Sunday, November 30, 2025

முதுநிலை ஆசிரியராக தேர்வு எழுதிய 85,000 பேர் - தமிழில் 'பெயில்!'

 

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  நவம்பர் 30, 2025, கார்த்திகை 14,  விசுவாவசு வருடம் 08-30: AM

சென்னை,

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வேலையில் சேர தேர்வு எழுதியவர்களில், 85,000 பேர் தமிழ் பாடத்தில் 'பெயில்' ஆகியுள்ளனர். அவர்களின் தாய்மொழி தமிழ் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுனர் ஆகிய பணியிடங்களுக்கு, 1,996 பேரை தேர்வு செய்ய கடந்த அக். 12ல் தேர்வு நடந்தது. முதுநிலை பட்டதாரிகள் 2.36 லட்சம் பேர் எழுதினர். முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. கட்டாய தமிழ் பாட தேர்வில் 85,000த்துக்கு அதிகமானோர் பெயில் ஆகியுள்ளனர்.

தமிழக அரசு வேலையில் சேர்பவர்களுக்கு தமிழ் எழுத, படிக்க தெரிய வேண்டும் என்பதற்காக, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் 2022ல் தமிழ் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ் தேர்வில் மொத்தம் 50 மதிப்பெண் உண்டு. அதில் 20 மதிப்பெண் எடுத்தால் பாஸ் ஆகலாம். பாஸ் ஆனால் தான், பாடம் சார்ந்த விடைத்தாளை மதிப்பீடு செய்வார்கள்.

இத்தேர்வில், 85,000 பேருக்கு மேல், அதாவது 36 சதவீதம் பேர் 20 மார்க் கூட பெறாமல் தோல்வி அடைந்துள்ளனர். பிரதான பாடம் சார்ந்த தேர்வை இவர்கள் சிறப்பாக எழுதியிருந்தாலும், தமிழில் தோற்றதால் அந்த விடைத்தாள்கள் திருத்தப்படாது. அதனால், இவர்கள் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

இந்த தேர்வை எழுதியவர்கள் இளநிலை, முதுநிலை, கல்வியியல் என குறைந்தது மூன்று பட்டங்களை பெற்றவர்கள். அதற்கு மேல் எம்.பில்., பிஎச்.டி. பட்டம் பெற்றவர்களும் தேர்வு எழுதியுள்ளனர்.

இதில் கட்டாய தமிழ் பாட தேர்வின் கேள்விகள், 10ம் வகுப்பு மாணவர்கள் எழுதும் அளவில் தான் இருக்கும். அதிலும் 40 சதவீத மதிப்பெண் எடுக்க முடியாமல் பெயில் ஆகியிருப்பது, கல்வியாளர்கள், தமிழ் ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் தமிழை ஒரு பாடமாகக் கூட எடுத்து படிக்காமல், பள்ளி படிப்பை முடிக்கும் நிலை உள்ளது. தமிழை இரண்டாம் பாடமாக எடுத்தால்கூட, பல தனியார் பள்ளிகளில், அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

இதனால் தான், இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. பிரதான பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் கூட, ஆசிரியர் பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் எதிர்காலமே வீணாகியுள்ளது.

முனைவர் என்கிற டாக்டர் பட்டம் பெற்றவர்களும், ஐந்து பட்டங்களை பெற்றவர்களும் கூட, தாய்மொழியான தமிழில் 20 மதிப்பெண் எடுக்க முடியாமல் தோல்வி அடைந்துள்ளது பெரும் அவமானம். நமது கல்வி முறை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை இதிலிருந்து உணரலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆட்சியாளர்களுக்கு தலைகுனிவு -  அன்புமணி, பா.ம.க. தலைவர்,

தாய்மொழியை ஒரு பாடமாக படிக்காமல், ஒருவர் முனைவர் பட்டம் வரை பெற முடியும் என்றால், அது தமிழகத்தில் மட்டும் தான் சாத்தியம். இது தான் தமிழக ஆட்சியாளர்கள் தமிழ் வளர்க்கும் லட்சணம். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில், 85,000 பேர் பெயில் ஆனதற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். இதற்காக, ஆட்சியாளர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும். 

சென்னைக்கு தெற்கே 230 கி.மீ. தொலைவில் ‘டிட்வா’ புயல் - திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு ‘ரெட் அலர்ட்’

 

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  நவம்பர் 30, 2025, கார்த்திகை 14,  விசுவாவசு வருடம் 07-50: AM

சென்னை,

வங்​கக் கடலில் நில​வும் `டிட்​வா' புயல் இன்று காலை சென்​னையை நெருங்கு​கிறது. இதையொட்​டி, திரு​வள்​ளூர், ராணிப்​பேட்டை மாவட்​டங்​களுக்கு `ரெட் அலர்ட்' விடுக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், தமிழகத்​தில் 1.24 கோடி பேருக்கு எச்​சரிக்கை குறுஞ்​செய்தி அனுப்​பப்​பட்​டுள்​ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்​குநர் செந்​தாமரைக்​கண்​ணன் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது:

தென்​மேற்கு வங்​கக்​கடல், அதையொட்​டிய வடக்கு இலங்கை பகு​தி​களில் ‘டிட்​வா' புயல் நிலை கொண்​டுள்​ளது. இது மேலும் வடமேற்​காக நகர்ந்து இன்று (நவ.30) காலை வடதமிழகம் மற்​றும் அதையொட்​டிய தெற்கு ஆந்​திர கடலோரப் பகு​தி​களுக்கு அருகே நில​வக்​கூடும். இன்று மாலை புயல் சென்​னை​யை நெருங்​கி வரும்.

இதன் காரண​மாக, இன்று வட தமிழகத்​தில் பெரும்​பாலான இடங்​களி​லும், தென் தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி​யிலும் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். டெல்​டா, தென் தமிழக கடலோர மாவட்​டங்​கள், காரைக்​கால் பகு​தி​களில் மணிக்கு அதி​கபட்​சம் 75 கி.மீ. வேகத்​தில் பலத்த காற்று வீசக்​கூடும். வட தமிழக கடலோர மாவட்​டங்​கள், புதுச்​சேரி​யில் 80 கி.மீ. வேகத்​தில் தரைக்​காற்று வீசக்​கூடும்.

இன்று திரு​வள்​ளூர், ராணிப்​பேட்டை மாவட்​டங்​களில் அதி​க​னமழை (‘ரெட் அலர்ட்’) பெய்​யக்​கூடும். சென்​னை, காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, விழுப்​புரம், திரு​வண்​ணா​மலை, வேலூர், திருப்​பத்​தூர், கிருஷ்ணகிரி, தரு​மபுரி மாவட்​டங்​களில் கன முதல் மிக கனமழை​யும், சேலம், கள்​ளக்​குறிச்​சி, கடலூர் மாவட்​டங்​கள் மற்​றும் புதுச்​சேரி​யில் கனமழை​யும் பெய்ய வாய்ப்பு உள்​ளது. நாளை திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் கனமழை​யும், மற்ற பகு​தி​களில் மித​மான மழை​யும் பெய்ய வாய்ப்பு உள்​ளது.

தமிழக கடலோரப் பகு​தி​கள், குமரிக்​கடல், மன்​னார் வளை​குடா பகு​தி​களில் இன்று அதி​கபட்​ச​மாக 90 கி.மீ. வேகத்​தில் சூறாவளிக் காற்று வீசக்​கூடும்.

தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி வரையி​லான 24 மணி நேரத்​தில் பதி​வான மழை அளவு​களின்​படி அதி​கபட்​ச​மாக நாகை மாவட்​டம் கோடியக்​கரை​யில் 25 செ.மீ., வேதா​ரண்​யத்​தில் 19 செ.மீ., வேளாங்​கண்​ணி​யில் 13 செ.மீ., திருப்​பூண்​டி, நாகை​யில் 12 செ.மீ., தலை​ஞா​யிறில் 11 செ.மீ., ராம​நாத​புரம் மாவட்​டம் பாம்​பன், காரைக்​காலில் 10 செ.மீ., தங்​கச்​சிமடம், ராமேசுவரம், தொண்​டி, மண்​டபம், தூத்​துக்​குடி மாவட்​டம் காயல்​பட்​டினம், சிவகங்கை மாவட்​டம் இளை​யான்​குடி, நாகை மாவட்​டம் திருக்​கு​வளை​யில் 7 செ.மீ. மழை பதி​வாகி​உள்​ளது. 

இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

1.24 கோடி பேருக்கு குறுஞ்​செய்தி

புயல், மழை பாதிப்​பு​கள், முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் தொடர்​பாக சென்னை எழில​கத்​தில் உள்ள மாநில அவசர​கால கட்​டுப்​பாட்டு மையத்​தில் நேற்று வரு​வாய்த் துறை அமைச்​சர் சாத்​தூர் ராமச்​சந்​திரன் ஆய்வு மேற்​கொண்​டார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

தாழ்​வான பகு​தி​களில் இருப்​பவர்​களைத் தங்​கவைக்க திருமண மண்​டபங்​கள், அவர்​களுக்​குத் தேவை​யான உணவு, குழந்​தைகளுக்கு பால் போன்​றவற்றை தயா​ராக வைக்​கு​மாறு அனைத்து மாவட்ட நிர்​வாகங்​களுக்​கும் உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. சென்​னை​யில் மாநில பேரிடர் மீட்​புப்​படை சார்​பில் 16 அணி​களும், தேசிய பேரிடர் மீட்​புப்​படை சார்​பில் 12 அணி​களும் தயார் நிலை​யில் உள்​ளன.

