மீ. வரையிலும் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த புயல் காரணமாக வட மாவட்டங்களில் மழை கிடைக்க இருக்கிறது. இதுதவிர பிற பகுதிகளில் வெப்பசலனம், பருவமழை காரணமாக இரவு அல்லது அதிகாலையில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் வங்கக்கடலில் உருவாகிய ‘நிவர்’ புயல், மாமல்லபுரத்துக்கும், சென்னைக்கும் இடையே கரையை கடந்தது. இந்த புயல் தீவிர புயலாக கரையை கடந்தது. அந்த நேரத்தில் கடலூர் - விழுப்புரம் இடையே 6 மணி நேரத்தில் 33 செ.மீ. மழையை கொட்டியது.

அதேபோல்தான், வங்கக்கடலில் உருவாகி ஆந்திராவை நோக்கி செல்லும் ‘மோந்தா’ புயலும் ஓங்கோல்-நெல்லூர் இடையே குறுகிய நேரத்தில் அதி கனமழை பெய்ய இருக்கிறது. ‘மோந்தா’ புயலில் நடக்கும் காற்று முறிவு நிகழ்வும் நிவர் புயலின்போது நடந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த குறுகிய நேரத்தில் அதி கனமழை கடைசி நேரத்தில் இடம் மாறவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி மாறும்பட்சத்தில் தமிழகத்தில் வடமாவட்டங்களில் ஏதாவது ஒரு இடத்தில் மழை கொட்டவும் ஒரு வாய்ப்புள்ளது. இது புயல் வடமாவட்டங்களை நெருங்கிவரும் நேரத்தில்தான் கணிக்க முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Saturday, October 25, 2025

வங்கக்கடலில் அக்டோபர் 27ல் உருவாகிறது 'மோந்தா' புயல்: “சென்னையில் மழை தொடரும்.. தமிழகம் முழுவதும் இன்று கனமழைக்கு வாய்ப்பு”

 


பதிவு: சனிக்கிழமை, அக்டோபர் 25, 2025, ஐப்பசி 08, விசுவாவசு வருடம் 06-30: AM

சென்னை,

'மோந்தா' புயல் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, 27ம் தேதி புயலாக உருவாகும் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அப்படி புயல் உருவாகும்பட்சத்தில், அதற்கு, 'மோந்தா' என பெயர் சூட்டப்படும். இந்த பெயரை, தாய்லாந்து நாடு பரிந்துரைத்துள்ளது.

வங்கக்கடலில் வருகிற 27-ந்தேதி (திங்கட்கிழமை) புயல் உருவாகிறது. இதற்கு ‘மோன்தா' என பெயரிடப்பட உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

வடகிழக்கு பருவமழையின் முதல் நிகழ்வு வங்கக்கடலில் உருவாகி, வடமாவட்டங்களில் சில இடங்கள், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. ஆனால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை ஏமாற்றியது. இந்த நிகழ்வு புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்ட சூழலில், தாழ்வு மண்டலமாக கூட வலுப்பெறவில்லை.

இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியது. இது அதே பகுதிகளில் நிலவுகிறது. அது மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று (சனிக்கிழமை) தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும் எனவும், அதனையடுத்து அது 27-ந்தேதி (திங்கட்கிழமை) புயலாகவும் வலுவடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்திற்கு மழையை கொடுக்குமா?

வங்கக்கடலில் உருவாகும் இந்த புயல், தமிழகத்துக்கு அருகில் வந்து நகருமா? அல்லது ஆந்திராவுக்கு சென்றுவிடுமா? என்பது இப்போது வரை உறுதியாகவில்லை. இந்த புயல் வடதமிழகத்தை நோக்கி வராமல் அப்படியே திறந்த கடல் பகுதி வழியாக ஆந்திரா நோக்கி சென்றால், பலத்த மழையை சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு தவறவிட்டுவிடும். மாறாக மிதமான மழையே இருக்கும்.

அதுவே, புயல் வடதமிழகத்தையொட்டி நகர்ந்து, பின்னர் ஆந்திரா சென்றால், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என வானிலை கணிப்புகள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு இந்த புயல் மழையை கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்புக்கு ஓரிரு நாட்களில் விடை தெரிந்துவிடும். இந்த புயலால் வடமாவட்டங்களை தவிர, பிற மாவட்டங்களுக்கு மழைக்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது.

‘மோன்தா’ புயல்

பொதுவாக புயல் உருவாகும்போது, அதனை அடையாளப்படுத்துவதற்காக பெயர் சூட்டப்படுகிறது. அந்தவகையில் வங்கக்கடலில் உருவாக இருக்கும் இந்த புயலுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள பெயர் வரிசைப்படி, ‘மோன்தா' என பெயரிடப்பட உள்ளது. வானிலை ஆய்வு மையம் புயல் உருவான பிறகே அந்த பெயரை அறிவிக்கும். ‘மோன்தா' என்ற பெயரை தாய்லாந்து நாடு பரிந்துரைத்தது ஆகும். இந்த பெயருக்கு ‘அழகான மலர்' அல்லது ‘மணம் வீசும் மலர்' என்று அர்த்தம் ஆகும்.

ஒருவேளை புயல் தமிழகத்துக்கு சாதகமாக இருந்தால், நாளை (26-10-2025) விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும், நாளை மறுதினம் (27-10-2025) திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், வேலூரில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் இந்த புயல் காரணமாக, சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 90 கி.மீ. வரை வருகிற 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Monday, October 6, 2025

UCPI (UNITED COMMUNIST PARTY OF INDIA) C.Baskaran Press Meet at Madurai

TTV Dhinakaran Press Meet | Vijay should have owned moral responsibility...

Wednesday, October 1, 2025

Sellur Raju Says, "NTK Seeman talks like he's mentally ill" | Tamilmani ...

Karur stampede: TVK Bussy Anand moves Madras HC for anticipatory bail - ...

Featured post

கரூர் நெரிசல் வழக்கில் தவறு நடக்கிறது - பதில் கேட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு - விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம்

பதிவு:  சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025, கார்த்திகை 27,  விசுவாவசு வருடம் 01-40: AM புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்...