இது​வரை புயல், மழை​யால் பெரிய பாதிப்பு ஏற்​பட​வில்​லை. 16 கால்​நடைகள் இறந்​துள்​ளன. 24 குடிசைகள் சேதமடைந்​துள்​ளன. புயல் வந்​தால், அதை எதிர்​கொள்​வது தொடர்​பாக 1.24 கோடி பேருக்கு குறுஞ்​செய்தி மூலம் எச்சரிக்கை செய்தி அனுப்​பப்​பட்​டுள்​ளது. காற்​றின் வேகம் அதி​க​மாக இருக்​கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. எனவே, பொது​மக்​கள் யாரும் கடற்​கரை ஓரமாகச் செல்​வதை தவிர்க்க வேண்​டும். புயல் நேரத்தில் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்​வாறு அவர் கூறி​னார்.

4,000 கனஅடி வெளி​யேற்​றம்

சென்​னைக்கு குடிநீர் விநி​யோகிக்​கும் பூண்டி சத்​தி​யமூர்த்தி சாகர் நீர்த்​தேக்​கத்​தில் இருந்து நேற்று மாலை முதல் வி​நாடிக்கு 4,000 கனஅடி வீதம் உபரிநீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. அதே​போல, செம்​பரம்​பாக்​கம் ஏரியி​லிருந்​து 2,000 கனஅடி​யும்​, புழல்​ ஏரியி​லிருந்​து 1,500 கனஅடி​யும்​ உபரி நீர்​ வெளியேற்​றப்​பட்​டு வருகிறது.

Saturday, November 29, 2025

‘டிட்வா’ புயல் - பீதியில் சென்னை

 

பதிவு: சனிக்கிழமை,  நவம்பர் 29, 2025, கார்த்திகை 13,  விசுவாவசு வருடம் 02-50: PM

சென்னை,

தமிழகம் – புதுச்சேரி – ஆந்திரா கடல் பகுதியில் நாளை அதிகாலை நெருங்குகிறது - ‘டிட்வா’ புயல்: பீதியில் சென்னை - 9 துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு - 54 விமானங்கள் ரத்து - 10 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் வரவழைப்பு

கனமழையால் வேதாரண்யத்தில் உள்ள உப்பளங்கள் நீரில் மூழ்கியுள்ளது.

தமிழ்நாடு– புதுச்சேரி – ஆந்திர கடல்பகுதியை நாளை அதிகாலை டிட்வா புயல் நெருங்கும் என்று கூறப்படுகிறது.

டிட்வா புயலால் நாகை மாவட்டத்தில் அதிக கனமழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், கோடியக்கரையில் 25 செ.மீ மழைப்பதிவாகி உள்ளது.

‘டிட்வா' புயல் இலங்கை மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அதாவது, காரைக்காலில் இருந்து தெற்கு–தென் கிழக்கே 190 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தெற்கு–தென்கிழக்கே 300 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கே 380 கி.மீ. தொலைவிலும் தற்போது மையம் கொண்டுள்ளது. ‘டிட்வா' புயல் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது தொடர்ந்து வடக்கு – வடமேற்கில் நகர்ந்து நாளை காலை வட தமிழ்நாட்டை நெருங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

‘டிட்வா' புயல் இலங்கை நிலப்பரப்பில் இருந்து முழுமையாக விலகி, டெல்டா மற்றும் வட இலங்கை கடல் பகுதிகளை இன்று காலை அடைந்துள்ளது. தற்போது வரை 65 கி.மீ. வேகத்தில் காற்று சுழற்சி இருக்கிறது. இலங்கை பரப்பில் இருந்து விலகி, டெல்டாவை அடையும்போது புயல் காற்று சுழற்சியின் மைய வேகம் 70 முதல் 80 கி.மீ. வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘டிட்வா' புயல் டெல்டா கடற்கரையை நெருங்கும்போது மெதுவாக நகரவோ அல்லது நிற்கவோ வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும், அந்த நேரத்தில் புயலின் மேற்கு பகுதி அதாவது முன் பகுதி காவிரி டெல்டா பகுதிகளில் கரையைத் தொட இருப்பதாகவும், அது முழுமையாக கரையை கடக்காது எனவும் ஹேமச்சந்தர் கூறினார். சில மணி நேரங்கள் டெல்டா நிலப்பரப்பில் ஊடுருவும் ‘டிட்வா' புயல், பின்னர் வலுவான நிலையில் தொடர்ந்து வடக்கு திசையை நோக்கி நகர்ந்து, இன்று பிற்பகலுக்கு பிறகு சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களை வந்தடையும். அவ்வாறு வரக்கூடிய ‘டிட்வா' புயல் சென்னை கடலோரப் பகுதிகளுக்கு அருகில் சற்று நிற்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இன்று முதல் மழை

தற்போதுள்ள நிலவரப்படி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) வடதமிழகம்–புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே புயல் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் இன்று பிற்பகலில் இருந்து நாளை மறுதினம் (திங்கட்கிழமை) வரையிலும் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் எனவும், அதுவும் டெல்டாவில் இன்று குறுகியநேரத்தில் தீவிர கனமழை கொட்டித்தீர்க்கவும் வாய்ப்பு உள்ளது.

இன்று மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணா மலை, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிககனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

90 கி.மீ. வேகத்தில் காற்று

நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டையில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, காஞ்சீபுரம், வேலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த புயலினால் இன்று டெல்டா மற்றும் அதனையொட்டிய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் தரைக்காற்று மணிக்கு 70 கி.மீ. முதல் 90 கி.மீ. வரையிலும், ஏனைய கடலோர மாவட்டங்களில் 55 கி.மீ. முதல் 75 கி.மீ. வரையிலும், நாளை தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. முதல் 75 கி.மீ. வேகத்திலும், ஏனைய வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் 60 கி.மீ. முதல் 80 கி.மீ. வரையிலான வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் டிட்வா புயல் வடக்கு திசை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் இன்று அதிகாலை முதலே சென்னை மற்றும் புறநகரில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்தாலும் சென்னை முழுவதும் பரவலாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

கோடியக்கரை–25 செ.மீ.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம் வருமாறு:–

கோடியக்கரை–25 செ.மீ., வேதாரண்யம் – 18 செ.மீ., வேளாங்கண்ணி– 13 செ.மீ., திருப்பூண்டி, நாகப்பட்டினம் – 12 செ.மீ., தலைஞாயிறு – 11 செ.மீ., பாம்பன்– 10 செ.மீ., ராமேஸ்வரம், தங்கச்சிமடம், மண்டபம், காயல்பட்டினம், இளையான்குடி, திருக்குவளை, தொண்டி– தலா 7 செ.மீ., தீர்த்தாண்டத்தானம், சூரங்குடி, திருச்செந்தூர் – 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

54 விமானங்கள் ரத்து


டிட்வா புயலால் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் மற்றும் வருகை தரும் 54 விமானங்கள் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் 12 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.அதேபோன்று சென்னைை, பெங்களூரு, மும்பையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் 11 சிறிய விமானங்களும், ஹைதராபாத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் 1 விமானங்கள் மற்றும் சென்னைக்கு வரும் விமானங்கள் என 54 விமானங்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து தூத்துக்குடி, மதுரை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் உள்நாட்டு விமானங்கள் மட்டுமின்றி பல வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. , பயணிகள் தங்களுக்கான விமான நிறுவன அலுவலகங்களை தொடர்புகொண்டு விமானத்தின் புறப்பாடு குறித்த தகவல்களை உறுதி செய்த பின்னா் பயணத்தை மேற்கொள்ள விமானநிலைய நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

10 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் வரவழைப்பு


விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய தமிழக கடலோர மாவட்டங்களில் மத்திய அவசரக்கால படை 14 குழுக்களை நிறுத்தியுள்ளது. மேலும் புதுச்சேரிக்கு கூடுதலாக 10 குழு வரவழைக்கப்பட உள்ளனர். கூடுதலாக புனே, வதோதராவில் இருந்து 10 என்டிஆர்எப் குழுக்கள் தமிழகம் வர உள்ளன. 5 அணிகள் சென்னையிலும், 5 அணிகள் விழுப்புரத்திலும் நிறுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்திற்கு கூடுதல் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் வரவழைக்கப்பட்ட உள்ளதாக துணை கமாண்டர் தெரிவித்துள்ளார்.

4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

டிட்வா புயல் காரணமாக 9 துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 4-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.புயல் காரணமாக துறைமுகத்தில் கப்பல்களுக்கு ஆபத்து, கடலோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் 4-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி-–கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை, விழுப்புரம், அரியலூர், திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், ராமேசுவரம், ஆர்.எஸ்.மங்களம் மற்றும் திருவாடனை வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தும். மேலும், எந்த பள்ளிகளும் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது

கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்கள் மூடல்

கொடைக்கானலிலும் இன்று விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்கள் இன்று ஒருநாள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை காரணமாக மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி, பில்லர் ராக், குணா குகை, பைன் பாரஸ்ட், மோயர் சதுக்கம், பேரிஜம் ஏரி ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அரசியல் - இட்லி-சாம்பார், உப்புமாவுடன் முடிவுக்கு வந்த முதல்-மந்திரி பதவி மோதல்

 

பதிவு: சனிக்கிழமை,  நவம்பர் 29, 2025, கார்த்திகை 13,  விசுவாவசு வருடம் 02-30: PM

பெங்களூரு,

கட்சி மேலிடம் என்ன கூறுமோ, அதனை பின்பற்றுவது என நாங்கள் முடிவு செய்திருக்கிறோம் என சித்தராமையா கூறியுள்ளார்.

கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், டி.கே.சிவக்குமார் முதல்-மந்திரி பதவிக்கு வரவேண்டும் என்று அவருடைய தொண்டர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, முதல்-மந்திரி மாற்றம் விவகாரத்தில் கட்சி தொண்டர்கள் வேண்டுமானால் ஆர்வமாக இருக்கலாம். நான் அவசரப்படவில்லை. கட்சி மேலிடம் உரிய முடிவு எடுக்கும். நான் டெல்லி செல்லலாம். அங்கு நிறைய பணிகள் உள்ளன. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. அதனால் கர்நாடக எம்.பி.க்களை சந்தித்து ஆலோசிக்க வேண்டும்.

கடவுளின் கருணையால் மேகதாது திட்டத்தில் கர்நாடகத்துக்கு நீதி கிடைத்துள்ளது. எம்.பி.க்களுடன் நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது. அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டுவது குறித்து முதல்-மந்திரி சித்தராமையாவுடன் ஆலோசிக்க உள்ளேன் என அவர் கூறினார்.

இந்நிலையில், இன்று காலை முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் இருவரும் ஒன்றாக காலை உணவு சாப்பிட்டனர். இட்லி, சாம்பார், உப்புமாவுடன் காலை உணவு அமர்க்களப்பட்டது.

இதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சித்தராமையா, கட்சி மேலிடம் என்ன கூறுமோ, அதனை பின்பற்றுவது என நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். நாளை முதல் எந்த குழப்பமும் இருக்காது. இப்போதும் எந்த குழப்பமும் இல்லை. ஆனால், சில ஊடக நிருபர்களே குழப்பம் விளைவித்து வருகின்றனர் என்று கூறினார். இதனால், கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி வந்த முதல்-மந்திரி பதவிக்கான மோதல் முடிவுக்கு வந்துள்ளது என பார்க்கப்படுகிறது.

கர்நாடக காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் பதவியை தக்கவைப்பதில் முதல்வர் சித்தராமையா மும்முரமாக உள்ளார். இந்த ஆட்சி முடியும் வரை தானே முதல்வராக இருப்பேன் என்றும் சொல்லி வருகிறார். ஆனால், ஆட்சி அமைய தன் உழைப்பு மிக பெரியது, ஆட்சி அமையும்போது போடப்பட்ட வாய்மொழி ஒப்பந்தப்படி, தனக்கு முதல்வர் பதவியை விட்டுத் தர வேண்டும் என்று துணை முதல்வர் சிவகுமார் வலியுறுத்தி வருகிறார்.

சென்னையை நோக்கி நகரும் ‘டிட்வா புயல்’ - வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை.!

 

பதிவு: சனிக்கிழமை,  நவம்பர் 29, 2025, கார்த்திகை 13,  விசுவாவசு வருடம் 06-00: AM

சென்னை,

‘டிட்வா' புயல் காரணமகா இன்று டெல்டா, வடகடலோர மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்க்க உள்ளது. இலங்கை பகு​தி​யில் இருந்து வடமேற்​காக நகர்ந்து வரும் ‘டிட்​வா’ புயல் நாளை அதி​காலை வட தமிழகம், புதுச்​சேரி, தெற்கு ஆந்​திர கடலோரப் பகு​தி​களுக்கு அருகே நில​வக்​கூடும். இதன் காரண​மாக, டெல்டா மற்​றும் அதை ஒட்​டிய கடலோர மாவட்​டங்​கள், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் அதி​கபட்​ச​மாக மணிக்கு 90 கி.மீ. வேகத்​தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்​கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்​சரித்​துள்​ளது. மயி​லாடு​துறை, கடலூர், விழுப்​புரம், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் அதி​க​னமழைக்​கான ‘ரெட் அலர்ட்’ எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது.

‘டிட்வா' புயல்

‘டிட்வா' புயல் இலங்கை மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அதாவது, காரைக்காலில் இருந்து தெற்கு-தென் கிழக்கே 320 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 430 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கே 530 கி.மீ. தொலைவிலும் நேற்று மாலை வரை நிலைகொண்டு இருந்தது.

இது இலங்கை நிலப்பரப்பில் இருந்து முழுமையாக விலகி, டெல்டா மற்றும் வட இலங்கை கடல் பகுதிகளை இன்று (சனிக்கிழமை) காலை அடையும். பொதுவாக காற்றின் சுழற்சி 63 கி.மீ. முதல் 83 கி.மீ. வேகத்தில் இருந்தால் அது புயலாக கணக்கில் கொள்ளப்படும். தற்போது வரை 65 கி.மீ. வேகத்தில் காற்று சுழற்சி இருக்கிறது.

இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்​குநர் செந்​தாமரை கண்​ணன் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தென்​மேற்கு வங்​கக்​கடல், அதை ஒட்​டிய இலங்கை கடலோரப் பகு​தி​களில் நில​விய ‘டிட்​வா’ புயல், இலங்கை திரி​கோண மலை​யில் இருந்து தென்மேற்கே சுமார் 40 கி.மீ., சென்​னை​யில் இருந்து தெற்கே 530 கி.மீ. தொலை​வில் நிலை​கொண்​டுள்​ளது.


இது வடமேற்​காக நகர்ந்​து, இலங்கை கடலோரப் பகு​தி​கள் மற்​றும் அதை ஒட்​டிய தென்​மேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களைக் கடந்து நவ.30 (நாளை) அதி​காலை வங்​கக்​கடல் பகு​தி​களில் வட தமிழகம் - புதுச்​சேரி மற்​றும் அதை ஒட்​டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகு​தி​களுக்கு அருகே நில​வக்​கூடும்.

இதன் காரண​மாக வட தமிழகத்​தில் இன்​றும், நாளை​யும் (நவம்பர் 29,30) பெரும்​பாலான இடங்களி​லும், தென் தமிழகத்​தில் ஒருசில இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

இன்று டெல்டா மற்​றும் அதை ஒட்​டிய கடலோர மாவட்​டங்​கள், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் அதி​கபட்​ச​மாக மணிக்கு 90 கி.மீ. வேகத்​தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்​கூடும். இதர கடலோர மாவட்​டங்களில் அதி​கபட்​ச​மாக 75 கி.மீ. வேகத்​தில் பலத்த காற்று வீசக்​கூடும். எனவே, இப்​பகு​திகளுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம். மயி​லாடு​துறை, கடலூர், விழுப்​புரம், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் அதி​க​னமழை (‘ரெட் அலர்ட்’) பெய்​யக்​கூடும்.

புதுக்​கோட்​டை, தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், அரியலூர், பெரம்​பலூர், திருச்​சி, சேலம், கள்​ளக்​குறிச்​சி, திரு​வண்ணா​மலை, காஞ்​சிபுரம், சென்னை, திரு​வள்​ளூர், ராணிப்​பேட்டை மாவட்​டங்​கள், காரைக்​கால் பகு​தி​களில் ஓரிரு இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், வேலூர், திருப்​பத்​தூர், கிருஷ்ணகிரி, தரு​மபுரி, நாமக்​கல், கரூர் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை​யும் பெய்​யக்​கூடும்.

நாளை டெல்​டா, தென் தமிழக கடலோர மாவட்​டங்​கள், காரைக்​கால் பகு​தி​களில் அதி​கபட்​ச​மாக 75 கி.மீ. வேகத்​தி​லும், இதர வட தமிழக கடலோர மாவட்டங்​கள், புதுச்​சேரி​யில் 80 கி.மீ. வேகத்​தி​லும் பலத்த காற்று வீசக்கூடும். திரு​வள்​ளூர், ராணிப்​பேட்டை மாவட்​டங்​களில் ஒரு சில இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், ஓரிரு இடங்களில் அதி​க​னமழை​யும், சென்னை, காஞ்​சிபுரம், வேலூர், செங்​கல்பட்​டு, திருப்​பத்தூர், கிருஷ்ணகிரி, தரு​மபுரி மாவட்​டங்​களில் கன முதல் மிக கனமழை​யும், சேலம், கள்​ளக்​குறிச்​சி, திரு​வண்​ணா​மலை, விழுப்​புரம் மாவட்​டங்​கள், புதுச்​சேரி​யில் கனமழை​யும் பெய்ய வாய்ப்பு உள்​ளது.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​தி​களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்​ளது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

ரயில்​கள் நிறுத்​தம்

‘டிட்​வா’ புயலின் தாக்​கத்தால் ராமேசுவரம் தீவு பகு​தி​யில் பலத்த காற்​றுடன் தொடர்ந்து மழை பெய்து வரு​கிறது. இதனால், பாம்​பன் பாலத்​தில் நேற்று ரயில் போக்​கு​வரத்​துக்கு தடை விதிக்​கப்​பட்​டு, ராமேசுவரத்​துக்கு ரயில் சேவை நிறுத்​தப்​பட்​டது. பாசஞ்​சர் ரயில்​கள் ராம​நாத​புரம் வரை​யும், விரைவு ரயில்​கள் மண்​டபம் வரை​யும் இயக்​கப்​பட்​டன.

பள்ளிகளுக்கு விடுமுறை

இந்நிலையில், அதிகனமழை எச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று (நவ.29) விடுமுறை விடப்பட்டுள்ளது சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இலங்கை பரப்பில் இருந்து விலகி, டெல்டாவை அடையும்போது புயல் காற்று சுழற்சியின் மைய வேகம் 70 முதல் 80 கி.மீ. வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார். அதாவது புயல் தன்னுடைய சக்தியை புதுப்பித்துக்கொண்டு பயணிக்கும் என சொல்லப்படுகிறது.

வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை

மேலும் டெல்டா கடற்கரையை நெருங்கும்போது பசிபிக் உயர் அழுத்தம் காரணமாக புயல் மிகவும் மெதுவாக நகரவோ அல்லது நிற்கவோ வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும், அந்த நேரத்தில் புயலின் மேற்கு பகுதி அதாவது முன் பகுதி காவிரி டெல்டா பகுதிகளில் கரையைத் தொட இருப்பதாகவும், அது முழுமையாக கரையை கடக்காது எனவும் ஹேமச்சந்தர் கூறினார்.

சில மணி நேரங்கள் டெல்டா நிலப்பரப்பில் ஊடுருவும் ‘டிட்வா' புயல், பின்னர் வலுவான நிலையில் தொடர்ந்து வடக்கு திசையை நோக்கி நகர்ந்து, இன்று பிற்பகலுக்கு பிறகு சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களை வந்தடையும். அவ்வாறு வரக்கூடிய ‘டிட்வா' புயல் சென்னை கடலோரப் பகுதிகளுக்கு அருகில் சற்று நிற்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இன்று அதன் நகர்வை பொறுத்து, அது எங்கே கரையை கடக்கும்? என்பதை கணிக்க முடியும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதுள்ள நிலவரப்படி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) வடதமிழகம்-புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதி கனமழைக்கு வாய்ப்பு

இந்த புயல் காரணமாக டெல்டாவில் இன்றும், சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் இன்று பிற்பகலில் இருந்து நாளை மறுதினம் (திங்கட்கிழமை) வரையிலும் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் எனவும், அதுவும் டெல்டாவில் இன்று குறுகியநேரத்தில் தீவிர கனமழை கொட்டித்தீர்க்கவும் வாய்ப்பு உள்ளது எனவும் ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

அதன்படி, இன்று மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிககனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

வட தமிழகம்

நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டையில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, காஞ்சீபுரம், வேலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த புயலினால் இன்று டெல்டா மற்றும் அதனையொட்டிய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் தரைக்காற்று மணிக்கு 70 கி.மீ. முதல் 90 கி.மீ. வரையிலும், ஏனைய கடலோர மாவட்டங்களில் 55 கி.மீ. முதல் 75 கி.மீ. வரையிலும், நாளை தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. முதல் 75 கி.மீ. வேகத்திலும், ஏனைய வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் 60 கி.மீ. முதல் 80 கி.மீ. வரையிலான வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Friday, November 28, 2025

மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து தமிழகத்தை நெருங்கும் ‘டிட்வா புயல்’

 

பதிவு: வெள்ளிக்கிழமை,  நவம்பர் 28, 2025, கார்த்திகை 12,  விசுவாவசு வருடம் 04-40: PM

சென்னை,

மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசும் - இன்றும், நாளையும் 9 மாவட்டங்களுக்கு அதிக கனமழை எச்சரிக்கை - மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து தமிழகத்தை நெருங்கும் ‘டிட்வா புயல்’ - 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்தனர்.

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மாநில பேரிடர் மேலாண்மை குழுவினரை கலெக்டர் மோகனச்சந்திரன் நேரில் சந்தித்து கலந்துரையாடி, செயல்விளக்க முறையினை பார்வையிட்டார்.

‘டிட்வா புயல்’ மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து தமிழகத்தை நெருங்குகிறது. 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை 11.30 மணியளவில் புயலாக வலுவடைந்து இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த புயலுக்கு ‘டிட்வா' என பெயரிடப்பட்டு உள்ளது. ஏமன் நாடு இந்த பெயரை பரிந்துரைத்து இருக்கிறது.

டிட்வா புயல் தற்போது சென்னைக்கு 530 கி.மீ தூரத்திலும், புதுச்சேரிக்கு 430 கி.மீ தெற்கு தென்கிழக்கு திசையிலும் நிலைகொண்டு இருக்கிறது. இந்நிலையில் 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த டிட்வா புயல் தற்போது 10 கி.மீ வேகத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது வருகிற 30-ந்தேதி அதிகாலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை அடையக்கூடும் என ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் மேலும் கடல் பகுதியிலும் பலத்த காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பேரிடர் மீட்புப் படையினர் விரைந்தனர்

வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த புயலால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே கணிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, இன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என்றும் ராமநாதபுரம், திருச்சி, அரியலூரி, சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

              

ராமேஸ்வரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பலத்த காற்று வீசுவதால் பாம்பன் பாலத்தில் ரெயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், நாகை, பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகத்தில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகளின் வேண்டுகோளை அடுத்து மீட்புப் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். ஒவ்வொரு தேசிய பேரிடர் மீட்புக் குழுவுக்கும் 30 பேர் வீதம் மொத்தம் எட்டு குழுக்கள் அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டுள்ளனர்.

புதுவைக்கு 60 பேர்

புதுச்சேரிக்கு இரண்டு குழுக்கள் (60 பேர்), தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக, இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மக்களைக் கண்டுபிடித்து காப்பாற்ற உதவும் வகையில் மோப்ப நாய்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் ராணி, மிக்கி, லைக்கா மற்றும் ராம்போ ஆகிய நான்கு பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நாய்கள் பேரிடர்களின் போது இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மக்களைக் கண்டுபிடித்து காப்பாற்றுவதற்கு மீட்புக் குழுவினருக்கு உதவுகின்றன.

பள்ளிகளுக்கு  அரைநாள் விடுமுறை

புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்து வருவதால், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மதியம் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை நாளை (சனிக்கிழமை) தமிழக வடமாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும். திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னையில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கரூர், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும்பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வட மாவட்டங்களில் சில இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழையும் பெய்யக்கூடும். அதிகனமழை வரை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையையும் (ரெட் அலர்ட்), மிக கனமழை வரை பதிவாகும் இடங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையையும், கனமழை வரை பெய்யும் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையையும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு, வானிலை ஆய்வு மையம் நிர்வாக ரீதியாக விடுத்து இருக்கிறது.

9 மாவட்டங்களில் கனமழை

அந்த வகையில் இன்றும், நாளையும் 9 மாவட்டங்களில் அதி கனமழை வரை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் இன்றும், நாளையும் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வரை வீசக்கூடும். ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை மறுநாள் வரை மணிக்கு 50 முதல் 80 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ராமேசுவரம்பாம்பன் பாலம் பகுதியில் மணிக்கு 60.07 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதால், ரெயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ராமேசுவரத்தில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு தாம்பரம் நோக்கி புறப்படும் ரெயில் மண்டபத்தில் இருந்து புறப்படும். இதேபோல், ராமேசுவரத்தில் இருந்து இன்று மாலை 5.50 மணிக்கு சென்னை எழும்பூர் நோக்கி புறப்படும் ரெயிலும் மண்டபத்தில் இருந்து புறப்படும் என்றுதெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வடதமிழகம் நோக்கி நகரும் ‘டிட்வா’ புயல்... 9 மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’

 

பதிவு: வெள்ளிக்கிழமை,  நவம்பர் 28, 2025, கார்த்திகை 12,  விசுவாவசு வருடம் 06-40: AM

சென்னை,

புயலால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே கணிக்கப்பட்டிருக்கிறது.

‘டிட்வா’ புயல்

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை 11.30 மணியளவில் புயலாக வலுவடைந்து இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

இந்த புயலுக்கு ‘டிட்வா’ என பெயரிடப்பட்டு உள்ளது. ஏமன் நாடு இந்த பெயரை பரிந்துரைத்து இருக்கிறது. புயல் தற்போது புதுச்சேரிக்கு தெற்கு - தென்கிழக்கே 520 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே 620 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டு இருக்கிறது. இது 13 கி.மீ வேகத்தில் நகர்கிறது.

இலங்கை அருகே உருவாகியுள்ள ‘டித்வா’ புயல் நவம்பர் 30-ம் தேதி அதிகாலை வட தமிழகத்தை நெருங்கும். இதன் காரணமாக தஞ்சை, நாகை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

‘டிட்வா’ புயலானது அடுத்து வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகிற 30-ந்தேதி அதிகாலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை அடையக்கூடும் என ஆய்வு மையம் கணித்துள்ளது.

மழைக்கான வாய்ப்பு அதிகம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த புயலால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே கணிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக் கூடும். இதுதவிர ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் மிக கனமழை

நாளை (சனிக்கிழமை) தமிழக வடமாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும்.

திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னையில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கரூர், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

ரெட் அலர்ட்

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வட மாவட்டங்களில் சில இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழையும் பெய்யக்கூடும்.

அதிகனமழை வரை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையையும், மிக கனமழை வரை பதிவாகும் இடங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையையும், கனமழை வரை பெய்யும் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையையும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு, வானிலை ஆய்வு மையம் நிர்வாக ரீதியாக விடுத்து இருக்கிறது. அந்த வகையில் இன்றும், நாளையும் 9 மாவட்டங்களில் அதி கனமழை வரை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை


கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் இன்றும், நாளையும் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வரை வீசக்கூடும். ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை மறுநாள் வரை மணிக்கு 50 முதல் 80 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Thursday, November 27, 2025

வடகிழக்கு பருவமழை - அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

 

பதிவு: வியாழக்கிழமை,  நவம்பர் 27, 2025, கார்த்திகை 11,  விசுவாவசு வருடம் 06-40: PM

சென்னை,

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இன்று (27.11.2025) தலைமைச் செயலகத்தில், வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தற்போது நிலவிவரும் வானிலை நிலவரம் குறித்தும், பேரிடர் மேலாண்மைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு முன்னெடுப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டமும் நடைபெற்றது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கையின் தெற்குப் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலவுகிறது என்றும், இதன் காரணமாக தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரின் தலைமையில் ஒரு ஆய்வு கூட்டமும், கூடுதல் தலைமைச் செயலர் / வருவாய் நிர்வாக ஆணையரின் தலைமையில் மூன்று கூட்டங்களும் நடைபெற்றன.

இப்பேரிடரை எதிர்கொள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சர் பல்வேறு துறை உயர் அலுவலர்களும் மற்றும் மாவட்ட நிருவாகமும் மேற்கொள்ள வேண்டிய ஆயத்த நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கினார்.

நிகழ்நேர பேரிடர் கண்காணிப்பிற்காக பொருத்தப்பட்ட தானியங்கி வானிலை கருவிகள், புயல் சீற்ற மாதிரி, மாநகராட்சிகளுக்கான வெப்ப அலை செயல்பாட்டுத் திட்டம், சென்னை நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு திட்டம், தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமையின் ஒருங்கிணைந்த வெள்ள கண்காணிப்பு மையம், தரம் மேம்படுத்தப்பட்ட மாநில அவசர கால செயல்பாட்டு மையம், பொதுமக்களுக்கான டி.என்.அலர்ட் (TN Alert) செயலி மற்றும் அரசு அலுவலர்களுக்கான டி.என். ஸ்மார்ட் 2.0 (TN Smart 2.0) இணையதளம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை திட்டம் 2025-க்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டது.

கடந்த 2021-2025 ஆம் ஆண்டுகளில் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு (SDRF) ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்த ரூ.5351.9 கோடியை விட தமிழ்நாடு அரசு கூடுதலாக ரூ. 9170.48 கோடி செலவு செய்துள்ளது என்றும், இந்த நிதியாண்டுக்கான (SDRF) 2வது தவணை ரூ. 661.20 கோடியும், (SDMF) 2-வது தவணை ரூ.165.30 கோடியும், ஆக மொத்தம் ரூ. 826.50 கோடி மத்திய அரசிடம் இருந்து வரவேண்டியுள்ளது என்றும் முதல்-அமைச்சரிடம் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் பேசும்போது;

அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும், குறிப்பாக, முதன்முறையாக தமிழ்நாட்டில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பேரிடர் மேலாண்மை சிறந்த முறையில் கையாளப்பட்டு வருவது பெருமையாக உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் 1,740 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பணிகள் குறித்தும் - மத்திய அரசு ஒதுக்கீடு செய்த தொகையைவிட, நாம் அதிகமாக பேரிடர் நிவாரணப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்து, பணிகள் மேற்கொண்டு வருவது குறித்தும், மக்கள் நன்மைக்காக அவர்களின் பாதுகாப்பில் அக்கறை கொண்டு இப்பணிகளை நாம் தொய்வில்லாமல் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மழைக்காலங்களில் அதிகமாக பாதிக்கப்படுவது ஏழை எளிய மக்கள்தான். அதனால், இவ்வரசு பொறுபேற்றப்பிறகு, பேரிடர் மேலாண்மையில் தனி கவனம் செலுத்தி, இயற்கை இடர்பாடுகளின்போது ஏற்படும் பாதிப்புகளை பெருமளவு குறைப்பதற்கு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருவதாகவும், அது அப்படியே தொடர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பே, ஆயத்த கூட்டங்களை நடத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருப்பதோடு, மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வுக் கூட்டங்களையும் தான் நடத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், அமைச்சர் பெருமக்களும், அரசு உயர் அதிகாரிகளும் களத்தில் ஆய்வு செய்துகொண்டு, தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்ததோடு, பேரிடர் மேலாண்மைக்குத் தேவையான நிதியை முறையாக ஒதுக்கீடு செய்து, முறையாக பயன்படுத்தி, மக்கள் பயன்பெறும் வகையில் அவர்களுடைய பணி அமைய வேண்டும் என்றும், காலநிலை மீள்தன்மைக்குத் தேவையான நடவடிக்கைகளையும் தொடர்ந்து, கவனத்துடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், அலுவலர்களை கேட்டுக் கொண்டார்.

வரும் 29 மற்றும் 30-ஆம் தேதிகளில், குறிப்பிட்ட சில மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் (Red Alert) என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளதை தொடர்ந்து, அனைத்து அரசு துறைகளும், குறிப்பாக - வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, மீன்வளத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து, மக்கள் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், தேவையான மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை உடனடியாக அனுப்பி வைத்திடவும், மீட்பு மற்றும் நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்து, மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அங்கு முறையாக வழங்குவதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

தலைமைச் செயலாளர் ஏற்கெனவே அறிவுறுத்தியபடி, அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்ததோடு, கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த எல்லா பேரிடர் நிகழ்வுகளையும் சிறப்பாக எதிர்கொண்டு, பணியாற்றிய அனைத்து அலுவலர்களையும் பாராட்டி, நன்றி தெரிவித்து, தொடர்ந்து இப்பணிகளை சிறப்பான வகையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், வருவாய் நிருவாக ஆணையர்/கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.சாய்குமார், எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பெ.அமுதா, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பி. சந்திரமோகன், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், நீர்வளத்துறை செயலாளர் ஜெ. ஜெயகாந்தன், நெடுஞ்சாலைத் துறை செயலாளர் ரா. செல்வராஜ், உயர்கல்வித் துறை செயலாளர் பொ. சங்கர், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் நா. சுப்பையன், பேரிடர் மேலாண்மை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் சீமா அகர்வால், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சௌ. டேவிட்சன் தேவாசிர்வாதம், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ.அருண், இ.கா.ப., மற்றும் காவல்துறை / அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றே உருவாகிறது ‘தித்வா’புயல்.. வட தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு..!

 

பதிவு: வியாழக்கிழமை,  நவம்பர் 27, 2025, கார்த்திகை 11,  விசுவாவசு வருடம் 11-40: AM

சென்னை,

அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாகக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மலாக்கா ஜலசந்தி பகுதியில் ‘சென்யார்' புயல் உருவானது. இது இந்தோனேசியா கடற்கரையை கடந்து வலுவிழந்து, அதன் ஆற்றல் மட்டும் தென் சீனக் கடல் பகுதிக்கு சென்றது. இந்த புயலினால் எந்த மழை வாய்ப்பும் நமக்கு இல்லை.

இந்நிலையில் இந்தோனேசியாவில் கரையைக் கடந்த சென்யார் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது என்றும், இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை அருகே அடுத்த 12 மணி நேரத்தில் புயலக உருவாகி வட தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி புயல் வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரா நோக்கி வரும் என்றும், புயலால் நாளை மறுநாள் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்றும் ஏமன் பரிந்துரைத்த 'தித்வா' என்ற பெயர் இந்த புயலுக்கு பெயரிடப்பட உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய புயலுக்கு பெயர் ‘தித்வா’

புயல் உருவான பிறகு, அதனை அடையாளம் காணுவதற்கு ஏதுவாக பெயர் சூட்டும் வழக்கம் இருக்கிறது. ஆனால் புயல் உருவான பின்னர் தான் அந்த பெயரை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும். ஆனால் இதற்காக 13 உறுப்பு நாடுகள் ஏற்கனவே பெயரை பட்டியலிட்டு வழங்கியிருக்கிறது.

அந்த அட்டவணையின்படி, தற்போது இலங்கை அருகே உருவாகும் புதிய புயலுக்கு ‘தித்வா' என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. இந்த பெயரை ஏமன் நாடு பரிந்துரைத்து இருக்கிறது. ‘தித்வா' என்ற பெயருக்கு அரபு மொழியில் ‘தீவு' என்ற அர்த்தம் சொல்லப்படுகிறது. ஏமனுக்கு அருகில் உள்ள ‘சோகோட்ரா' தீவின் ஒரு பகுதியின் பெயராக கூட இது இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

முன்னதாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு இலங்கை-இந்திய பெருங்கடல் பகுதிகளில் இருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தெற்கு இலங்கை மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று (வியாழக்கிழமை) காலைக்குள் வலுப்பெற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதன் தொடர்ச்சியாக நாளை (வெள்ளிக்கிழமை) காலைக்குள் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அன்றைய தினம் நள்ளிரவு வட இலங்கையையொட்டிய கடல் பகுதியில் புயலாகவும் மாற வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் 29-ந்தேதி (சனிக்கிழமை) காலை தமிழ்நாட்டின் டெல்டா கடற்கரைப் பகுதியை வந்தடையும் என்றும், டெல்டா பகுதிகளில் புயலின் முன் பகுதி நுழையும் அதாவது நிலப்பகுதிகளில் ஊடுருவும் என்றும், பின்னர் வடக்கு திசையில் சென்னை நோக்கி நகர்ந்து, 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு சென்னைக்கு அருகில் கரையை கடக்கவோ அல்லது கரைக்கு அருகில் நிலைக்கொள்ளவோ வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

இதன் காரணமாக காவிரி டெல்டா பகுதிகளில் நாளையில் இருந்து 30-ந்தேதி காலை வரையிலும், வருகிற 29-ந்தேதி காலையில் இருந்து அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி வரையில் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பதிவாக வாய்ப்பு இருப்பதாகவே ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மேற்சொன்ன 4 நாட்கள் பரவலாக கன முதல் மிக கனமழையும், புயலின் நகர்வை பொறுத்து பல இடங்களில் அதி கனமழை வரையும் பெய்வதற்கான சூழல் இருப்பதாகவே தற்போது கணிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த பகுதிகளில் மழைக்கான முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன் - தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்

 

பதிவு: வியாழக்கிழமை,  நவம்பர் 27, 2025, கார்த்திகை 11,  விசுவாவசு வருடம் 11-00: AM

சென்னை,

எம்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்த நிலையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார்.

அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக செயல்பட்டு வந்த செங்கோட்டையனுக்கும். கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கே.ஏ.செங்கோட்டையன் கோரிக்கை வைத்த நிலையில், கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட அவர், பிறகு கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். அவருடைய ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதற்கிடையே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடந்தது. இதில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார். அப்போது அவர், கட்சியை ஒருங்கிணைப்பது தொடர்பாக பேசியதாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். எனவே செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனால் அவர் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக செங்கோட்டையன் விஜய் தலைமையிலான த.வெ.க.வில் இணைய இருப்பதாக தகவல் பரவியது. இது தொடர்பான கேள்விக்கும் செங்கோட்டையன் பதில் அளிக்கவில்லை. அதேபோல் த.வெ.க. தரப்பில் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவிடம் கேட்கப்பட்டபோதும் அவரும் பதில் அளிக்காமல் மவுனம் காத்தார். இதனால் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைவது கிட்டத்தட்ட உறுதியானது.

அதனை உறுதிபடுத்தும் வகையில் செங்கோட்டையன் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அதற்காக அவர் நேற்று காலை 11 மணியளவில் தலைமைச்செயலகம் வந்தார். அவர், நேராக சபாநாயகர் அறைக்கு சென்றார். அங்கு தான் கையோடு கொண்டு வந்திருந்த ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து போட்டு, அதனை சபாநாயகர் அப்பாவுவிடம் வழங்கினார்.

பின்னர் வெளியே வந்த அவரை பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்க சூழ்ந்தனர். ஆனால் செங்கோட்டையன், ‘‘ஒரு நாள் மட்டும் பொறுத்திருங்கள்'' என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். அதனைத்தொடர்ந்து, செங்கோட்டையனை அமைச்சர் சேகர்பாபு சந்தித்து சுமார் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பு அவரை தி.மு.க.வுக்கு இழுக்கும் முயற்சி நடக்கிறதோ என்ற கேள்வியை எழ செய்தது. பின்னர் செங்கோட்டையன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். காரில் இருந்து அ.தி.மு.க. கொடியையும் அகற்றினார்.

இதற்கிடையே த.வெ.க. தலைவர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது மற்றொரு வீட்டுக்கு நேற்று மாலை வந்தார். அங்கு அவர் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவுடன் ஆலோசனை நடத்தினார்.

தி.மு.க.வா?, த.வெ.க.வா? என்ற கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று மாலை 4.36 மணிக்கு செங்கோட்டையன் பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் வீட்டுக்கு திடீரென்று சென்றார். அவரை ஆதவ் அர்ஜுனா தனது காரில் அழைத்துச் சென்றார். அங்கு சுமார் 2 மணி நேரம் விஜய்யுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். அவர்கள் இருவரும் மனம் விட்டு பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினர்.

இந்தநிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்திற்கு செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்தார். ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்சி ஆனந்த் ஆகியோர் அவரை வரவேற்றனர். பின்னர் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து தனது 50 -க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் முறைப்படி த.வெ.க.வில் இணைந்தார்.

நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி

இந்நிலையில் செங்கோட்டையனுக்கு த.வெ.க.வில் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 4 மாவட்டங்களுக்கு (கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி) அமைப்பு பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இன்று சென்னை அருகே பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்துக்கு வந்த செங்கோட்டையன், அங்கு அக்கட்சியின் தலைவர் விஜய்யை சந்தித்து பேசினார். பின்னர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன் அதிமுக முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட ஆதரவாளர்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

உதயநிதி ஸ்டாலின் 49-வது பிறந்தநாள் - அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் துணை முதல்-அமைச்சர் மரியாதை

 


 

 
 
பதிவு: வியாழக்கிழமை,  நவம்பர் 27, 2025, கார்த்திகை 11,  விசுவாவசு வருடம் 10-30: AM

சென்னை,

தந்தை பெரியார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தனது 49-வது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 

“ஆதிக்கவாதிகளிடம் குவிந்திருந்த அதிகாரத்தை சாமானிய மக்களிடம் கொண்டு சேர்த்த தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் நமது பிறந்த நாளில் மரியாதை செலுத்தினேன். பேரறிஞர் அண்ணா வழியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காப்போம்! மாநில உரிமைகளையும் - சமூக நீதியையும் நிலைநாட்டுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

கனிமொழி எம்.பி. வாழ்த்து:-

‘தமிழ்நாடு துணை முதல்-அமைச்சரும், கழக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது மக்கள் பணி சிறந்திட வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் எம்.பி. வாழ்த்து:-

‘தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர், எப்போதும் இனியவர், என் அன்பிற்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின் நீடு வாழ்க. பொன்றாப் புகழுடனும் குன்றாப் பெருமையோடும் நிலைத்து வளர்க’ என்று தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் தங்கம் அபகரிக்கப்பட்ட வழக்கில் நடிகர் ஜெயராமை கைது செய்ய விசாரணை அதிகாரிகள் முடிவு

 

பதிவு: வியாழக்கிழமை,  நவம்பர் 27, 2025, கார்த்திகை 11,  விசுவாவசு வருடம் 10-00: AM

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் அபகரிக்கப்பட்ட வழக்கில் நடிகர் ஜெயராமை கைது செய்ய விசாரணை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்ட தங்கத் தகடுகளில் இருந்து தங்கம் அபகரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கேரள ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. வெங்கடேஷ் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு தங்கத்தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் போற்றி மற்றும் தங்கத்தகடுகளை தாமிர தகடுகள் என்று சான்றிதழ் வழங்கிய தேவசம் போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு உள்பட 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சபரிமலையில் தங்கம் அபகரிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் தேவஸ்தான மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரனை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். ஆனால் கேரளாவில் அடுத்த மாதம் (டிசம்பர்) 9 மற்றும் 11-ந் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கு பிறகு அவரிடம் விசாரணை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அதற்கு முன்னதாக துவார பாலகர் சிலைகள் மற்றும் சபரிமலை கோவில் கதவு நிலைகளை தனது வீட்டில் வைத்து பூஜை நடத்த ஏற்பாடு செய்த நடிகர் ஜெயராமை கைது செய்து விசாரிக்க, விசாரணை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.


இந்த வழக்கில் ஏற்கனவே முன்னாள் தேவஸ்தான தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பத்மகுமார் கடந்த 20-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பத்மகுமாரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவுக்கு கோர்ட்டு நேற்று அனுமதி வழங்கியது. தங்கம் அபகரிப்பு விவகாரம் தொடர்பாக சபரிமலை அய்யப்பன் கோவிலின் மூத்த தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, கண்டரரு மோகனரு ஆகியோர் சிறப்பு விசாரணை குழு முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

சென்னையை நோக்கி நகரும் புதிய புயல்.! - இந்தோனேசியாவில் கரையைக் கடந்தது ‘சென்யார்’ புயல்

 

பதிவு: வியாழக்கிழமை,  நவம்பர் 27, 2025, கார்த்திகை 11,  விசுவாவசு வருடம் 06-00: AM

சென்னை,

29-ந்தேதி முதல் வட தமிழகத்துக்கு மிக கனமழைக்கான வாய்ப்பிருப்பதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

புதிய புயல்

மலாக்கா ஜலசந்தி பகுதியில் ‘சென்யார்' புயல் உருவானது. இது இந்தோனேசியா கடற்கரையை கடந்து வலுவிழந்து, அதன் ஆற்றல் மட்டும் தென் சீனக் கடல் பகுதிக்கு சென்றது. இந்த புயலினால் எந்த மழை வாய்ப்பும் நமக்கு இல்லை.

இதுதவிர, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு இலங்கை-இந்திய பெருங்கடல் பகுதிகளில் இருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தெற்கு இலங்கை மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று (வியாழக்கிழமை) காலைக்குள் வலுப்பெற உள்ளது.

இதன் தொடர்ச்சியாக நாளை (வெள்ளிக்கிழமை) காலைக்குள் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அன்றைய தினம் நள்ளிரவு வட இலங்கையையொட்டிய கடல் பகுதியில் புயலாகவும் மாற வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

சென்னைக்கு நோக்கி நகர்ந்து...

இதைத்தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் 29-ந்தேதி (சனிக்கிழமை) காலை தமிழ்நாட்டின் டெல்டா கடற்கரைப் பகுதியை வந்தடையும் என்றும், டெல்டா பகுதிகளில் புயலின் முன் பகுதி நுழையும் அதாவது நிலப்பகுதிகளில் ஊடுருவும் என்றும், பின்னர் வடக்கு திசையில் சென்னை நோக்கி நகர்ந்து, 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு சென்னைக்கு அருகில் கரையை கடக்கவோ அல்லது கரைக்கு அருகில் நிலைக்கொள்ளவோ வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

இதன் காரணமாக காவிரி டெல்டா பகுதிகளில் நாளையில் இருந்து 30-ந்தேதி காலை வரையிலும், வருகிற 29-ந்தேதி காலையில் இருந்து அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி வரையில் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பதிவாக வாய்ப்பு இருப்பதாகவே ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

வட தமிழக மாவட்டங்கள்

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மேற்சொன்ன 4 நாட்கள் பரவலாக கன முதல் மிக கனமழையும், புயலின் நகர்வை பொறுத்து பல இடங்களில் அதி கனமழை வரையும் பெய்வதற்கான சூழல் இருப்பதாகவே தற்போது கணிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த பகுதிகளில் மழைக்கான முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

புயல் கரைக்கு அருகே வந்து உருவாவதாலும், நிலப்பரப்பில் ஊடுருவல் இருப்பதாலும் காற்று பாதிப்பு இருக்காது. ஆனால் அதேநேரத்தில் மழைக்கான சூழல் அதிகம் இந்த நிகழ்வில் இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (நவம்பர் 27) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 29-ம் தேதி வரை சூறாவளிக்காற்று அதிகபட்சமாக 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

30-ம் தேதி வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று அதிகபட்சமாக 65 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 8 செமீ, ராமேஸ்வரத்தில் 6 செமீ, மண்டபத்தில் 5 செமீ, தங்கச்சிமடத்தில் 4 செமீ, வாலிநோக்கத்தில் 2 செமீ மழை பதிவாகியுள்ளது என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, November 26, 2025

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் - அடுத்த கட்ட நகர்வு என்ன..? த.வெ.க.வா?, தி.மு.க.வா?

 

பதிவு: புதன்கிழமை,  நவம்பர் 26, 2025, கார்த்திகை 10,  விசுவாவசு வருடம் 05-00: PM

சென்னை,

9 முறை எம்.எல்.ஏ. ஆக இருந்தவர் - எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன் - சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தார் - நாளை த.வெ.க.வில் இணைகிறார்?

முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்தார். விஜய் முன்னிலையில் நாளை த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அண்ணா தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். முதல்முறை சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதன் பிறகு 8 முறை கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அண்ணா தி.மு.க. ஆட்சி காலத்தில் வனத்துறை, போக்குவரத்து துறை, வேளாண்மை துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, வருவாய் துறை, பள்ளி கல்வித்துறை என பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக அவர் செயல்பட்டு வந்த நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் ஓபிஎஸ் டிடிவி தினகரன் உள்ளிட்டோரை கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும் என்று கூறிய செங்கோட்டையன், அதற்கு கட்சி தலைமைக்கு காலக்கெடு விதித்தார். இதனால் அவரது கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன. ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் தேவர் குருபூஜை விழாவில் செங்கோட்டையன் கலந்து கொண்டதைத் தொடர்ந்து அண்ணா தி.மு.க.வில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அவருடைய ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

த.வெ.க.வில் இணைகிறார்

இந்த நிலையில், அமைதி காத்து வந்த கே.ஏ.செங்கோட்டையன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நாளை (வியாழக்கிழமை) சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகம் செல்லும் அவர், விஜய் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில், இன்று காலை 11.45 மணிக்கு சென்னை தலைமைச்செயலகம் வந்த கே.ஏ.செங்கோட்டையன், சபாநாயகர் மு.அப்பாவுவை சந்தித்து தனது கோபி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடித்ததை வழங்கினார். அதனை சபாநாயகர் அப்பாவு பெற்றுக் கொண்டார். அடுத்த கட்ட முடிவு பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, ''இன்னும் ஒரு நாள் பொறுத்திருங்கள்,'' என்று கூறினார்.

ஏற்கனவே, ஆலங்குளம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் ராஜினாமா செய்துவிட்டு, தி.மு.க.வில் இணைந்த நிலையில், தற்போது கே.ஏ.செங்கோட்டையனும் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செங்கோட்டையன் – சேகர் பாபு சந்திப்பு

இந்த நிலையில், கே.ஏ.செங்கோட்டையன் தலைமைச் செயலகத்துக்கு வருவதை கேள்விப்பட்ட அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அவரை சபாநாயகர் அப்பாவுவின் அறைக்கே சென்று சந்தித்து பேசினார். சுமார் 5 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நடைபெற்றது. ஏற்கனவே, அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வில் இணைந்த பி.கே.சேகர்பாபு, தற்போது கே.ஏ.செங்கோட்டையனையும் தி.மு.க.வுக்கு இழுக்க பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

 

பேச்சு வார்த்தைக்குப்பிறகு வெளியே வந்த கே.ஏ.செங்கோட்டையனை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு பல்வேறுகேள்விகளை எழுப்பினார்கள். ஆனால் யாருடைய கேள்விக்கும் பதிலளிக்காமல் கையெடுத்து கும்பிட்டபடி காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

த.வெ.க.வா?, தி.மு.க.வா? என்பது கே.ஏ.செங்கோட்டையன் எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது. செங்கோட்டையன் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதும், அவரது அடுத்த கட்ட நகர்வு என்ன..? என்பதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஐம்பது ஆண்டுகால உழைப்பிற்கு அதிமுகவின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி பரிசு கொடுத்துள்ளனர்” என வருத்தம் தெரிவித்திருந்தார்.

‘தி.மு.க. அரசின் சட்டங்கள் வெற்றியைப் பெறுவது தான் வரலாறு’ - முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

 

பதிவு: புதன்கிழமை,  நவம்பர் 26, 2025, கார்த்திகை 10,  விசுவாவசு வருடம் 04-00: PM

ஈரோடு, 

மொடக்குறிச்சியில் மாவீரன் பொல்லான் உருவச்சிலை, அரங்கம் திறப்பு விழா - ‘தி.மு.க. அரசின் சட்டங்கள் வெற்றியைப் பெறுவது தான் வரலாறு’:ஸ்டாலின் பெருமிதம் - ‘லட்சக்கணக்கான அருந்ததியர் இன மக்கள் வாழ்க்கையில் ஒளியேற்றியது தி.மு.க. என்ற கொள்கை பேரியக்கம்’

‘தி.மு.க. அரசின் சட்டம் எப்போதும் வெற்றியைப் பெறுவது தான் வரலாறு’ என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.

லட்சக்கணக்கான அருந்ததியர் இன மக்கள் வாழ்க்கையில் ஒளியேற்றியது தி.மு.க. என்ற கொள்கை பேரியக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு மாவட்டம், ஜெயராமபுரம், மொடக்குறிச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லானின் முழு திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை திறந்து வைத்து பேசியதாவது:–

பூலித்தேவன் - வீரபாண்டிய கட்டபொம்மன் - தீரன் சின்னமலை - மருதிருவர் - வீரமங்கை வேலு நாச்சியார் - மாவீரன் பொல்லான் என்று, நம் தமிழ் மண் ஈன்றெடுத்த மாவீரர்கள் அத்தனை பேரும் நம்முடைய மண் - மொழி - மானம் ஆகியவற்றை காத்திருக்கக்கூடியவர்கள். இடைவிடாமல் அதற்காக போராடிக் கொண்டிருக்கவேண்டும் என்று இன்றைக்கு நமக்கெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டிருக்கக்கூடியவர்கள்.

சொன்னால், சொன்னதை செய்பவன்தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் – அதற்கு சாட்சியாக சொல்லவேண்டும் என்று சொன்னால், இந்தமாவீரன் பொல்லான் சிலைதான் அதற்கு சாட்சி!

2019-ல் நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நேரத்தில், மகுடஞ்சாவடியில் நடைபெற்ற ஆதித்தமிழர் பேரவையின் வெள்ளி விழா – அதை முன்னின்று நடத்தியவர் நம்முடைய அதியமான். அதில் பங்கேற்று, சிறப்பித்து பெருமை சேர்த்தவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய ஈஸ்வரன்.

மாவீரன் பொல்லானுக்கு சிலையும், மணிமண்டபமும் அமைப்போம் என்று அந்த நிகழ்ச்சியில் நான்உறுதியளித்தேன். இன்றைக்கு அதை உங்கள் முன்னால் திறந்து வைத்திருக்கிறேன். இன்று திரையில் பொல்லானின் வாழ்க்கை வரலாற்றை சிறு குறிப்பாக எடுத்து வெளியிட்ட நேரத்தில் அதை சுட்டிக்காட்டினார்கள்.

பவானிப்போர் - ஓடாநிலைப் போர் - அரச்சலூர் போர் என்று அந்நியரான ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு, தீரன் சின்னமலையின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்தவர்தான் மாவீரன் பொல்லான்!

நினைவுச் சின்னம் கோரிக்கை நிறைவேறியது...

பொல்லானின் வீரத்தை கண்டு, சினம் கொண்ட ஆங்கிலேயப் படை தளபதி கர்னல் ஹாரிஸ் தலைமையிலான படையால், மாவீரன் பொல்லான் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய தியாகத்தைப் போற்ற அவருடைய வீரத்தை காலத்துக்கும் எடுத்துச் சொல்ல, இப்படியொரு நினைவுச் சின்னம் வேண்டும் என்று பல ஆண்டுகாலமாக இருந்த வந்த கோரிக்கை, இப்போது திராவிட மாடல் அரசின் மூலமாக அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது!

இந்த பெருமையான தருணத்தில், ஒரு முக்கியமான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். ஏன் உங்களின் பலருக்குக் கூட அது நினைவிருக்கும் என்று கருதுகிறேன். கடந்த ஜூன் மாதம் ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில், ஒரு செய்தி வந்திருந்தது. அதை படித்ததுமே, எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்தச் செய்தி என்னவென்றால் அருந்ததியினர் உள் ஒதுக்கீடு சட்டம், அந்த மக்களுக்கு எத்தகைய ஒளிவிளக்காக திகழ்கிறது என்பதைப் பற்றி தி இந்து பத்திரிகையில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். அதாவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்களைப் பெற்று, ஆதாரத்துடன் இந்த செய்தியை வெளியிட்டிருந்தார்கள்.

அந்தச் செய்தியில், 2009-ல் 193 அருந்ததியினர் மாணவர்கள் பொறியியல் படித்துக் கொண்டிருந்த நிலைமாறி, இந்த ஆண்டு 3 ஆயிரத்து 944 மாணவர்கள் பொறியியல் படிக்கிறார்கள் என்றும்,

2023-–24-ஆம் ஆண்டில், 193 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிக்கிறார்கள் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்கள்!

இதில் எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட பெருமை என்னவென்றால், உங்களில் பலருக்கும் தெரியும். இந்த உள் ஒதுக்கீடு சட்டத்தை கலைஞர் நிறைவேற்ற முடிவு செய்தார் – முடிவு செய்து, அது சட்டமன்றத்தில் சட்ட மசோதவை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் – ஆனால், திடீரென்று அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதனால் அவரால் எழுந்து நடமாட முடியாத நிலை அன்றைக்கு ஏற்பட்டது. அன்றைக்கு காலையில் “உடனே புறப்பட்டு மருத்துவமனைக்கு வா” என்று எனக்கு தொலைபேசியிலிருந்து அழைப்பு வருகிறது. வந்தவுடன் என்னை அழைத்து சொன்னார், நான் ஒரு சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் இன்றைக்கு நிறைவேற்றவேண்டும் – அறிமுகப்படுத்த வேண்டும் – என்னை மருத்துவர்கள் செல்வதற்கு அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். அதனால், நீ சென்று என்னுடைய சார்பில் அந்த மசோதாவை அறிமுகப்படுத்து என்று எனக்கு உத்தரவிட்டார். அந்த மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்கின்ற வாய்ப்பு இந்த அடியேன் ஸ்டாலினுக்கு கிடைத்தது என்று இன்றைக்கு நான் பெருமைப்படுகிறேன்!

சமூகநீதிப் பாதையை கட்டமைப்பதில்...

ஒரு சமூகத்தையே முன்னேற்று வதற்கான அந்த சமூகநீதிப் பாதையை கட்டமைப்பதில் என்னுடைய பங்கும் இருந்திருக்கிறது என்பதை எண்ணி இன்றைக்கும் மகிழ்ச்சி அடைகிறேன். அதுதான் எனக்குக் கிடைத்த பெருமை!

அதுமட்டுமல்ல, அந்தச் செய்தியில், இன்னொரு முக்கியமான விஷயத்தையும் தி இந்து பத்திரிகையில்எழுதியிருந்தார்கள். அது என்னவென்றால், “தி.மு.க. அரசு எந்தவொரு சட்டத்தை நிறைவேற்றும் போதும், அதற்குரிய காரணங்களை முறையாக ஆராய்ந்து, தரவுகளை எல்லாம் தொகுத்து, ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்டு குழு அமைத்து, அவர்களுடைய பரிந்துரைகளை எல்லாம் பெற்று, சாமானிய மக்களுக்கு உரிய பயன்களை உண்மையிலேயே அளித்து வருவதால், தி.மு.க. அரசின் சட்டம் எப்போதும் வெற்றியைப் பெற்று வருவது தான் வரலாறு!” என்று பாராட்டியிருந்தார்கள்!

லட்சக்கணக்கான அருந்ததியர் இன மக்கள் வாழ்க்கையில் ஒளியேற்றியதால் இந்தப் பாராட்டுதான், தி.மு.க. என்ற கொள்கை பேரியக்கத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய அடையாளம்!

எல்லார்க்கும் எல்லாம் என்ற நம்முடைய இலட்சியத்தை அடைய வேண்டும். பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், சமூக நிலையையும் உயர்த்த வேண்டும் என்று திராவிட மாடல் அரசின் சார்பில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

அது அத்தனையும் இங்கே பட்டியிலிட முடியாது – நேரமில்லை – அடுத்த நிகழ்ச்சிக்கு நாங்கள் சென்றாக வேண்டும். அதை பட்டியலிட்டால், இன்றைக்கு முழுவதும் போதாது. எனவே, அருந்ததியர் இன மக்களுக்காக செய்யப்பட்டுள்ள சிலவற்றை மட்டும் தான் அதுவும் தலைப்புச் செய்திகளாக உங்களிடத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, தேனி மற்றும் கரூர் மாவட்டங்களில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக 182 கோடி ரூபாயில் 26 விடுதிகள், - 74 கோடி ரூபாயில், 107 பள்ளிக் கட்டடங்கள், 20 கோடி ரூபாயில், 26 சமுதாயக் கூடங்கள், - 134 கோடி ரூபாயில், 131 கிராம அறிவுசார் மையங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில், 29 மாணவர்களுக்கு 10 கோடியே 30 லட்சம் ரூபாயை உதவித்தொகையாக வழங்கியிருக்கிறோம்!

முழுநேர முனைவர் ஆராய்ச்சி படிப்பிற்காக 329 மாணவர்களுக்கு 3 கோடியே 29 இலட்சம் ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்கியிருக்கிறோம்! - போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகையை 3 இலட்சத்து 69 ஆயிரத்து 550 பேருக்கும், - ஃப்ரி-மெட்ரிக் கல்வி உதவித்தொகையை 5 இலட்சத்து 42 ஆயிரத்தி 396 மாணவர்களுக்கும் வழங்கியிருக்கிறோம்!

தூய்மைப் பணியாளர்களுக்கான நலவாரியத்தை திருத்தி அமைத்திருக்கிறோம்!

2021-ல், 18 ஆயிரத்து 225 பேர் மட்டுமே இருந்த இந்த வாரியத்தில், நம்முடைய அரசு சிறப்பாக செயல்பட்டதால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், மூன்று லட்சம் பேர் உறுப்பினர்களாக வாரியத்தில் சேர்ந்திருக்கிறார்கள்! இவர்களுக்கு எல்லாம் 11 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது!

அதுமட்டுமல்ல, அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கியிருக்கிறோம். சுகாதார அங்காடிகள் அமைத்திருக்கிறோம். இந்த வாரியத்துக்கு ஆண்டுதோறும் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறோம்.

கடந்த ஆகஸ்ட் 14-ஆம் நாள் ஆறு முக்கிய சிறப்புத் திட்டங்களை அறிவித்திருக்கிறோம். இப்படி என்னால் தொடர்ந்து பட்டியலிட்டுக் கொண்டிருக்க முடியும்!

உண்மையான வளர்ச்சி

இதையெல்லாம் செய்வது, எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்! எல்லோரும் சமமாக வாழுகின்ற சமூகம் உருவாக வேண்டும்! அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் உண்மையான வளர்ச்சி என்பதற்காகத்தான்! இந்த லட்சியத்தோடு நடைபோடும் திராவிட மாடல் அரசுக்கு அடுத்து அமையவுள்ள திராவிட மாடல் 2.0 அரசுக்கும், நீங்கள் எல்லோரும் ஆதரவாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்க மாவீரன் பொல்லான்! வாழ்க அவரது புகழ்!

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், மதிவேந்தன், கயல்விழிசெல்வராஜ், நாடாளுமன்றஉறுப்பினர்கள் அந்தியூர் செல்வராஜ், பிரகாஷ், மாதேஸ்வரன், சட்டமன்றஉறுப்பினர்கள் ஈஸ்வரன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, வெங்கடாசலம், சந்திரகுமார், வாரியத்தின் தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, துணைத் தலைவர் கனிமொழி, மாவட்ட கலெக்டர் கந்தசாமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் அதியமான் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Rajini Gaang Movie Team Press Meet at Coimbatore | all set to release on...

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழகத்தில் எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு?

 

பதிவு: புதன்கிழமை,  நவம்பர் 26, 2025, கார்த்திகை 10,  விசுவாவசு வருடம் 06-00: AM

சென்னை,

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில், இன்று ( நவம்பர் 26) இலங்கை அருகேயும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், தமிழக கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு

மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நிகோபார் தீவுகளில் இருந்து தென்கிழக்கே 870 கிமீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறக்கூடும்.

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் – இலங்கை பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, தெற்கு இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மாறுநாள் (நவம்பர் 27) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

இதன் காரணமாக  இன்றும் (நவம்பர் 26), நாளையும் (நவம்பர்27) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

28-ம் தேதி கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் ஓரிரு இடங்களிலும், 29-ம் தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், 30-ம் தேதி வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், டிச.1-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், தமிழகத்தில் இன்று (நவம்பர் 26) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், 27-ம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களிலும், 28-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

29-ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

30-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கா்க்ராயில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (நவம்பர் 26) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கில் தலா 17 செமீ, காக்காச்சியில் 14 செமீ, மாஞ்சோலையில் 13 செமீ, கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரியில் 8 செமீ, திருவாரூரில் 7 செமீ, கடலூர் மாவட்டம் புவனகிரி, புதுக்கோட்டை மாவட்டம் மிமிசல், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, நீடாமங்கலத்தில் தலா 6 செமீ, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். 27 முதல் 29-ம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tuesday, November 25, 2025

கோவையில் ரூ.208 கோடியில் செம்மொழி பூங்கா - மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

 

பதிவு:  செவ்வாய்க்கிழமை,  நவம்பர் 25, 2025, கார்த்திகை 09,  விசுவாவசு வருடம் 08-00: AM

கோவை,

கோவையில் தொழில்முனைவோர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடுகிறார்.

கோவையில் கடந்த 2010-ம் ஆண்டு நடந்த உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி கோவை காந்திபுரம் மத்திய சிறை வளாகத்தில் 165 ஏக்கரில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

2011-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. 2021-ம் ஆண்டு தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் செம்மொழி பூங்கா திட்டத்துக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டது.

முதல்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208½ கோடியில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டது. இந்த பணிகளை கடந்த 2023-ம் ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தற்போது அந்த பணிகள் நிறைவடைந்து உள்ளன.

இதைத்தொடர்ந்து கோவை மக்களின் பொழுதுபோக்கு தலமாக விளங்க உள்ள செம்மொழி பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கிறார். இதற்காக அவர் இன்று காலை 10.05 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்டு 11.15 மணிக்கு கோவை விமான நிலையத்துக்கு வருகிறார்.

கோவை விமான நிலையத்துக்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

வரவேற்பு முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் 11.45 மணிக்கு காந்திபுரம் வருகிறார். பின்னர் செம்மொழி பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து செம்மொழி பூங்காவில் அமைக்கப்பட்டு உள்ள செம்மொழி வனம், மூலிகை தோட்டம், புதிர்தோட்டம், ஆரோக்கிய வனம், நீர்வனம், பாறை வனம், பூஞ்சோலை, மலைக்குன்று உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அவர் பார்வையிடுகிறார். பின்னர் அங்கு உள்ள நீர்வீழ்ச்சி அரங்கில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளையும் கண்டுரசிக்கிறார்.

பின்னர் செம்மொழி பூங்காவில் உள்ள ஆடிட்டோரியத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் கோவையை சேர்ந்த தொழில் அதிபர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் என முக்கிய பிரமுகர்கள் 150 பேருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார். 

இதனை முடித்துவிட்டு அவர், காரில் புறப்பட்டு மதியம் 1 மணிக்கு கோவை-அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

இதைத்தொடர்ந்து மாலை 5 மணியளவில் அங்கு தமிழ்நாடு தொழில்துறை சார்பில் டி.என்.ரைசிங் என்ற நிகழ்ச்சி நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். 

அப்போது அவரது முன்னிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட உள்ளது. முதல்-அமைச்சர் கோவை வருகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

Featured post

கரூர் நெரிசல் வழக்கில் தவறு நடக்கிறது - பதில் கேட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு - விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம்

பதிவு:  சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025, கார்த்திகை 27,  விசுவாவசு வருடம் 01-40: AM புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்...